கொழும்பு, மட்டக்குளி புனித மரியாள் ஆலயத்திற்கு கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இரு நாள் விஜயம் மேற்கொண்டு பங்குத் தந்தை மற்றும் ஆலய பங்குமக்களுடன் தனது நேரத்தைக் கழித்துள்ளார்.

மேய்ப்புப்பணி பங்குத்தரிசிப்பின் நோக்கத்தில் இவ் வருடத்தில் 16 ஆலயங்களுக்கு விஜயம் மேற்கொண்டு ஆலயங்களின் பங்குத் தந்தைமார், ஆலய பங்கு மக்கள் மற்றும் ஆலயங்களிலுள்ள ஏனைய சபை அங்கத்தவர்களை சந்திக்கும் நோக்கிலேயே கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் இவ் விஜயம் அமைந்துள்ளது.

இவ் விஜயமானது அவரது திட்டத்தின் அடிப்படையில் 2 ஆவது ஆலயத்திற்கான விஜயமாக அமைந்துள்ளதுடன் தனது முதலாவது மேய்ப்புப்பணி பங்குத் தரிசிப்பிற்கான பயணத்தை தனது சொந்தப்பங்கான மேதரை புனித அந்திரேயர் ஆலயத்தில் இருந்து  ஆரம்பித்தார்.

கடந்த 11 ஆம் மற்றும் 12 ஆம் திகதிகளில் கொழும்பு, மட்டக்குளி புனித மரியாள் ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, பங்குத் தந்தை, பங்கு மேய்ப்புப்பணிச் சபை அங்கத்தவர்கள், வட்டாரத் தலைவர்கள் ஏனைய சபைகளின் தலைவர்கள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில், நேற்று 12 ஆம் திகதி ஞயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு மும்மொழிகளிலும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை  திருப்பலி ஒப்புக்கொடுத்தார்.

இதையடுத்து ஆலய வளாகத்தில் லூர்து அன்னைக்கு கெபி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அவர் கலந்து கொண்டார்.

இந் நிகழ்வுகளை ஆலயத்தின் பங்குத் தந்தை அருட் தந்தை லொயிட் பெர்னாண்டோ ( அ.ம.தி.) ஒழுங்கு படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.