நா.தனுஜா)
இலங்கை அரசாங்கம் ஸ்தாபிப்பதற்குத் திட்டமிட்டிருக்கும் உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும் உத்தேசம் தமக்கு இல்லை எனத் தெரிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், நம்பிக்கையைக் கட்டியெழுப்பல் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தலுக்கான ஆலோசனை திட்டத்தையே ஜப்பான் மற்றும் தென்னாபிரிக்காவுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்ததாக சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் நடைபெற்ற சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் பெபியன் மொலினா, சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இலங்கையுடன் பேணிவரும் தொடர்புகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். விசேடமாக இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கும், இமயமலை பிரகடனத்துக்கும் சுவிட்ஸர்லாந்து வழங்கிய ஆதரவு மற்றும் தமிழர் விவகாரத்தில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பன பற்றி அவர் வினவியிருந்தார். அக்கேள்விகளுக்கு இவ்வருட அமர்வில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டியிருந்தது. அதன்படி இக்கேள்விகளுக்கு நேற்று முன்தினம் அந்நாட்டு அரசாங்கம் வழங்கியிருக்கும் பதிலில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
சுவிட்ஸர்லாந்து அரசாங்கமானது இலங்கையில் சமாதான கொள்கைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அதேபோன்று தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் மற்றும் சிறைச்சாலைகளில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கு அவசியமான சட்ட உதவிகளை வழங்குவதற்குத் தேவையான ஒத்துழைப்புக்கள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுவருகின்றன. கருத்து வெளிப்பாட்டுச்சுதந்நிரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை ஊக்குவிப்பதை இலக்காகக்கொண்டு இயங்கிவரும் அமைப்புக்களுடனும் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இணைந்து பணியாற்றி வருகின்றது.
அடுத்ததாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு சுவிட்ஸர்லாந்து ஆதரவளித்தது. அதுமாத்திரமன்றி அதன் அறிக்கைகளில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை அரசாங்கத்தைத் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்திருப்பதுடன், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் முறையற்ற பிரயோகத்தையும கண்டித்திருக்கின்றது. அத்தோடு சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் இலங்கையுடனான இருதரப்பு தொடர்பைப் பேணும்போது இவ்விடயங்கள் பற்றி தொடர்ந்து சுட்டிக்காட்டியிருக்கின்றது.
மேலும் இலங்கை அரசாங்கம் உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதை சுவிட்ஸர்லாந்து அவதானித்துள்ளது. இப்போது இந்த ஆணைக்குழுவுக்கு ஆதரவளிக்கும் உத்தேசம் சுவிட்சர்லாந்து அரசாங்கத்துக்கு இல்லை. இருப்பினும் ஜப்பான் தூதரகம் மற்றும் தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஓரங்கமாக நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கும், நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்குமான ஆலோசனைத்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சுவிட்ஸர்லாந்து தூதரகத்தினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.
அடுத்ததாக புலம்பெயர் தமிழர்களுக்கும், பௌத்த தேரர்களுக்கும் இடையில் கலந்துரையாடலொன்றை உருவாக்கக்கூடியவகையில் "போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு" எனும் கட்டமைப்புக்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி அளித்ததுடன், அது "இமயமலை பிரகடனம்" உருவாவதற்கு வழிகோலியது. இருப்பினும் கலந்துரையாடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தல் என்பது சம்பந்தப்பட்ட இருதரப்புக்களினதும் பொறுப்பாகும்.
அதேபோன்று கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து புகலிடக்கோரிக்கைகளும் ஒவ்வொரு விவகாரங்களாகப் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு 61 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதுடன், 21 பேர் தமது சுயவிருப்பின்பேரில் சுவிட்ஸர்லாந்தைவிட்டு வெளியேறினர் என்று அப்பதிலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM