நீங்கள் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக்கூடாது !

23 Feb, 2024 | 11:46 AM
image

நாளாந்தம் வித்தியாசமான பிரச்சினைகளுக்கு மக்கள் முகங்கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் தற்போது இலங்கை மக்கள் கடும்வெப்பத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்பட்டுள்ளனர்.

அதிகரித்த வெப்பநிலையை இலங்கை வாழ் மக்கள் கடந்த இரு வருடங்களாக பங்குனி, சித்திரை மாதங்களில் அனுபவித்து வந்தாலும் இம்முறை வெப்பத்தின் தாக்கத்தை இவ்வாண்டின் ஆரம்பத்திலேயே உணர ஆரம்பித்துள்ளனர்.

வெப்பநிலை அதிகரிப்புக் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் துறைசார் அதிகாரிகளும் ஊடகங்கள் வாயிலாக தகவல்களை வழங்கிய வண்ணமுள்ளனர்.

அந்தவகையில், கொழும்பு, கம்பஹா, புத்தளம், குருநாகல், அம்பாந்தோட்டை, அநுராதபுரம், பொலன்னறுவை, மற்றும் திருகோணமலை ஆகிய 8 மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண் மனித உடலால் தாங்கிக் கொள்ளக்கூடிய வெப்பத்தை விட அதிக உஷ்ணம் எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்த நிலைமை எதிர்வரும் சில மாதங்களுக்கு தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை பிரிவுக்கான பிரதிப்பணிப்பாளர் அஜித் விஜேமான்ன கூறுகிறார்.

காலநிலை மாற்றத்திற்குள் இலங்கை

இலங்கையின் சில பகுதிகளில் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காலநிலை மாற்றமா? அல்லது வளி மாசுபாடு அதிகரிப்பா? என்று நோக்கும் போது,

கடந்த பத்தாண்டுகளில் இலங்கையின் சராசரி வெப்பநிலை 0.5 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்துள்ளது. இது உலக சராசரி வெப்பநிலை அதிகரிப்பை விட அதிகம் என்று கூறப்படுகின்றது. அத்துடன் கடல் மட்ட உயர்வு, கடுமையான மழை, வறட்சி போன்ற காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் இலங்கையை கடுமையாக பாதிக்கின்றன. மேலும் வெப்பநிலை அதிகரிப்பு, காற்று மாசுபாடு ஆகியவை இணைந்து இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான வெப்பத்தை ஏற்படுத்துகின்றன.

காலநிலை மாற்றத்தின் காரணமாக, இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும், வானிலைக்குழப்பங்கள் காணப்படுகின்றது. மத்திய மலைநாடு, மற்றும் தென்மேற்குப் பகுதிகளில் அதிகளவான நிலச்சரிவு அனர்த்தங்களை ஏற்படுத்துவதோடு, ஆறுகள் பெருக்கெடுப்பதற்கும் வகைசெய்கின்றது. வடக்கு, வடமேற்கு பகுதிகளில் குறிப்பிட்டதொரு காலத்தில் அதிகளவான வெப்பநிலை பதிவாகின்றது. இது சமநிலையைக் குலைத்துள்ளது. குறிப்பாக, வடக்கில் மாரி,கோடை காலங்களை வரையறுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதிகயுச்ச வறட்சியும், அதற்கு நிகராக வெள்ள அனர்த்தமும் காணப்படுகின்றது. இதனால் முறையான முகாமை செய்யமுடியாத நிலைமை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் காற்றின் அளவு குறைந்துள்ளமையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் வெப்பநிலை சில மாதங்களுக்கு தொடரும் எனவும் அதிக வெப்பத்திலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளதாகவும் அத் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை பிரிவுக்கான பிரதிப்பணிப்பாளர் அஜித் விஜேமான்ன குறிப்பிட்டார்.

வெப்பநிலையின் தாக்கம்

நாட்டில் வெப்பநிலை அதிகரிப்பானது பொது மக்களை எவ்வாறு பாதிக்கிறது? இதிலிருந்து எப்படி பாதுகாத்துக்கொள்ளலாம்? என்றும் ஒவ்வொரு தனிமனிதனும் எதிர்கால சந்ததியிரின் வாழ்க்கை குறித்தும் சிந்திக்க வேண்டிய தேவைப்பாடு தற்போது எழுந்துள்ளது.

சூரிய வெப்ப அதிகரிப்பால் மயக்கம், நீரிழப்பு, வெப்ப சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படலாம். அத்துடன் உழைப்புத் திறன் குறைந்து, விவசாயம் போன்ற துறைகள் பாதிக்கப்பட வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் போன்றோர் அதிக பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகும்.

அதாவது மனித உடலினால் உணரப்படுகின்ற இந்த வெப்ப நிலையானது ஈரப்பதனுக்கும் அதிகூடிய வெப்ப நிலைக்கும் இடையிலான தொடர்பாகும். வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுகின்றபோது, வெளியிடங்களில் வேலைசெய்வோர் நிழல் சார்ந்த இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்க வேண்டும். வீட்டில் இருக்கும் நோயாளிகளை அடிக்கடி கவனத்தில் கொள்ள வேண்டும். திறந்த வாகனங்களில் பிள்ளைகளை வெளியில் கூட்டிச்செல்ல வேண்டாம். அடிக்கடி நீராகாரம் பருக வேண்டுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் கூறுகிறார்.

வெப்பமான காலநிலை காரணமாக மனித உடலில் இருந்து அதிகளவிலான வியர்வை வெளியேறும். இதன்போது வியர்வையுடன் நீர் மற்றும் உப்பும் வெளியேறுகிறது. இதன்போது களைப்பு ஏற்படலாம். அதோடு சோடியம் குறைபாடும் ஏற்படுகிறது. இதனால் மயக்கம் ஏற்படலாம். உடல் வலி, தலைவலி, வாந்தி, நித்திரை மயக்கம், நித்திரையின்மை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். மேலும், தோல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே சிறுவர்களை காலை மற்றும் மாலை வேளைகளில் நீரில் நனைக்க வேண்டும் என்கிறார் வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னெச்சரிக்கை பிரிவுக்கான பிரதிப்பணிப்பாளர் அஜித் விஜேமான்ன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இவ்வாறான நிலையில், நாம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள வேண்டும், அதிக வெயில் நேரத்தில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். நீரை அதிகம் அருந்த வேண்டும். தளர்ச்சியான ஆடைகளை அணிய வேண்டும் என்பதுடன் வீடுகளில் மரங்களை வளர்த்து நிழலைப் பெருக்குவதுடன் மின்சாரத்தை சிக்கனமாகவும் பயன்படுத்த வேண்டும். மக்கள் அசமந்தப் போக்கின்றி சிந்தித்து செயலாற்ற வேண்டும். 

அதிக வெப்பத்திலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள அதிகளவு நீரை அருந்துதல், அதிக சோர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல்,  வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிதல் மற்றும் நிழலான இடங்களில் தங்கியிருத்தல் போன்ற அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்பதுடன் நீர், இளநீர், ஜீவனி மற்றும் கஞ்சி போன்ற நீராகரங்களை அருந்த வேண்டும் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறினார்.

உலகவெப்பமயமாதல் 

இதேவேளை, உலக வெப்பமயமாதல் அதிகரிப்பானது, கடந்த பத்தாண்டுகளில் உலக சராசரி வெப்பநிலை 0.8 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. காடுகளை அழித்தல், தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, வாகனப் போக்குவரத்து போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன. உலக வெப்பமயமாதலில் மனித நடத்தையின் பங்கு மிகப்பெரும் தாக்கத்தை  செலுத்தியுள்ளதை இந்த காலநிலை மாற்றங்களின் ஊடாக நாம் உணர்ந்துகொள்ளலாம்.

நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமானதான தூதுவர் எரிக்சொல்ஹெய்முக்கு ‘ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகர்’ என்ற புதிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புதிய பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் அவர் , “காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை மோசமாக பாதிக்கப்படும் ஆபத்துள்ளது. வடக்கின் உயர் வலயங்கள் மேலும் வறண்டதாகவும் ஈரமான பகுதிகள் மேலும் ஈரப்பதமானதாகவும் காணப்படலாம். மண்சரிவு உட்பட மோசமான காலநிலை மாற்றத்தின் விளைவுகளால் எதிர்காலத்தில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கலாம்” என்று இந்தியாவின் ஐ.ஏ.என்.எஸ். இணையத்தளத்திற்கு வழங்கியுள்ள செவ்வியின் போது எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியுடன் தான் காலநிலையில் மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தது.  அண்மைக்காலமாக இதர செயற்பாடுகளை விடவும், மனித செயற்பாடுகள் காரணமாகவே காலநிலையில் அதிகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. காலநிலை மாற்றத்தை குறைத்துக்கொள்ள மனிதன் நிலையான எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது அவசியமாகின்றது. கழிவு மேலாண்மை, காடுகளைப் பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன் தனிநபர் மட்டத்திலும் சேமிப்பு, மறுசுழற்சி போன்ற பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மனித நடத்தையின் தாக்கம்

இந்து சமுத்திரத்தில் ஒரு அயன மண்டல தீவாக விளங்குவதால், உலகளாவிய காலநிலை அபாயக்குறியீட்டின் மூலம் தீவிர வானிலை நிகழ்வுகளின் அபாயத்தில் உள்ள முதல் பத்து நாடுகளில் இலங்கை 7ஆவது இடத்தில் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால், காலநிலை மாற்றங்களினால் ஏற்படும் ஆபத்துகளினால் அதிகளவில் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில்  இலங்கையும் உள்வாங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகளான சுற்றுலா, மீன்பிடி, தேயிலைச் செய்கை, விவசாயம் ஆகியன காலநிலை மாற்றங்களிற்கு அதிகளவான தூண்டற்பேற்றைக் கொண்டுள்ளதோடு, பருவகால பிறழ்வுகள், மழைவீழ்ச்சி வேறுபாடுகளினாலும் பாதிக்கப்படும் நிலைமைகள் உள்ளன. 

2016,2017 ஆகிய ஆண்டுகளில் நீடித்த வறட்சியினாலும், பரவலான வெள்ளத்தினாலும் இலங்கையின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. பருவகால மழைவீழ்ச்சிப் போக்கு, சூழலியல் வலயங்களின் மாற்றம் என்பவற்றில் நீண்ட கால மாற்றங்கள் ஏற்படுவதாக காலநிலை மாற்ற எதிர்வுகூறல்கள் தெரிவிக்கின்றன

இலங்கையின் வெப்பநிலை அதிகரிப்பு என்பது கவலைக்குரிய விடயமாகும். காலநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கும் அதன் தாக்கங்களைக் குறைப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை துறைசார் அதிகாரிகள் எடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைச் செய்வதன் மூலம் இயற்கையைப் பாதுகாத்து, சூழலைப் பேணலாம். 

வீ. பிரியதர்சன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13