தொழிலாளர்களை தேடிச் செல்லும் பிரதிநிதிகள்!

22 Feb, 2024 | 05:37 PM
image

சி.சி.என்

தொழிலாளர்களின் வாழ்வாதார தேவைகளில் பிரதானமானது அவர்களின் வருமானம். அவர்களின் நாட்சம்பளத்தில் அது தங்கியுள்ளது. சம்பள விவகாரம் குறித்து கடந்த ஆண்டின்  இறுதியிலிருந்து அரசாங்கத்தின் பக்கமிருக்கும் மலையக பிரதிநிதிகளும், தொழில் அமைச்சரும்  ஏன் ஜனாதிபதியும் கூட பேசி வருகின்றனர். இன்று மாதங்கள் மூன்றை நெருங்கும் தறுவாயிலும் அது குறித்து எந்த சாதகமான பதில்களை வழங்காது கம்பனிகள் இழுத்தடித்துக்கொண்டிருக்க மலையக பிரதிநிதிகளும் வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து வருவதைப் போன்று அறிக்கை விட்டு வருகின்றனர்.

ஜனாதிபதியின் ஆலோசகராக விளங்கும் இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் வடிவேல் சுரேஷ் எம்.பி, சம்பள விவகாரத்தில் தொழில் அமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும் என அவருக்கு ஆலோசனை கூறுகின்றார். அப்படியானால் அவருக்கு ஜனாதிபதியின் ஆலோசகர் பொறுப்பு எதற்கு?

மறுபக்கம் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இந்த விவகாரம்  குறித்து உறுதியான எந்த தகவல்களையும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமலுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை தொடர்பில் சபை ஒத்தி வைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கடந்த வாரம் உரையாற்றியிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமான், தொழிலாளர்களின் காணி உரிமை தொடர்பில் பேசியிருந்தாரே ஒழிய அவர்களின் சம்பள விவகாரம் தொடர்பில் வாய் திறக்கவில்லை. 

காணி  உரிமை தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது கம்பனிகள் தொழிலாளர்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் ஜீவன் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். 

ஆகவே தொழிலாளர்களுக்கு சம்பளத்தை அதிகரித்து தருவதற்கும் நிச்சயமாக அவர்கள் மறுப்பு தெரிவித்திருப்பர். ஆனால் காணி உரித்து வழங்குவதிலும் நிச்சயமற்ற தன்மைகள் காணப்படுவதை உணரலாம். 

நல்லாட்சி அரசாங்கத்தில்  பசுமை பூமி என்ற பெயரில் அமைந்த திட்டத்தின் கீழ் ஏழு பேர்ச் காணியில் வீடுகள் அமைக்கப்பட்டு காணி உறுதிப்பத்திரங்கள் என்ற பெயரில் ஆவணங்கள் வழங்கப்பட்டன. பின்பு அவை அசல் காணி உறுதிபத்திரங்கள் அல்ல என்ற சர்ச்சைகள் எழுந்தன. அந்த சர்ச்சை இன்னும் நீடிக்கின்றது. இதுவரை பசுமை பூமி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணி உறுதிகளை வங்கியில் வைத்து எவரும் கடன் பெற்றிருக்கின்றனரா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை. பசுமை என்றால் பச்சை நிறம் என்ற அர்த்தமும் உள்ளது. ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுதந்திர கட்சி இணைந்த நல்லாட்சியில் இந்தப்பெயரில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதே போன்று தற்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காலத்தில் பெற்றுக்கொடுக்கப்படும் காணி உரித்து திட்டத்துக்கு செளமிய பூமி திட்டம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆகவே காணி உரித்துகள் என்று வழங்கும் போது அது தமது முயற்சியால்  முன்னெடுக்கப்பட்டது என்பதை வரலாறு கூற வேண்டும் என இ.தொ.காவினர் நினைக்கின்றனர் போலும். 

ஆனால் எல்லா திட்டங்களிலும் தமது கட்சி அல்லது தொழிற்சங்கத்தின் பெயர்கள் பொறிக்கப்படல் வேண்டும் என நினைக்கும் மலையக கட்சி பிரதிநிதிகள், தேர்தல் காலங்களிலும் மே தினங்களிலும் மாத்திரமே மக்களை நினைத்து வருகின்றனர்.

கூட்டு ஒப்பந்தம் இல்லாது போனதன் பின்னர் இந்த ஞாபக மறதிகள் அதிகரித்துள்ளன. சந்தா பணம் அறவிடுதல் ஸ்தம்பிதமடைந்துள்ளதால்  முன்னரை போன்று தொழிற்சங்க காரியாலயங்களுக்கு தொழிலாளர்கள் வருவது மிகவும் குறைந்து விட்டது. சில பிரதேசங்களில்   காரியாலயங்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. இருக்கும் காரியாலயங்கள் பராமரிப்பு இன்மையால் அவை காடு மண்டி கிடக்கின்றன. இந்நிலையில்  தொழிலாளர்கள் தம்மை மறந்து விடக்கூடாது என அவர்களைத்  தேடி தோட்டங்களுக்குள்  பிரதிநிதிகள் செல்ல வேண்டிய நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. அதுவும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு நேரடியாக சென்றால்  சம்பள விடயம் மற்றும் காணி உரித்து தொடர்பில் அவர்கள் கேள்வி எழுப்பி விடுவார்கள் என்ற காரணங்களினால் தமது ஆதரவாளர்களை வைத்து ஏதாவது விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அதற்கு அதிதியாக கலந்து கொள்வது போன்று தோட்டங்களுக்குச் சென்று வருகின்றார்கள் பிரதிநிதிகள்.

இது ஒரு புறம் இருக்க தோட்டத் தொழிலாளர்களுக்கு இப்போது தான் அநீதி இழைக்கப்பட்டு வருவது போன்று சில பிரதிநிதிகள் தொழில் பிணக்குகளைப் பற்றி பேச்சு வார்த்தை நடத்த தொழில் திணைக்களத்துக்கு தொழிலாளர்களை அழைத்துச் சென்று வருகின்றனர். அரசாங்கத்துக்கு சொந்தமான தோட்டங்கள் வெளியாருக்கு விற்கப்பட்டு வருகின்றமை, அத்தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதிமற்றும் நம்பிக்கை நிதிகளை தொழிலாளர்களுக்கு வைப்பிலிடாமல் வருடக்கணக்கில் இழுத்தடிப்பு செய்து வருகின்றமை தொடர்பில் இவர்கள் வாய் திறப்பதேயில்லை. 

தொழிலாளர்களின் அடிப்படை பிரச்சினைகளை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்து விட்டு சில பிரதிநிதிகள் செய்து வரும் கண்டு துடைப்பு நாடகங்களைக் கண்டு தொழிலாளர்களே மனதுக்குள் சிரித்துக்கொள்கின்றனர். கூட்டு ஒப்பந்தம் முடிவுக்கு வந்து மூன்று வருடங்களாகின்றன. சம்பள உயர்வு தொடர்பில் காலம் கடத்தப்பட்டு வருகின்றது. அரசாங்கம் தான் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் என மலையகத்தின் அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் அமைதி காத்து வருகின்றனர். அநேகமாக ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிப்பு வரை இந்த நாடகங்கள் தொடரும் என்று தான் கூற வேண்டியுள்ளது.      

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13