(நெவில் அன்தனி)
இலங்கைக்கு எதிராக ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (21) இரவு நடைபெற்ற மூன்றாவதும் கடைசியுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 ஓட்டங்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது.
இலங்கையின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது, அந்த ஓவரில் கமிந்து மெண்டிஸினால் 14 ஓட்டங்களையே பெறமுடிந்தது. ஒரு வைட் கிடைக்க ஆப்கானிஸ்தான் 3 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இலங்கைக்கான விஜயத்தில் ஒற்றை டெஸ்ட் போட்டியிலும், 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் முழுமையாகத் தொல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் தனது கடைசி முயற்சியில் வெற்றியீட்டிய ஆறுதலுடன் நாடு திரும்புகிறது.
எவ்வாறாயினும் சர்வதேச ரி 20 கிரிக்கெட் தொடரையும் 2 - 1 எனற ஆட்டக் கணக்கில் இலங்கை தனதாக்கிக்கொண்டது.
ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 210 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
இந்தப் போட்டியில் களத்தடுப்பில் விட்ட தவறுகளும் பெத்தும் நிஸ்ஸன்க உபாதைக்குள்ளாகி ஓய்வுபெற நேரிட்டதும் இலங்கையின் தோல்விக்கு காரணங்களாக அமைந்தன.
பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 34 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
அணியில் மீண்டும் இடம்பிடித்த குசல் பெரேரா 2 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு ஓட்டம் பெறாமல் நடையைக் கட்டினார்.
மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பெத்தும் நிஸ்ஸன்க 53ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது இடது காலில் உபாதைக்குள்ளாகி கடும் சிரமத்தை எதிர்கொண்டார்.
அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அவர் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார். ஆனால் 60 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அவர் மீண்டும் உபாதைக்குள்ளாகி ஓய்வு பெற்றார்.
அணித் தலைவர் வனிந்து ஹசரங்க முதல் இரண்டு போட்டிகளில் போன்று அதிரடியில் இறங்க முயற்சித்தபோதிலும் இம்முறை அது பலிக்கவில்லை. அவர் 13 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
சதீர சமரவிக்ரமவும் கமிந்து மெண்டிஸும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 39 பந்துகளில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சமரவிக்ரம 23 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஏஞ்சலோ மெத்யூஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
எனினும் கமிந்து மெண்டிஸ் தனது மீள்வருகையில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இலங்கைக்கு உற்சாகத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அவருடன் சேர்ந்து அதிரடியை ஆரம்பித்த தசுன் ஷானக்க, இலங்கையின் வெற்றிக்கு 7 பந்துகளில் 23 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 13 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.
அடுத்து களம் புகுந்த அக்கில தனஞ்சய பவுண்டறி அடித்து வெற்றிக்கு தேவைப்பட்ட எண்ணிக்கையை 19 ஓட்டங்களாகக் குறைந்தார். ஆனால், கடைசி ஓவரில் 3 பந்துகள் வீணடிக்கப்பட்டதால் ஆப்கானிஸ்தான் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது.
கமிந்து மெண்டிஸ் 39 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 65 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் மொஹமத் நபி 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 209 ஓட்டங்களைக் குவித்தது.
சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி ஒன்றில் இலங்கைக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். அத்துடன் இலங்கைக்கு எதிராக ரி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் 200 ஓட்டங்களைக் கடந்ததும் இதுவே முதல் தடவையாகும்.
ஷார்ஜாவில் 2022ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் 6 விக்கெட்களை இழந்து பெற்ற 175 ஓட்டங்களே இலங்கைக்கு எதிராக அதன் அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இதற்கு முன்னர் இருந்தது.
ஆரம்ப வீரர்களான ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி 44 பந்துகளில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
இலங்கைக்கு எதிரான ரி20 போட்டி ஒன்றில் ஆப்கானிஸ்தானின் அதிசிறந்த ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டமாகவும் இது பதிவானது.
ஹசரத்துல்லா ஸஸாய் 22 பந்துகளில் 45 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததைத் தொடர்ந்து அணித் தலைவர் இப்ராஹிம் ஸத்ரான் 10 ஓட்டங்களுடன் களம் விட்டு வெளியேறினார்.
மொத்த எண்ணிக்கை 141 ஓட்டங்களாக இருந்தபோது ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆட்டம் இழந்தார். அவர் 43 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்களை விட அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 31 ஓட்டங்களைப் பெற்றார்.
மொஹமத் நபி, மொஹமத் இஷாக் ஆகிய இருவரும் தலா 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் அக்கில தனஞ்சய 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ரஹ்மானுல்லா குர்பாஸ்.
தொடர்நாயகன்: வனிந்து ஹசரங்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM