ரொபட் அன்டனி
சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை செய்துகொண்டுள்ள விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் கீழ் இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைகள் மார்ச் மாதம் நடுப் பகுதியில் நடைபெறவுள்ள நிலையில் அந்த மீளாய்வின்போது இலங்கை சர்வதேச கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. அதாவது முதல் காலாண்டுக்குள் சர்வதேச கடன் மறுசீரமைப்பு செய்து கொள்ளப்பட வேண்டும். அது சவாலாக மாறிவருகின்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘’நாடு அண்மைக்காலமாக எதிர்கொண்டுள்ள மிகவும் சவாலான பொருளாதாரப் பிரச்சினை கடன் மறுசீரமைப்பாகும்" என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருக்கிறார்.
முன்னேற்றம் இல்லாவிடின்….
காரணம் இரண்டாவது மீளாய்வின்போது கடன் மறுசீரமைப்பு குறித்த முன்னேற்றம் இல்லாவிடின் நாணய நிதியத்தின் மூன்றாவது தவணைப் பணத்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது இருதரப்பு கடன்களை மறுசீரமைப்பு செய்வதில் பிரச்சினைகளில்லை. ஆனால் தனியார் கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு செய்வதிலேயே சிக்கல் இருப்பதாக தெரிகின்றது. இருதரப்பு கடன் வழங்குனர்களான இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த நாடுகளும் சாதகமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. ஆனால், இலங்கைக்கு பிணைமுறி கடன்களை வழங்கியுள்ள சர்வதேச தனியார் கடன் வழங்குனர்களுடன் கடன் மறுசீரமைப்பை செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்தவகையில் மார்ச் மாதம் நடுப்பகுதியில் ஆரம்பமாகவுள்ள நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு நடவடிக்கைகள் மிக தீர்க்கமானதாக காணப்படுகின்றன.
எவ்வளவு சர்வதேச கடன்கள்
இலங்கை சர்வதேசத்துக்கு செலுத்த வேண்டிய கிட்டத்தட்ட 46 பில்லியன் டொலர்களில் (தொகை மாறலாம்) 16 பில்லியன் டொலர்கள் பிணைமுறிகள் மூலம் பெறப்பட்ட கடன்களாகும். அதாவது நாடுகளினால் வழங்கப்படுகின்ற இரு தரப்பு, உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவை வழங்குகின்ற பல்தரப்பு கடன்களுக்கு மேலதிகமாக இலங்கை சர்வதேச தனியார் கடன் வழங்குநர்களிடம் பிணைமுறிகளை வழங்கி கடன்களை பெற்றுக்கொள்ளும். இவற்றை இறையாண்மை பிணைமுறி கடன்கள் என்று கூறுவார்கள். அதன்படி இலங்கை கிட்டத்தட்ட 16 பில்லியன் டொலர்கள் அளவில் இந்த பிணைமுறி கடன்களாக பெற்றுள்ளது. ஒவ்வொரு காலப்பகுதியிலும் இந்த கடன்கள் முதிர்ச்சியடைகின்றன. அதனடிப்படையில் எவ்வாறு சர்வதேச தனியார் கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பை செய்வது என்பதே இங்கு தீர்க்கமானதாக அமைந்துள்ளது.
தனியார் கடன் வழங்குநர்களின் யோசனைகள்
சர்வதேச தனியார் கடன் வழங்குநர்கள் கடந்த வருடம் இறுதிப் பகுதியில் முக்கிய யோசனைகளை முன்வைத்திருந்தனர். அதாவது இந்த 16 பில்லியன் டொலர் கடன்களில் 12 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு 11 பிணைமுறிகள் ஊடாகவே வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அனைத்து பிணைமுறிகளையும் மீளப்பெற்றுவிட்டு புதிதாக 10 பிணைமுறிகளை வழங்குவதற்கு குறிப்பிட்ட கடன் வழங்கும் குழு யோசனை முன்வைத்திருக்கிறது.
2027ஆம் ஆண்டிலிருந்து 2036ஆம் ஆண்டு வரை முதிர்ச்சியடையும் வகையில் இந்த புதிய பிணைமுறி கடன்கள் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியிலிருந்து 2036 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இந்த புதிய 10 பிணைமுறிகள் இலங்கைக்கு வழங்கப்படவிருக்கின்றன. அதனூடாக இலங்கைக்கு 20 வீத கடன் ரத்து வழங்கப்பட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வட்டி குறைக்கப்படுமா?
இந்த கடன் ரத்து மட்டுமின்றி வட்டி வீதத்திலும் குறைப்புகளை செய்வதற்கு இந்த பிணைமுறி கடன் வழங்கிய குழு முன்வந்திருக்கின்றது. அதாவது இலங்கை அடுத்த சில வருடங்களில் தனது மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியை 93 முதல் 96.4 வீதம் வரை வளர்ச்சியடைய செய்தால் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் 2.5 வீதத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று மொத்த தேசிய உற்பத்தி பெறுமதியானது 93 பில்லியன் டொலர்களுக்கு இருந்தால் 4.5 வீத வட்டி குறைப்பு செய்யப்பட யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதி 89.5 வீதமாக குறையும் பட்சத்தில் ஆறு வீத வட்டி குறைப்பை செய்வதற்கு இந்த பிணைமுறி கடன் வழங்கிய குழு யோசனை முன்வைத்துள்ளது.
இலங்கை மொத்த தேசிய உற்பத்தி எவ்வாறுள்ளது?
இலங்கையின் தற்போதைய மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதியானது 75 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றன. 2019ஆம் ஆண்டளவில் அது 80 பில்லியன் டொலர்களாகவே இருந்தது. ஆனால் 2022ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டு நாட்டில் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டதால் மொத்த தேசிய உற்பத்தி குறைவடைந்தது. மொத்த தேசிய உற்பத்தியின் பெறுமதி 75 பில்லியன்களாக குறைவடைந்திருக்கிறது. கடந்த காலங்களில் நெருக்கடி காரணமாக பொருளாதாரம் சுருக்கமடைந்தது. தற்போது மீண்டும் மொத்த தேசிய உற்பத்தி அதிகரித்து வருகின்றது.
மத்திய வங்கியானது வங்கி கட்டமைப்பின் வட்டி விகிதங்களை அதிகரித்ததன் காரணமாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதற்கு பதிலாக சுருக்கமடைந்தது. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களினால் வர்த்தக செயற்பாடுகளை கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.
அதனால் அடுத்த சில வருடங்களில் 93 பில்லியன் டொலர்கள் என்றளவில் மொத்த தேசிய உற்பத்தி இலக்கை நோக்கி பயணிக்க முடியுமா என்பது கேள்வியாகும். எனினும் தற்போது வட்டி வீதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. எனவே எதிர்கால நிலைமைகள் எவ்வாறு அமையும் என்பதனை எதிர்வுகூற முடியாதுள்ளது.
அரசாங்கம் ஏற்குமா?
அதனால் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தனியார் கடன் வழங்குநர்களின் யோசனையை அரசாங்கம் ஏற்குமா என்பது தீர்க்கமானாதாகவுள்ளது. இதில் இரண்டு பக்கங்கள் உள்ளன. மொத்த தேசிய உற்பத்தி குறைவடைந்தால் கடன் மறுசீரமைப்பில் நிவாரணங்கள் கிடைக்கும். ஆனால் மொத்த தேசிய உற்பத்தி குறைவடைவது நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதாக அமையாது.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வருடம் விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தில் கைச்சாத்திட்டது. அதன்படி 48 மாதங்களில் 2.9 பில்லியன் டொலர்களை தவணை அடிப்படையில் இலங்கைக்கு வழங்குவதற்கு நாணய நிதியம் முன்வந்தது. ஆனால் ஒவ்வொரு தவணைப் பணத்தையும் வழங்குவதற்கு முன்பதாக நாணய நிதியம் இலங்கையில் மீளாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அது திருப்திகரமாக அமையும் பட்சத்தில் மட்டுமே நாணய நிதியத்தின் தவணைப் பணம் விடுவிக்கப்படும்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் நாணய நிதியம் இலங்கையில் முதலாவது மீளாய்வை மேற்கொண்டது. அதன் முடிவில் அறிக்கை வெளியிட்ட நாணய நிதியம் அரசாங்க வருமானத்தை அதிகரிப்பதிலும் கடன் மறுசீரமைப்பை செய்வதிலும் இலங்கை மேலும் முன்னேற்றத்தை வெளிக்காட்ட வேண்டியுள்ளது என்று பரிந்துரை முன்வைத்திருந்தது.
தீர்க்கமான காலப்பகுதி
எனவேதான் தற்போது சர்வதேச கடன் மறுசீரமைப்பு தீர்க்கமானதாக அமைந்திருக்கிறது. சர்வதேச கடன் மறுசீரமைப்பு முடிவடைந்ததும் இலங்கை வெளிநாட்டு கடன்களை மீள் செலுத்த வேண்டும். 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியையடுத்து இலங்கை வெளிநாட்டு கடன்களை செலுத்துவதை இடை நிறுத்தியது. தற்போது கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டவுடன் மீண்டும் கடன்களை மீள் செலுத்த வேண்டி வரும். அதாவது தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட வருடம் ஒன்றுக்கு ஐந்து பில்லியன் அல்லது ஆறு பில்லியன் டொலர்களை கடனாக செலுத்த வேண்டும். ஆனால் கடன் மறுசீரமைப்பை செய்துகொண்டனதன் பின்னர் வருடம் ஒன்றுக்கு மூன்று பில்லியன் அல்லது நான்கு மில்லியன் டொலர்களை கடன் தவணையாக செலுத்த வேண்டி வரும்.
அப்போது மேலும் டொலர் உள்வருகையை அதிகரித்துக் கொள்ள வேண்டிய தேவை காணப்படும். தற்போது கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டதும் எவ்வளவு கடன் தவணை தொகையை வருடந்தோறும் செலுத்த வேண்டும் என்பது தெரியவரும். இவை எல்லாவற்றுக்கும் கடன் மறுசீரமைப்பை விரைவாக செய்து கொள்வது அவசியமாகின்றது. அதாவது இலங்கை நெருக்கடியில் இருந்து வெளியே வருவதற்கும், இலங்கை வங்குரோத்து நாடு என்ற நிலையிலிருந்து மீள்வதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தை தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கும் தவணைப் பணத்தை உரிய நேரத்தில் பெறுவதற்கும் சர்வதேச கடன்களை தொடர்ந்து பெற்றுக் கொள்வதற்கும் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தியை திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் கடன் மறுசீரமைப்பு என்பது மிக முக்கியத்துவமிக்கதாக அமைகிறது. அதனை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கின்றது என்பதிலேயே அனைத்தும் தங்கியிருக்கின்றன.
மற்றுமொரு நெருக்கடியை தவிர்ப்பது?
நாட்டில் மீண்டும் 2022ஐ போன்ற ஒரு டொலர் நெருக்கடி ஏற்படாத வகையில் கடன் மறுசீரமைப்பு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். மக்கள் இன்னும் கடுமையான வாழ்க்கை செலவு சவால்களை சந்திக்கின்றனர். தற்போது ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்றது. அதேபோன்று உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கப்படுவது அவசியமாகும். இவற்றின் அடிப்படையில் பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணிக்க முடியும். எனவே சர்வதேச கடன் மறுசீரமைப்பு மிக இன்றியமையாததாகவும் தீர்க்கமானதாகவும் காணப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM