இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்தியாவுடன் இணைய மறுப்பு தெரிவித்த ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத்தை, அப்போதைய துணை பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான குழுவினர்... அதிரடியாக ஈடுபட்டு இந்தியாவுடன் இணைத்த வரலாறை தழுவி 'ரஜாக்கர்' எனும் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இத்திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் ஒன்றாம் திகதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் படமாளிகைகளில் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் யதா சத்ய நாராயணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ரஜாக்கர்' எனும் திரைப்படத்தில் பொபி சிம்ஹா, வேதிகா, ஜோன் விஜய், 'தலைவாசல்' விஜய், சரத் ரவி, ராஜ் அருண், அனுஸ்ரீயா திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரமேஷ் குஷேந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பீம்ஸ் சிஸிரோலியோ இசையமைத்திருக்கிறார். வரலாற்றில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சமர்வீர் கிரியேஷன்ஸ் எல்எல்பி எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் குடூர் நாராயண் ரெட்டி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் நடைபெற்றது. இதன் போது சிறப்பு விருந்தினர்களாக பங்கு பற்றுவார்கள் என அறிவிக்கப்பட்ட நடிகர் எஸ். ஜே. சூர்யா, இயக்குநர் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பங்குபற்றவில்லை. அதிதியாக வருகை தந்திருந்த இயக்குநர் பி. எஸ். மித்ரன், படத்தின் முன்னோட்டம் திரையிடப்பட்டவுடன் அதை பார்த்துவிட்டு வெளியேறி விட்டார். அதனால் படக் குழுவினர் மட்டுமே பங்கு பற்றினார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இந்தியாவிற்கு ஓகஸ்ட் 15 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. இந்தியாவில் உள்ள ஐநூறுக்கும் மேற்பட்ட மன்னர்கள் ஆட்சி செய்த சமஸ்தானங்கள் பேச்சுவார்த்தையின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டன. அப்போது ஹைதராபாத் நிஜாம் மன்னரின் ஆளுகையில் இருந்த பகுதிகள் இந்தியாவுடன் இணைய மறுப்பு தெரிவித்து, தனி சுதந்திர நாடாக அறிவிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தது.
இதற்கு பாகிஸ்தான் உதவி செய்து கொண்டிருந்தது. அப்போது ஹைதராபாத் நிஜாமின் எல்லைக்குட்பட்ட பகுதிகளை பாதுகாக்க ரஜாக்கர் எனும் தனியார் பாதுகாப்பு படையினர் பணிக்கு அமர்த்தபட்டனர். இவர்கள் அங்குள்ள மக்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற வேண்டும் என வற்புறுத்தினர். ஏராளமான பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர்.
அதன் பிறகு அப்போதைய துணை பிரதமரும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமையிலான குழுவினர் அதிரடி வீர தீர சாகச செயலில் ஈடுபட்டு ஓராண்டிற்கு பிறகு ஹைதராபாத் நிஜாமை பணிய வைத்து, இந்தியாவுடன் இணைத்தனர். இந்த வரலாற்றை எதிர்கால தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். படத்தின் தயாரிப்பாளரின் தாத்தா இந்த போராட்டத்தின் போது வீர மரணம் அடைந்தவர். இசையமைப்பாளரின் முன்னோரும் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர். அதனால் உணர்வுபூர்வமாக இந்த படைப்பை உருவாக்கி இருக்கிறோம்'' என்றார்.
இதனிடையே 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' , 'தி கேரளா ஸ்டோரி' ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து... பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாம்- இந்து மத மாற்ற அரசியலை பின்னணியாகக் கொண்ட 'ரஜாக்கர் மூவ்மெண்ட்' எனப்படும் இந்த திரைப்படமும், மத்தியில் ஆளும் பாஜக அரசின் மறைமுகமான ஆதரவுடன் வெளியாகி வெற்றி பெறும் என்பது உறுதி என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM