(எம்.மனோசித்ரா)
தமிழக மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு முயற்சித்த போதிலும், அந்த தரப்பிலிருந்து எவ்வித பிரதிபலிப்புக்களும் கிடைக்கவில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
எனவே வடக்கு மீனவர்களும், வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும் தென்னிலங்கைக்குச் சென்று அங்குள்ள அரசியல் தலைவர்களை சந்தித்து, இந்த நிலைவரம் தொடர்பில் நேரடியாக எடுத்துரைத்தால் தீர்வொன்று கிடைக்கும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடற்றொழில் சட்டங்களை திருத்தியமைத்து புதிய சட்ட வரைபை முன்கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம். 1979ஆம் ஆண்டு முதல் இன்று வரை 10 சட்ட திருத்தங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன. அவை தவிர நூற்றுக்கும் மேற்பட்ட ஒழுங்கு விதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தையும் தொகுத்து புதிய சட்டமாக உருவாக்கி அதன் ஊடாக கடற்றொழிலை முகாமைத்துவம் செய்து கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அந்நிய செலாவணி வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் நாடளாவிய ரீதியிலுள்ள 15 கடற்றொழில் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிற்சங்கள், கூட்டுறவு அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து அதன் பின்னர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளோம்.
இந்த புதிய சட்டம் இருப்பதைப் பாதுகாத்து அவற்றை மேலும் முன்னோக்கிக் கொண்டு செல்லும் வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் தூங்குவதைப் போன்று நடிப்பவர்கள் தமது சுயலாப அரசியலுக்காக சில கருத்துக்களை முன்வைக்கக் கூடும். அவ்வாறானவர்களுடன் பேசுவதற்கும் அந்த சவால்களை எதிர்கொள்வதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம்.
கடற்றொழில் துறையில் உள்நாட்டு தனியார் முதலீடுகளையும், சர்வதேச முதலீடுகளையும் ஊக்குவிக்கும் முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டுள்ளோம். மேலும் மீனவர்களுக்கான ஓய்வூதியம், காப்புறுதி மற்றும் சேமிப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம்.
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் இலங்கை மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இது தொடர்பில் இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு எமது வெளிவிவகார அமைச்சின் ஊடாக முயற்சிகளை முன்னெடுத்தும், அந்த தரப்பிலிருந்து எவ்வித அறிகுறிகளும் தென்படுவதாக இல்லை.
இந்த பிரச்சினையை சட்டத்துக்கு உட்பட்ட வகையிலும் இராஜதந்திர ரீதியிலும் அணுக வேண்டியுள்ளது. 2018ஆம் ஆண்டு கடற்றொழில் சட்டத்தில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய முதல்முறை கைது செய்யப்படுவர்களை விடுவிக்க முடியும் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்டால் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என்றும் படகுகளை அரசுடைமையாக்க வேண்டும் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் 3 சந்தர்ப்பங்களிலும், துறைசார் அதிகாரிகள் மட்டத்தில் 5 சந்தர்ப்பங்களிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், காத்திரமான முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை.
எனவே வடக்கு மீனவர்கள் தென்னிந்தியாவுக்குச் சென்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர் ரங்கசுவாமி ஆகியோரை சந்தித்து நிலைமையை எடுத்துரைக்க வேண்டும்.
தமிழக விசைப்படகு உரிமையாளர்களுக்கு இந்தியா அனுமதி வழங்கினால் அவர்கள் கச்சதீவுக்கு வருவதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.
அத்தோடு வடக்கிலுள்ள அரசியல்வாதிகளும் தென்னிந்திய அரசியல் தலைவர்களை சந்தித்து நிலைமையை எடுத்துரைத்தால் தீர்வு கிடைக்கக் கூடும்.
உண்மையில் உறங்குபவர்களை எழுப்ப முடியும். உறங்குவதைப் போன்று பாசாங்கு செய்பவர்களை எழுப்ப முடியாது. கடற்றொழில் சட்டம் பற்றிய அறியாமை இன்றியே அது தொடர்பில் முரண்பாடான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த சட்டத்தின் ஊடாக வெளிநாட்டு சக்திகளுக்கு கடற்றொழில்துறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுவது உண்மைக்கு புறம்பான கருத்தாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM