சுவாமி விவேகானந்தரின் பிறந்த தின நிகழ்வும் 'விவேகானந்தர்' விருது வழங்கலும் 

Published By: Nanthini

20 Feb, 2024 | 06:18 PM
image

(மா. உஷாநந்தினி)

படங்கள் : எஸ்.எம்.சுரேந்திரன் 

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (18) மாலை கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் நடைபெற்றது.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம், விவேகானந்தரின் சிலை திறப்பின் 27வது ஆண்டு பூர்த்தி, 'விவேகானந்தர்' விருதுகள் மற்றும் பணத்தொகை வழங்கல், விவேகானந்தர் அறநெறி மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான பரிசளிப்பு போன்ற முக்கிய அம்சங்கள் ஒருங்கே அமையப்பெற்றதாக இந்த வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விவேகானந்த சபையின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஆர். ராஜ்மோகன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர்களாக கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி அக்ஷராத்மானந்த மகராஜ், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை  ஆகியோர் கலந்துகொண்டனர்.

முதலில், மண்டப வளாகத்தில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி, பூஜை வழிபாடு இடம்பெற்றது.

பின்னர், விழா மேடையில் கொழும்பு விவேகானந்த சபையின் அறநெறி பாடசாலை மாணவர்கள் தேவாரம் பாடி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர்.

அதை தொடர்ந்து, விவேகானந்த சபையின் பாலர் பாடசாலை மாணவர்கள் 'குட்டி விவேகானந்தர்களாக' வேடமிட்டு நடனமாடி, சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியமை அரங்கையே பரவசப்படுத்தியது.

இந்த நிகழ்வில் கலாசாரக் குழு செயலாளர் எஸ். சந்திரசேகர் வரவேற்புரை ஆற்றினார்.

"விவேகானந்தரின் கருத்துக்களால் மாணவர்கள் உயர் நிலையை அடைய வேண்டும்"

சுவாமி அக்ஷராத்மானந்தா மகராஜ் தனது ஆசியுரையின்போது,

"இன்று நாம் நமது மதத்தை சுதந்திரமாக கடைபிடிக்க முடிகிறதென்றால், அதற்கு இருவர்தான் காரணம்.

"முதலில், இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆறுமுக நாவலர் பிறந்து, நமது மதத்தை காப்பாற்றினார். அவருக்குப் பின்னர் 127 ஆண்டுகளுக்கு முன் சுவாமி விவேகானந்தர் இலங்கைக்கு வருகை தந்தார். அவரது இலங்கை விஜயம் இங்கிருந்த அன்பர்களுக்கு எழுச்சியை கொடுத்தது.

"1897 ஜனவரி 15ஆம் திகதி கொழும்புக்கு கப்பலில் வந்து சேர்ந்தார். அவருக்கு கோலாகலமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 11 நாட்கள் இலங்கையின் பல்வேறு இடங்களுக்கு பிரயாணம் செய்தார்.

"கொழும்பிலிருந்து கண்டி, மாத்தளை ஊடாக அநுராதபுரம், யாழ்ப்பாணம் முதலிய பகுதிகளுக்கு சென்ற அவர், கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் ஆற்றிய சொற்பொழிவுகள் எழுத்து வடிவில் எம்மிடம் இருக்கின்றன. மற்ற இடங்களில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் எம்மிடம் இல்லை. காரணம், அப்போது யாரும் அவற்றை குறிப்பெடுக்கவில்லை. அவர் வந்து சென்றதன் விளைவே இந்த விவேகானந்த சபை.

"சுவாமி விவேகானந்தர் 1902ஆம் ஆண்டு மறைந்தார். அக்காலப்பகுதியில் இங்கிருந்தவர்கள் அவரது இலங்கை விஜயத்தின்போது அடைந்த உற்சாகத்தில் விவேகானந்த சபையை நிறுவினர்.

"விவேகானந்தர் பெயரில் நிறுவப்பட்ட முதல் நிறுவனம் இந்த விவேகானந்த சபை என்பதே சரித்திரபூர்வமான உண்மை.

"மனிதனின் பெருமையை எடுத்துக் கூறியவர் சுவாமி விவேகானந்தர். நமது வருங்காலம் நம் கையிலேயே இருக்கிறது என விவேகானந்தர் மீண்டும் மீண்டும் சொல்கிறார். தலைவிதி என்று தலையில் கை வைத்துக்கொள்ளக்கூடாது. எங்கள் முயற்சியால் விதியை மாற்றியமைக்கவும் முடியும் என்பதை உறுதியாக சொன்னவர் சுவாமி விவேகானந்தர். கற்பனையில் எழுந்ததை அவர் சொல்லவில்லை. அவரது கருத்துக்களுக்கு அடிப்படையானவை வேதங்கள், உபநிடதங்கள்.

"கல்விக்கு அவர் கொடுத்த வரைவிலக்கணம் மிகவும் உன்னதமானது.

"கல்வி என்பது புத்தகப் படிப்பல்ல. உண்மையான கல்வி நமக்குள் இருக்கும் திறமையை வெளிக்கொண்டு வருவது. மாணவர்கள் எல்லோருக்குள்ளும் ஒரு திறமை, தெய்வாம்சம் மறைந்திருக்கிறது. அதை வெளிக்கொண்டு வருவதுதான் கல்வி. ஒருவரை சொந்த காலில் நிற்க வைப்பதுதான் உண்மையான கல்வி. 

"தன்னம்பிக்கை மூலம் சொந்தக் காலில் நிற்க முடியும். தன்னம்பிக்கை எப்படி வரும்? ஒரு  குறிக்கோள் இருக்க வேண்டும். இந்த கருத்தை  மாணவர்களுக்கு திரும்பத் திரும்ப ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும்.

"சிறியவை, பெரியவை என பல நூல்களை மாணவர்களுக்கு வாசிக்கக் கொடுத்து, அவர்களது மனதை தூண்ட வேண்டும். எரிகிற நெருப்பை தூண்டிவிட்டால் அது பிரகாசமாக எரியும். மாணவர்களின் மனதிலுள்ள சக்தியை, திறமையை தூண்டிவிட வேண்டியது ஆசிரியர்களின் தலையாய கடமை. தூண்டிவிட்டு, உற்சாகப்படுத்தினால் மாணவர்கள் சிறந்த நிலையை அடைவார்கள். விவேகானந்தரின் கருத்துக்களால் அவர்கள் மேலான நிலையை அடைய‍ வேண்டும்" என தெரிவித்தார்.  

"விவேகானந்த பரீட்சையில் 95க்கு மேல் புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு A+ விசேட சான்றிதழோடு 500 ரூபாய் பணப்பரிசு"

அடுத்து, தலைமையுரை ஆற்றிய விவேகானந்த சபை தலைவர் எம்.ஆர்.ராஜ்மோகன், 

"சைவ சமயம் என்கிற ஒரே ஒரு குறிக்கோளை கொண்டு இயங்கி வருவது விவேகானந்த சபை மட்டுமே. 

விவேகானந்த சபையினூடாக அறநெறி பாடசாலை, பாலர் பாடசாலை, இசை நடன கல்லூரி என மூன்று பாடசாலைகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. 

எமது சபையானது நாடளாவிய ரீதியில் விவேகானந்த பரீட்சைகளை நடத்தி வருகிறது. பரீட்சை நேரங்களில் பலரது உதவி எமக்கு தேவைப்படுகிறது. 

இவ்வருடம் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி விவேகானந்த பரீட்சை நடைபெறும். அதற்காக இன்றைய விருது வழங்கலினூடாக நாட்டில் இயங்கி வரும் வேறு மன்றத்தினரையும் எம்மோடு இணைத்துக்கொண்டு, பரீட்சைகளை முன்னெடுத்து, விவேகானந்த சபையை நாடெங்கும் விஸ்தரிக்கவுள்ளோம். 

இந்த வருடம் விவேகானந்த பரீட்சையில் தோற்றும் சுமார் 5000 மாணவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பில்,  பரிசுகளை ஒரே நாளில் வழங்கவுள்ளோம் என்பதில் பெருமையடைகிறோம். 

பிள்ளைகள் சைவ சமய பாட புத்தகங்களை படிப்பதை சில பெற்றோர்கள் அனுமதிக்காமல், வேறு பாடங்களை படிக்கச் சொல்கிறார்கள். தவறில்லை. அது, இந்த காலகட்டத்தை பொருத்தவரையில் சரியானது;  என்றாலும், பிள்ளைகளை ஏனோ, ஊக்குவிக்க வேண்டிய தேவையும் எமக்கிருக்கிறது. 

அதற்காக, எமது புதிய திட்டத்தின்படி, விவேகானந்த பரீட்சையில் 95க்கு மேற்பட்ட புள்ளிகளை பெறும் ஒவ்வொரு மாணவருக்கும் 'A+' விசேட சான்றிதழோடு 500 ரூபாய் பணப்பரிசினையும் வழங்கவுள்ளோம" என சபையின் திட்டங்களை எடுத்துரைத்தார். 

***

மேலும், இந்த நிகழ்வின்போது விவேகானந்த சபையின் பாலர் பாடசாலையில் கல்வி பயின்று தரம் 1க்கு செல்லும் மாணவர்களுக்கான பரிசுகளை சுவாமி அக்ஷராத்மானந்தா மகராஜ் மற்றும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரதி தலைவரும் விவேகானந்த சபையின் உப தலைவருமான தனபாலா ஆகியோர் இணைந்து வழங்கி வாழ்த்தினர்.  

அத்தோடு, இந்து சமய வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை சமூகத்தில் நிறைவேற்றி வரும் மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றுக்கு விவேகானந்தர் விருது, சான்றிதழ் மற்றும் உதவித்தொகைக்கான காசோலை வழங்கப்பட்டன. 

அதன்படி, புத்தளம் இந்து மகா சபை, மாத்தளை சைவ மகா சபை, புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றம் ஆகிய நிறுவனங்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளையால் விருதுகள் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டன.  

புத்தளம் இந்து மகா சபையின் சார்பில் அதன் தலைவர் ஆறுமுகசாமி நிர்மலன், செயலாளர் நாகரத்தினம் திருச்செல்வம், பொருளாளர் டேவிட் சுதர்சன் ஆகியோரும், மாத்தளை சைவ மகா சபையின் சார்பில் அதன் தலைவர் துரைசாமி சந்திரசேகரம்பிள்ளையும், புறக்கோட்டை இந்து இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அதன் தலைவர் சுப்பிரமணியம் சுரேஷ் குமார், செயலாளர் சுப்பிரமணியம் ஆனந்தஜெயசேகர், பொருளாளர் முனுசாமி சுபாகர் ஆகியோரும் இவ்விருதுகளை பகிர்ந்துகொண்டனர். 

அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பரிசுகளும், விவேகானந்த பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

மேலும், இந்த விழாவில் அறநெறி பாடசாலை மாணவர்களின் பேச்சுக்கள், விவேகானந்தர் பொன்மொழிகளின் தொகுப்பு, பரதநாட்டியம், கும்மி முதலான நடனங்கள் ரசிக்கும் வகையில் அமைந்ததோடு, மாணவர்களின் திறமைகளும் கலை நிகழ்ச்சிகளினூடாக வெளிப்பட்டன.

குறிப்பாக, ஈழ வளநாட்டினது, குறிப்பாக தேயிலை மலைகளினது பெருமைகளை எடுத்துக்காட்டும் விதமாக தேசியக்கொடிகளை ஏந்தியவாறு மாணவர்கள் நடனமாடினர்.

விவேகானந்த சபையின் இசை நடனக் கல்லூரி நிகழ்த்திய வயலின் இசைக் கச்சேரியில், இசைக் கலைஞர்கள் இடையிடையே சினிமா பாடல்களையும் இணைத்து வாசித்தமை சபையினர் கவனத்தை திருப்பியது. 

இவ்வாறு கலையம்சங்களாலும் சமூக, ஆன்மிக, சிந்தனைக் கருத்துக்களாலும் நிரம்பிய விவேகானந்தர் பிறந்தநாள் வைபவம், சபையின் பொதுச் செயலாளர் சு. சிவசண்முகநாதனின் நன்றியுரையோடு நிறைவுற்றது.  

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கவிமகள் ஜெயவதியின் 'எழுத்துக்களோடு பேசுகிறேன்' கவிதைத்...

2025-03-17 17:28:21
news-image

ஈ.எஸ்.எம். சர்வதேச பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப்...

2025-03-17 16:03:10
news-image

எழுத்தாளர் தியா காண்டீபனின் “அமெரிக்க விருந்தாளி”...

2025-03-17 14:44:08
news-image

மூதூர் சிவில் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சமூக...

2025-03-17 14:41:55
news-image

நுவரெலியா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட 103வது பொன்னர்...

2025-03-16 14:09:26
news-image

இந்திய எழுத்தாளர் சந்திரசேகரத்தின் “இனிய நந்தவனம்...

2025-03-16 13:03:09
news-image

காரைக்கால் அம்மையார், திருவள்ளுவர் குருபூசை தின...

2025-03-16 12:28:58
news-image

கல்முனை அல் - அஸ்கர் வித்தியாலய...

2025-03-16 11:45:14
news-image

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவுதினம்

2025-03-15 14:26:14
news-image

கபித்தாவத்தை ஸ்ரீ கைலாசநாதர் சுவாமி ஆலய...

2025-03-15 18:13:16
news-image

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த...

2025-03-15 10:53:21
news-image

கொழும்பு பெளத்த கலாச்சார நிலையத்தில் பகவத்...

2025-03-15 02:52:36