இந்தியாவின் கசப்பான பாடங்கள்

Published By: Vishnu

19 Feb, 2024 | 01:27 AM
image

சுபத்ரா

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு கொண்டிருந்த, கடந்த 14ஆம் திகதி, கேரள மாநிலத்தில்  கோழிக்கோட்டில் உள்ள, இந்திய இராணுவத்தின் 122 ஆவது காலாட்படை  பற்றாலியன் தலைமையகத்தில் ஒரு நிகழ்வு இடம் பெற்றது.

34 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து வெளியேறிய இந்திய அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த, 122 ஆவது காலாட்படை பற்றாலியனைச் சேர்ந்த, கிட்டத்தட்ட 150 வரையிலானவர்கள், அந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தனர்.

இலங்கையில் ஒப்பரேசன் பவான் நடவடிக்கையில் பங்கேற்ற, மட்ராஸ் ரெஜிமென்ட்டின்,  122 ஆவது காலாட்படை பற்றாலியனில், சுமார் 700 பேர் இடம்பெற்று இருந்தனர்.

அவர்களில் 400 பேர் வரை இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என, இரண்டு நாட்களுக்கு முன்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஏற்பாட்டாளர்களில் ஒருவரான, ஓய்வுபெற்ற சுபேதார் ரஹ்மான் கூறியிருந்தார்.

ஆயினும், அவர்கள் எதிர்பார்த்த அளவைவிட பாதி எண்ணிக்கையானவர்கள் தான் அதில் கலந்து கொண்டிருந்தனர்.

122 ஆவது காலாட்படை பற்றாலியனைச் சேர்ந்த அவர்கள், இப்போது 60, 70 வயதுகளை தொட்டிருந்தார்கள்.

காலை 8 மணி அளவில் பற்றாலியன் தலைமையகத்தில் ஆலய வழிபாட்டுடன் தொடங்கிய நிகழ்வு, உயிரிழந்த இந்திய படையினருக்கான அஞ்சலி , நினைவு கல்வெட்டு திறப்பு,  இந்திய அமைதிப்படையின் செயற்பாடுகளை விபரிக்கும் காட்சி அரங்கு திறப்பு,  ஒப்பரேசன் பவான் கோனர்  திறப்பு,  பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்வது, என  மாலை ஒன்று மணி வரை இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு ஒருங்கிணைத்திருந்தவர் 122 ஆவது காலாட்படை பற்றாலியனின் முன்னாள் கட்டளை அதிகாரியான பிரிகேடியர் சகாதேவன்.

1989இல்  கன்னூரில் இருந்து, கேணல் சகாதேவன் தலைமையிலான, 6 கொம்பனிகளைக் கொண்ட, 122ஆவது காலாட்படை பற்றாலியன்,  இந்திய அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய இராணுவ பற்றாலியன்களிலேயே, எந்தவொரு உயிரிழப்பும் இல்லாமல் திரும்பிய ஒரே படைப்பிரிவு இது தான்.

இந்தப் படைப்பிரிவு அனுப்பி வைக்கப்பட்ட போது, இந்தியப்படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் குறையத் தொடங்கியிருந்தது.

இலங்கையில் இருந்து  அமைதிப்படையினரை வெளியேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் இணங்கிய சூழலில், விடுதலைப் புலிகள் மீதான போர் நடவடிக்கைகள் படிப்படியாக குறையத் தொடங்கின.

அதனால், 1989 தொடக்கம் 1990இல் வெளியேறும் வரை, எந்தவொரு படைவீரரையும் பலிகொடுக்காமலேயே, தனது பற்றாலியனுடன் திரும்பியிருந்தார் கேணல் சகாதேவன்.

பின்னர் அவர்,  என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய காவல் படையின், துணை கட்டளை அதிகாரியாகவும், எல்லை காவல்படையின், துணை பணிப்பாளராகவும், பணியாற்றியிருக்கிறார்.

மட்ராஸ் ரெஜிமென்டின், 112 ஆவது காலாட்படை பற்றாலியனின் தற்போதைய தளபதியான, கேணல் நவீன் பென்ஜித்தின், தந்தையாரான, மேஜர் ஜெனரல், டேவிட் ஐவர் தேவாவரம் தான், இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றிருந்தார்.

அவரே, பிரிகேடியர் சகாதேவனின் தலைமையிலான 122 ஆவது காலாட்படையை உள்ளடக்கிய மட்ராஸ் ரெஜிமென்ட்டின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். இலங்கையில் தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

ஒப்பரேசன் பவான் வீரர்கள் சந்திப்பு-2024 என்ற பெயரில், நடந்த இந்த நிகழ்வு முக்கியமானது. இளைய தலைமுறையினர் இடையே இலங்கை நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த நிகழ்வை நடத்தி இருப்பதாக  பிரிகேடியர் சகாதேவன் கூறியிருக்கிறார்.

இலங்கையிலிருந்து திரும்பிய பின்னர், இந்திய அமைதிப்படையை சேர்ந்த அதிகாரிகள், படையினர் ஒன்று கூடிய முதலாவது சந்தர்ப்பம் இது. இளைஞர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்பட்டிருந்தாலும், இவ்வாறான ஒரு சந்திப்புக்கு கிட்டத்தட்ட 34 ஆண்டுகள் சென்றிருக்கிறது. 

இலங்கையில் இந்திய அமைதிப்படையின் நடவடிக்கை தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரையில் பெரும் இரத்த களரியுடன் முடிந்த ஒரு நடவடிக்கை. இந்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜோர்ஜ் பெர்னான்டஸ் 1999 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் 1165 இந்தியப் படையினர் உயிரிழந்தனர் என்றும், 3009 பேர் காயமடைந்தனர் என்றும் கூறியிருந்தார்.

இந்தியா 11 இலட்சம் படையினரைக் கொண்ட உலகின் நான்காவது பெரிய இராணுவத்தைக் கொண்ட நாடாக அப்போது விளங்கியது. இந்திய இராணுவத்தில் அப்போதிருந்த மொத்தம் 32 டிவிசன்களில், மூன்று டிவிசன்கள் முழுமையாகவும், ( 54, 36, 57), புறம்பாக, சிறப்பு படைப்பிரிவுகளை உள்ளடக்கிய சுயாதீனப் படையணிகளையும் இலங்கையில் களமிறக்கியிருந்தது.

ஆனாலும், விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைந்து அமைதியை ஏற்படுத்தும் நோக்கில்- முன்னெடுப்பதாக இந்தியா கூறிய அந்தப் போர் நடவடிக்கை, குறித்த இலக்கை எட்டாமலேயே நிறைவுக்கு வந்தது.

அந்தப் போரின் முடிவில் விடுதலைப் புலிகள் அசுர பலத்துடன் காடுகளில் இருந்த வெளியே வந்து, வடக்கின் பெரும் நிலப்பரப்பை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இந்தப் போரில் இந்தியா பாரிய பின்னடைவுகளைச் சந்தித்தமைக்கு, புலனாய்வுத் தவறுகளே பிரதான காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

நகர்ப்புற கெரில்லா போரில் அனுபவமின்மை,  பொருத்தமான ஆயுத தளபாடங்கள் இல்லாமை, தொடர்பாடல் கருவிகளின் குறைபாடுகள்,  போதிய படையினர் களமிறக்கப்படாமை என்று இந்தப் பின்னடைவுக்கான காரணங்கள் பல அடுக்கப்படுகின்றன.

அப்போது இந்திய இராணுவத்தில் பணியாற்றிய, கேணல் ஹரிகரன் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள், இந்தியாவின் திட்டம் பிசுபிசுத்துப் போனதற்கான காரணங்களை ஆராய்ந்து, ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார்கள்.

இலங்கையில் தங்களின் அனுபவங்கள் தொடர்பாக, இந்திய அமைதிப்படையின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்குமான தளபதியாக இருந்த லெப். ஜெனரல் டிபிந்தர் சிங் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள், புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்கள்.

இதற்கு முக்கியமான காரணம், பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு இந்த நடவடிக்கையின் தோல்வி பெரியதொரு அவமானமாக இருந்தது.

இதிலிருந்து நிறைய பாடங்களை கற்றுக் கொள்ள வேண்டும் என்று இராணுவ அதிகாரிகள் ஒவ்வொருவரும் முயற்சித்தார்கள்.

அதேவேளை இந்த கசப்பான அனுபவங்களை  இந்தியா நினைவில் வைத்துக் கொள்ளவும் விரும்பவில்லை. 

அதனால் தான், இந்தியாவில்வேறு  போர் நடவடிக்கைகளில் உயிரிழந்த இந்தியப் படையினரை நினைவு கூரும் நினைவுத் தூபிகள் அமைக்கப்பட்டுள்ள போதும்-  இந்திய அமைதிப்படையினருக்கு நினைவுத் தூபி அமைக்கப்படவில்லை.

கொழும்பில், பலாலியில் இந்தியப் படையினருக்கு நினைவுத் தூபிகள் உள்ளபோதும், புதுடில்லியில்  இல்லை. 

இவ்வாறான நிலையில், ஒரு தலைமுறை இடைவெளிக்குப் பிறகு,  இந்த நடவடிக்கை தொடர்பாக இளைய தலைமுறைக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஆர்வம், தற்போது 60, 70 வயதுகளில் உள்ள முன்னாள் இந்திய படையினருக்கு வந்திருக்கிறது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய சகாதேவன் விடுதலைப் புலிகளை குறைகூறும் விதத்தில் எதையும் கூறவில்லை.

“புலிகளுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் நடந்த காலகட்டம் அது. ஆனால், புலிகள் உட்பட, அவர்கள் அனைவரும் எங்களுக்கு நல்லவர்களாகவும், நல்ல நடத்தையுடன் உதவிகரமாகவும் இருந்தனர்.

ஒருமுறை விடுதலைப் புலிகள் ஒரு வாகனத்தை கடத்திச் சென்று  காவலில் வைத்திருந்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய கூட்டாளியான ஜோனிடம் நாங்கள் கோரிய போது, அவர்கள்  பாதுகாப்பாக விடுவித்தனர்.” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்திய அமைதிப்படையின் நடவடிக்கை ஒருங்கிணைப்புத் தளபதியாக  இருந்த லெப். ஜெனரல் டிபிந்தர் சிங்குடன், அமெரிக்காவின் ஹொஸ்டனில்  உள்ள இந்தியா ஹவுசின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கேணல் விபின் குமார், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இராப்போசன விருந்துடன் உரையாடல் நிகழ்வு ஒன்றை நடத்தினார்.

அதில், வெளிவராத இரகசியங்கள் சிலவற்றை லெப். ஜெனரல் டிபிந்தர் சிங் வெளிப்படுத்தினார்.

“இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அமைதியைப் பேணுவதே தவிர, போராளிக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களில் தலையிடக் கூடாது என்பதே இந்திய அமைதிப்படைக்கான கட்டளை.

புலிகளின் தலைவர் பிரபாகரனை பலமுறை சந்தித்து, ஆயுதங்களை கையளிக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினேன். பொதுமன்னிப்பு வழங்குவதாக உறுதியளித்தேன்.

ஆனால், புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்த பின்னர், அவர்களை படுகொலை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளதாக பிரபாகரன்  கூறினார். 

புதுடில்லியில் உள்ள உயர் அதிகாரிகளுடன் அதுபற்றி விசாரித்து,  அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று மறுத்தேன். ஆனால், பிரபாகரன் சொன்னது சரிதான். பொதுமன்னிப்பு வழங்கிய பின்னர்,  புலிகளை செயலிழக்கச் செய்ய இந்தியா முயன்றது. 

இந்திய அரசியல் தலைமை தனது திட்டங்களை களத்தில் உள்ள இராணுவத் தலைவர்களுடன் கூட பகிர்ந்து கொள்ளவில்லை.  இந்திய இராணுவ வீரர்களை அரவணைத்து, மகிழ்வுடன் வரவேற்ற இலங்கைத் தமிழர்கள், இந்தியாவின் துரோகத்தால் அவர்களுக்கு எதிராகத் திரும்பினர்.” என்று லெப். ஜெனரல் டிபிந்தர் சிங் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில், கடந்த செவ்வாயன்று கோழிக்கோட்டில் நடந்த ஒன்று கூடலில் நிறைவுரை ஆற்றிய பிரிகேடியர் சகாதேவன், “நாம் இலங்கையை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் இலங்கை ஒருபோதும் எம்மை விட்டு விலகாது.” என்று கூறினார். அவரது அந்தக் கூற்றுக்கு ஒன்றல்ல, பல அர்த்தங்கள் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18
news-image

தமிழ்ப் பொதுவேட்பாளர் ‘குதிரைக் கொம்பு’

2024-04-15 18:20:26