ஆப்கானிஸ்தானுடனான பரபரப்பான முதலாவது ரி20யில் இலங்கை 4 ஓட்டங்களால் வெற்றி

Published By: Vishnu

17 Feb, 2024 | 11:14 PM
image

(நெவில் அன்தனி)

ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் இன்று சனிக்கிழமை (17) நடைபெற்ற இலங்கைக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான வரலாற்று முக்கியம் வாய்ந்த முதலாவது இருதரப்பு ரி20 தொடரின் ஆரம்பப் போட்டியில் 4 ஓட்டங்களால் இலங்கை பரபரப்பான வெற்றியை ஈட்டியது.

இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 161 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவின் அதிரடி அரைச் சதம், மதீஷ பத்திரணவின் 4 விக்கெட் குவியல், பினுர பெர்னாண்டோவின் கட்டுப்பாடான கடைசி ஓவர் என்பன இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தன.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 19 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தானுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கையின் முன்வரிசை வீரர்கள் துடுப்பாட்டத்தில் அசத்திய போதிலும் இந்தப் போட்டியில் அவர்களது ஜம்பம் பலிக்கவில்லை.

போட்டியின் 8ஆவது ஓவரில் இலங்கை 4 முன்னணி வீரர்களை இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

இலங்கையின் ஒருநாள் கிரிக்கெட் சாதனை நாயகன் பெத்தும் நிஸ்ஸன்க (6), குசல் மெண்டிஸ் (10), தனஞ்சய டி சில்வா (24), சரித் அசலன்க (3) ஆகிய நால்வரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் துடுப்பாட்ட வரிசையில் துணிச்சலுடன் தன்னை உயர்த்திக்கொண்டு களம் இறங்கிய வனிந்து ஹசரங்க ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அதிரடியில் இறங்கினார்.

அவரும் சதீர சமரவிக்ரமவும் 5ஆவது விக்கெட்டில் 41 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

சதீர சமரவிக்ரம 25 ஓட்டங்களைப் பெற்றார்.

அவர் ஆட்டம் இழந்த சொற்ப நேரத்தில் வனிந்து ஹசரங்க ஆட்டம் இழந்தார். 32 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்ட வனிந்து ஹசரங்க 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 67 ஓட்டங்களைக் குவித்தார்.

மத்திய மற்றும் பின்வரசையில் எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.

பந்துவீச்சில் பஸால்ஹக் பாறூக்கி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நவீன் உல் ஹக் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் வெற்றி இலக்கை 5 ஓட்டங்களால் அடையத் தவறியது.

அணித் தலைவரும் ஆரம்ப வீரருமான இப்ராஹிம் ஸத்ரான் கடைசிவரை தனி ஒருவராக போராடி 55 பந்துகளில் 8 பவுண்டறிகளுடன் ஆட்டம் இழக்காமல் 67 ஓட்டங்களைப் பெற்றபோதிலும் அது பலன் தராமல் போனது.

குல்பாதின் நய்புடன் 2ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களையும் கரிம் ஜனாத்துடன் 6ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களையும் ஸத்ரான் பகிர்ந்தார். ஆனால் ஏனைய துடுப்பாட்ட வீரர்களிடம் இருந்து போதிய பங்களிப்பு கிடைக்காததால் ஆப்கானிஸ்தான் தோல்வியைத் தழுவியது.

ஸத்ரானைவிட கரிம் ஜனாத் 20 ஓட்டங்களையும் குல்பாதின் நய்ப் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 11 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி ஓவரை கட்டுப்பாட்டுடன் ஸத்ரானுக்கு வீசிய பினுர பெர்னாண்டோ முதல் 4 பந்துகளில் ஓட்டம் கொடுக்காமல் கடைசி 2 பந்தகளில் மாத்திரம் 6 ஓட்டங்களைக் கொடுத்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் மதீஷ பத்திரண 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையம் தசுன் ஷானக்க 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ், வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: மதீஷ பத்திரண.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பங்களாதேஷை இலகுவாக வென்றது இலங்கை; மாலைதீவுகளை...

2024-07-12 01:25:11
news-image

ரி20 அணிதலைவர் பதவியிலிருந்து வனிந்து இராஜினாமா

2024-07-11 19:57:29
news-image

ஆர்ஜென்டீனாவில் பாலியல் குற்றச்சாட்டினால் பிரெஞ்சு றக்பி...

2024-07-11 13:04:22
news-image

மேற்கு ஆசிய இளையோர் விரைவு செஸ்...

2024-07-11 12:34:03
news-image

ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற...

2024-07-11 11:59:25
news-image

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் அரை இறுதியில்...

2024-07-11 12:01:24
news-image

கத்தாரிடம் ஆரம்பப் போட்டியில் இலங்கை தோல்வி

2024-07-11 13:35:29
news-image

ஹேல்ஸ், பானுக்க அசத்தலான துடுப்பாட்டம்; கண்டி ...

2024-07-11 00:12:14
news-image

இலங்கையை 88-44 என்ற புள்ளிகள் கணக்கில்...

2024-07-10 23:56:19
news-image

ரைலி ரூசோவ் அபார சதம் குவிப்பு;...

2024-07-10 19:43:10
news-image

டேவிஸ் கிண்ண டென்னிஸ் 3ஆவது குழுவுக்கு...

2024-07-10 16:28:07
news-image

7ஆவது அகில இலங்கை வில்லாளர் போட்டியில்...

2024-07-10 16:27:20