எமது வெற்றிக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அத்தியாவசியம் : பிரத்தியேக செவ்வியில் அநுரகுமார தெரிவிப்பு

18 Feb, 2024 | 03:19 PM
image

(நேர்காணல் - இராஜதுரை ஹஷான்)

படப்பிடிப்பு – எஸ்.எம்.சுரேந்திரன் 

நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான தீர்மானங்களை இந்தியா அல்ல எந்த நாடுகள் முன்னெடுத்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம். இந்தியாவை மாத்திரம் தனித்து ஒருபோதும் எதிர்க்கவில்லை. இந்திய விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து நாங்கள் விசேட கவனம் செலுத்தியிருந்தோம். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான இராஜதந்திர மட்டத்திலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களாணையுடன் நாங்கள் அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம். அப்போது இந்தியாவின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் முறைமை மாற்றத்துக்கு தமிழ் - முஸ்லிம் மக்கள் பங்காளிகளாக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கேந்திர மையமாக இலங்கையை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என இந்திய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு அமைச்சர் ஆகியோரிடம் உறுதியளித்தேன். சீனா உலகில் பலம் வாய்ந்த நாடாக செயற்படுகிறது.நாம் இந்தியாவுக்கு அருகில் உள்ளோம்.சீனாவுடன் முரண்பாடற்ற வகையில் செயற்பட வேண்டும். இருப்பினும் அது ஒருபோதும் பிற நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைய கூடாது எனவும் குறிப்பிட்டார்.

வீரகேசரி வார வெளியீட்டுக்கு வழங்கிய நேர்காணலின் போது  இந்திய விஜயம்,சமகால அரசியல், நிலைவரம் குறித்து பல விடயங்களை பகிர்ந்துக் கொண்டார். அந்த  நேர்காணலின் முழு வடிவம் வருமாறு,

கேள்வி – அடுத்த ஜனாதிபதி யார் என்ற கருத்துக்கணிப்பில் நீங்கள் முன்னிலையில் இருக்கின்றீர்கள்; இந்த முன்னேற்றம் வெற்றிபெறுமா ?

பதில் - கடந்த காலங்களை காட்டிலும் மக்கள் தற்போது தெளிவாக உள்ளார்கள். உண்மையை விளங்கிக்கொண்டுள்ளார்கள். நாங்கள் குறிப்பிட்டவை நடைமுறையில் வெற்றிப்பெற்றுள்ளன என்பதை மக்கள் அறிந்துள்ளார்கள். ஆகவே எம்மீது நம்பிக்கை கொண்டு எம் தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளார்கள். கருத்துக்கணிப்புக்கள், வாக்குகள் ஊடாக வெற்றிபெறும்.

கேள்வி - இந்தியாவின் அழைப்புக்கு அமைய இந்தியாவுக்கு சென்றதாக நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள், ஆனால் ஜனாதிபதியின் ஆசிர்வாதத்துடன் தான் ஜே.வி.பி. இந்தியா சென்றுள்ள தென அரச தரப்பு குறிப்பிடுகிறது. இதில் எது உண்மை ?

 பதில் - ஜனாதிபதி தேர்தலில் எமது பிரதான எதிர்வாதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க .இந்திய விஜயத்தை தடுக்கும் தேவை அவருக்கு இருந்ததே தவிர ஆசிர்வாதிக்கும் தேவை இருக்கவில்லை. ரணில், கோட்டா, மஹிந்த, சஜித், மைத்திரி, சந்திரிக்கா ஆகியோர் ஒரே அரசியல் அணி, இந்த அணிக்கு எதிராகவே எமது அரசியல் செயற்பாடுகள் காணப்படுகின்றன. 

இந்திய விஜயம் பற்றி பெரும்பாலானோர் கலக்கமடைந்துள்ளார்கள். ஆகவே போலியான குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள்.

இலங்கையின் பாரம்பரிய அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் இந்தியா பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. 

ஒட்டுமொத்த மக்களின் அரசியல் அபிலா ஷைகள் மற்றும் எண்ணங்களுக்கு அமையவே ஏனைய நாடுகள் அரசியல் ரீதியிலான அடுத்தக்கட்ட தீர்மானங்களை எடுக்கும். அதேபோல் தான் இலங்கை மக்களின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை இந்தியா நன்கு விளங்கிக் கொண்டு எம்முடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

கேள்வி – மக்கள் விடுதலை முன்னணியின் 'இந்திய எதிர்ப்புக் கொள்கை' இனியும் செல்வாக்கு செலுத்துமா?

பதில் - மக்கள் விடுதலை முன்னணி இந்தியா மீதும்,இந்தியர்கள் மீதும் ஒருபோதும் பகைமையை வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் ஒருசில காலக்கட்டங்களில் இலங்கை தொடர்பில் இந்தியா எடுத்த தீர்மானங்கள் பிரச்சினைக்குரியதாக இருந்தன. அதை நாங்கள் எதிர்த்தோம். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எதிரான தீர்மானங்களை இந்தியா அல்ல எந்த நாடுகள் எடுத்தாலும் அதை நாங்கள் எதிர்ப்போம். இந்தியாவை மாத்திரம் தனித்து ஒருபோதும் எதிர்க்கவில்லை.

கேள்வி – பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இந்தியாவின் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாற்றமடைந்துள்ளதாக குறிப்பிடும் நீங்கள் இந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களா?

பதில் - பெரும்பாலான அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.விலைமனு கோரல் விடுக்கப்பட்டதன் பின்னர் இந்திய நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. இதில் தவறு யாருடையது. என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். 

நாடுகளை வகைப்படுத்தி நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.தேசிய வளங்களை முறையற்ற வகையில் தனியார் மயப்படுத்த முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு என்றும் எதிர்ப்பு தெரிவிப்போம். அதில் எவ்வித மாற்றமுமில்லை.

கேள்வி - இந்திய விஜயம் வெற்றி பெற்றுள்ளதா ?

பதில் - ஆளும் தரப்பினரதும், எதிர் தரப்பினரதும் கலக்கமும், சேறுபூசலும் அதற்கு சிறந்த பதில். கடந்த 08 மற்றும் 09ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதம் இடம்பெற்றது. விவாதத்தில் உரையாற்றியவர்களின் பெரும்பாலானோர் ' அநுர,தேசிய மக்கள் சக்தி, இந்திய விஜயம்' பற்றி தான் பேசினார்கள். 

எம்மை விமர்சித்த தரப்பினர் 'மக்கள் விடுதலை முன்னணியினர் வெளிநாடுகளுடன் தொடர்புக் கொள்வதில்லை. இராஜதந்திர உறவுகளை புறக்கணிக்கிறார்கள்,எங்களுக்கு சர்வதேச மட்டத்தில் அங்கீகாரம் இல்லை என்று தவறானதொரு நிலைப்பாட்டை தோற்றுவித்திருந்தார்கள். இந்திய விஜயம் எம்மீதான தவறான சித்தரிப்புக்களை இல்லாதொழித்துள்ளது.ஆகவே ஆளும் மற்றும் எதிரணியினர் கலக்கமடைந்துள்ளார்கள்.

கேள்வி – நீங்கள் உட்பட உங்களின் குழுவினர் திருப்பதி கோயிலுக்கு ஏன் செல்லவில்லை ?

பதில் - தனிப்பட்ட முறையில் நான் மதம் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை. அது என்னுடைய தனிப்பட்ட விடயம். அதனால் எவருக்கும் எவ்வித பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை. மதம்,கலாசாரம் மற்றும் அதனுடனான நம்பிக்கைகள் என்பனவற்றை கடைப்பிடிக்கும் நம்பிக்கை அனைவருக்கும் உண்டு.

கேள்வி – தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை ஸ்தாபிக்க இந்தியாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றீர்களா?

பதில் - இந்திய விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து நாங்கள் விசேட கவனம் செலுத்தியிருந்தோம். இந்தியா உள்ளிட்ட நாடுகளுடனான இராஜதந்திர மட்டத்திலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். மக்களாணையுடன் நாங்கள் அரசாங்கத்தை நிச்சயம் கைப்பற்றுவோம். அப்போது இந்தியாவின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.

அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு முன்னர் இந்தியாவுடனான எமது இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது பிரதான இலக்காக அமைந்தது.பொருளாதார ரீதியிலும், தகவல் தொழில்நுட்ப துறையில் இந்தியா முன்னேற்றமடைந்துள்ளது. இந்தியா உட்பட சகல நாடுகளுடனும் இணக்கமாக செயற்பட நாங்கள் தயாராக உள்ளோம்.

கேள்வி – பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைகள் குறித்து இந்தியா ஏதேனும் வலியுறுத்தல்களை முன்வைத்ததா?

பதில் - இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்,இந்திய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தேன். இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் கேந்திர மையமாக இலங்கை அமைய கூடாது என்று இந்தியா சுட்டிக்காட்டியது.

'இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் கேந்திர மையமாக இலங்கையை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை'என்று குறிப்பிட்டோம்.

கேள்வி - இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பற்றி உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில் - சீனா உலகில் பலம் வாய்ந்த நாடாக செயற்படுகிறது. நாம் இந்தியாவுக்கு அருகில் உள்ளோம். சீனாவுடன் முரண்பாடற்ற வகையில் செயற்பட வேண்டும். இருப்பினும் அது ஒருபோதும் பிற நாட்டுக்கு அச்சுறுத்தலாக அமைய கூடாது.

கேள்வி – நீண்ட  காலமாக பேசுபொருளாக உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு, அதிகார பகிர்வு மற்றும் சமஷ்டி இவ்விடயங்கள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன ?

பதில் - நாடு என்ற ரீதியில் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண வேண்டும்.முதலில் நாட்டுக்கே கேடு விளைவித்துள்ள இந்த அரசியல் கட்டமைப்பை இல்லாதொழிக்க வேண்டும்.இந்த நாட்டில் வாழும் தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு மொழி,கலாசாரம் மற்றும் அரசியல் ரீதியில் பிரச்சினைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

எமது அரசாங்கத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ள கூடிய அரசியலமைப்பு உருவாக்கப்படும். அதில் இப்பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற வகையில் தீர்வு வழங்கப்படும். பிரச்சினைகளை ஏலம் விட்டு தீர்வு வழங்கும் வங்குரோத்து அரசியல் இனியும் வெற்றிபெறாது.

கேள்வி - இலங்கை - இந்திய ஒப்பந்தம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?

 பதில் - எந்த நோக்கத்துக்காக இலங்கை –இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதோ அந்த நோக்கம் வெற்றிபெறவில்லை. தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகவே அந்த அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

கேள்வி – வட, கிழக்கை பிரிப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னின்று செயற்பட்டார்கள். அது நியாயமானது என்று தற்போது சிந்திக்கின்றீர்களா?

பதில் – வட, கிழக்கு விவகாரத்தில் வடக்கு மக்கள் மத்தியில் ஒரு நிலைப்பாடு உள்ளது,கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் பிறிதொரு நிலைப்பாடு உள்ளது. தற்போதைய நிலையில் நிலத்தை பிரித்துக் கொண்டு ஒருபோதும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஆகவே வட, கிழக்கு விவகாரத்தில் நீதிமன்றமே இறுதி தீர்மானத்தை எடுத்தது.

கேள்வி - இலங்கையின் யுத்தக் குற்றம், மனித உரிமை மீறல்கள் இடம் பெற்றதாக சர்வதேச அரங்கில் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை   ஏற்றுக் கொள்கின்றீர்களா ?

பதில் - யுத்தம் என்பது அமைதியானதல்ல, யுத்தத்தில் இரு தரப்பிலும் இழப்புக்கள் நேர்ந்துள்ளன. ஆகவே பொறுப்பான தரப்பினர் நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் பதிலளிக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்து ஒருவாரத்துக்கு பின்னர் எமது யோசனைகளை நாங்கள் முன்வைத்தோம். உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் யோசனையை நாங்களே முதலாவதாக முன்வைத்தோம்.

யுத்தத்தின் போது இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும்.தேசிய மட்டத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று எதிர்பார்க்கிறோம்.

கேள்வி – உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களா?

பதில் - தென்னாபிரிக்காவின் மாதிரியிலான உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதற்கு அரசாங்கம் உண்மைத்தன்மையுடன் செயற்படவில்லை. அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறதை அவதானிக்க முடிகிறது.

கேள்வி – பெருந்தோட்ட மக்களின் காணி மற்றும் சம்பள பிரச்சினைக்கு உங்களிடம் உள்ள தீர்வு என்ன?

பதில் - பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை காணி மற்றும் சம்பள விவகாரத்துக்குள் மாத்திரம் வரையறுக்க முடியாது.அண்மையில் 'அட்டன் பிரகடனம்' என்ற தலைப்பில் கொள்கைகளை வெளியிட்டோம்.மலையக மக்கள் இலங்கையர் என்ற அபிமானத்துடன் வாழ்வதற்கான சூழலை நாங்கள் ஏற்படுத்திக் கொடுப்போம்.

கேள்வி - தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக உள்ளீர்களா?

பதில் - தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.கட்சி என்ற அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் தமிழ்,முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெகுவிரைவில் விஜயம் செய்யவுள்ளேன்

கேள்வி – வங்குரோத்து நிலைக்கு ஊழல் மோசடி பிரதான காரணம் என்று சர்வதேச மட்டத்தில் பேசப்படுகிறது. ஊழல் தொடர்பில் வழங்கும் வாக்குறுதிகளை செயல் வடிவில் செயற்படுத்துவீர்களா?

பதில் - நிச்சயமாக. எமது முதல் பணி அதுவே.ஊழல்வாதிகள் யார் என்பதை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைய செயற்படுவோம். ஊழல் மோசடி செய்யப்பட்ட அரச நிதியை மீண்டும் அரசுடமையாக்குவோம. ஊழலை ஒழிக்காமல் நாடு என்ற ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது.

கேள்வி – உங்களின் எதிர்வாதிகளான எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பற்றி என்ன நினைக்கீன்றீர்கள்?

பதில் - அவர்களை பரீட்சித்து பார்க்க வேண்டிய தேவையில்லை. அரசியலில் அவர்கள் பலவீனமடைந்துள்ளார்கள். மக்களால் புறக்கணிக்கப்படும் அரசியல் கலாசாரத்தையே அவர்கள் முன்னெடுத்துச் செல்வார்கள். ஆகவே அவர்கள் அரசியலில் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும்.

கேள்வி – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டீர்கள். சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை தவிர்த்து செயற்பட முடியுமா?

பதில் - சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு சமகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.நிலையான ஸ்திரத்தன்மைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட வேண்டும்.

சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ள இலக்கு திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஆகவே முன்வைக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டும்.

கேள்வி – பொருளாதார மீட்சிக்கான உங்களின் திட்டங்கள் என்ன ?

பதில் - சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதை மாத்திரமே அரசாங்கம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. 2027 ஆம் ஆண்டு வரை மாத்திரமே கடன் கிடைக்கும். வீழ்ச்சியடைந்துள்ள தேசிய சேவை மற்றும் கைத்தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு அவதானம் செலுத்துவோம்.

பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை எவரும் முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுவதில் உண்மையில்லை. நாங்கள் முன்வைத்த திட்டங்களை செயற்படுத்த அவர்கள் தயாரில்லை.அத்துடன் பொருளாதாரத்த இல்லாதொழித்தவர்களால் ஒருபோதும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது.

கேள்வி – ‘அனைவரும் நண்பர்கள் தம்பி’ (ஒக்கோம யாலுவோ மல்லி) என்ற சுலோகத்தில் நீங்களும் உள்ளடங்குவீர்களா?

பதில் ஒருபோதும் இல்லை. அந்த நண்பர்கள் அனைவரும் எமக்கு எதிராக நிச்சயம் ஒன்றிணைவார்கள்.

கேள்வி - மக்கள் எதிர்பார்க்கும் முறைமை மாற்றத்தை உங்களால் ஏற்படுத்த முடியுமா ?

 பதில் - நிச்சயமாக, நாங்கள் முன்வைத்த திட்டங்களுக்கு அமையவே மக்கள் முறைமை மாற்றத்தை கோரினார்கள். தமிழ், முஸ்லிம் , சிங்களம் என்று வேறுபட்டுக் கொண்டிருந்தால் முறைமை மாற்றம் என்பதை ஒருபோதும் அடைய முடியாது.ஆகவே தமிழ் முஸ்லிம் சகோதரர்கள் இந்த முறைமை மாற்றத்துக்கு தேசிய மக்கள் சக்தியுடனும்,எமது பயணத்துடனும் ஒன்றிணைய வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18
news-image

தமிழ்ப் பொதுவேட்பாளர் ‘குதிரைக் கொம்பு’

2024-04-15 18:20:26