ஒன்றுக்கு மேற்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஜேர்மனியின் கடைத் தொகுதிக் கட்டடம் ஒன்று மூடப்பட்டுள்ளது. ஜேர்மனியின் எஸ்ஸன் நகரில் உள்ள ‘லிம்பெக்கர் ப்ளெட்ஸ்’ என்ற கட்டிடமே இவ்வாறு மூடப்பட்டது.

பொலிஸாருக்குக் கிடைத்த உறுதியான தகவலையடுத்தே மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, கட்டிடத்தின் வாகனத் தரிப்பிடத்தில் இருந்து கட்டிடத்தின் கட்டுப்பாட்டை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர். இதனால், அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள நிலத்தடி ரயில் நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

மேலும், குண்டு செயலிழப்பு வீரர்கள் பலரும் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதா என்ற சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறித்த கட்டிடம், எஸ்ஸன்ஸ் நகரின் பிரமாண்ட கட்டிடங்களுள் ஒன்று என்றும், அங்கு இரு நூற்றுக்கும் அதிகமான கடைகள் இயங்கிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.