ஆதரவு தந்தால் மாத்திரம்தான் சஜித் மலையக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பாரா? : தமிழ் முற்போக்குக் கூட்டணியின் புதிர் ஒப்பந்தம்

16 Feb, 2024 | 05:08 PM
image

நாகநாதர்

மலையக பெருந்தோட்ட மக்களின் எந்த பிரச்சினைகளை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் இன்னும் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை, அவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப்பட்டு வருகின்றனர், இம்மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும்  எடுத்துச்செல்வோம் என்று கூறும் தமிழ் முற்போக்குக் கூட்டணி  தேர்தல் காலம் வந்தவுடன்  மாத்திரம், உள்நாட்டிலேயே இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம் என்றும்  அதற்கு சஜித் ஜனாதிபதியாகி செயலணி அமைத்தான் மாத்திரமே வழிபிறக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

மலையக மக்கள் இன்னும் தேசிய நீரோட்டத்தில் இணையவில்லையென கூறும் இந்த பிரதிநிதிகள், கடந்த 47 வருடங்களாக தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்படாமல் இருந்திருந்தால் பாராளுமன்றம் சென்றிருக்கத்தான் முடியுமா? 

பாராளுமன்றத்துக்கு சென்று சுகபோகங்களை அனுபவித்துவிட்டு, காலத்துக்குக் காலம் கட்சி மாறி தேர்தல் காலங்களில் மீண்டும் பாராளுமன்றம் சென்று இவர்கள் மலையக மக்களுக்கு செய்த நன்மைகள்தான் என்ன? 

சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் அப்படியானது தான். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நெருக்கடிகளை சமாளிக்கும் ஆற்றல் கொண்ட ஒரு தலைவர் இல்லை என்பதை அரகலய காலத்திலேயே இலங்கை மக்கள் நன்கறிந்துகொண்டனர். தேர்தல்களில் வெற்றி பெற்றே நாம் ஆட்சியமைப்போம் என்று கூறுவது தற்கால இலங்கை அரசியல் சூழ்நிலைகளில் வீராப்பு வசனமல்ல.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்திடம் இந்த அரசியல் சாணக்கியங்கள் எதையுமே காணமுடியவில்லை. அவரை ஒரு பலகீனமாக தலைவராகவே மக்கள் பார்க்கின்றனர். ஏன் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளேயும் அவர் அவ்வாறு கணிக்கப்படுகின்றார்.  மக்கள் மத்தியில் ஆதரவுத் தளம் அதிகரித்த  காரணத்தினாலேயே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர உட்பட குழுவினரை இந்தியா அழைப்பு விடுத்து அவர்களுடன் பேச்சு நடத்தியது.

இது எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்த்துடன் விளங்கும் சஜித்தின் கெளரவத்துக்குக் கிடைத்த அரசியல் அடியாகும். தனது குழுவில் உள்ளவர்களை அவரால் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள முடியவில்லை. சிலர் ரணிலுடன் செல்வதற்கு தயாராகவிருக்கின்றனர். கட்சியின் தவிசாளராக விளங்கும் சரத் பொன்சேக்கா கிட்டத்தட்ட சஜித்தை விட்டு சென்றுவிட்டார் என்றுதான் கூற வேண்டியுள்ளது. 

இப்படியொரு இக்கட்டான சூழ்நிலையில் தமிழர் தரப்பில் எவரும் தன்னை விட்டுச் சென்று விடக்கூடாது என்ற அச்சத்தில் அவர் முதன் முதலாக தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று.

ஆனால் இதற்கு கூட்டணிக் கட்சிகளின் விளக்கங்கள் சிறந்த அரசியல் நகைச்சுவைகளாக உள்ளன. ஒரு காலத்தில் மலையகத்தில்  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து இயங்கிய போது யார் ஆட்சியமைத்தாலும் அந்த பக்கம் இணைந்து கொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் கட்சியாக இருந்தது. 

அதற்கு அவர்கள் கூறும் ஒரே காரணம்  மக்களுக்காக, மக்களின் பாதுகாப்பாக என்பதாகும். அதே போன்றதொரு நிலைமை இப்போது தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. 

கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ‘மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளோம்’ என்று கூறியுள்ளார். 

பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவே சஜித்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம் என்று கூறியுள்ளார் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மலையக மக்கள் முன்னணித் தலைவர் வே.இராதாகிருஷ்ணன்.

சஜித்தின் அரசாங்கத்தில் மலையக மக்கள் சிறுதோட்ட உரிமையாளர் ஆவார்கள் எனக் கூறியுள்ளார் கூட்டணியின் மற்றுமொரு கட்சியான தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராகவும் மைத்ரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் விளங்கிய நல்லாட்சி அரசாங்கத்தில் மனோ கணேசனும் திகாம்பரமும் கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள். வே.இராதாகிருஷ்ணன்  இராஜாங்க அமைச்சர். தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆறு பேர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்தனர். 

அந்த  காலத்தில் ஏன் இந்த மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்க இவர்கள்  முயற்சிக்கவில்லை? 

தொழிலாளர்களின் சம்பளம், காணி உரிமைப் பற்றி வாய்திறக்காத இவர்கள் இப்போது ஒப்பந்தத்தைப் பற்றி பேசுகின்றனர். இந்த ஒப்பந்தம் சஜித் இவர்களுக்கு இட்டிருக்கும் கடிவாளம் என்பது தான் உண்மை. 

மலையக மக்களின் வாழ்க்கைத்தரம், நிலவுரிமை, வாழ்வாதாரத்துக்கான ஊதியம் போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டு தான் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது என்று கூறும் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஆதரவு தருவதாகயிருந்தால் மூன்று பேருக்காவது அமைச்சுப்பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்திருக்காது என்பது என்ன நிச்சியம்? 

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மலையக மக்களின் உரிமைகள் பற்றி   எத்தனை தடவை பாராளுமன்றில் கதைத்திருக்கின்றார்?

‘நான் ஜனாதிபதியானால் தான் செயலணி அமைக்கப்பட்டு மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்ப்பேன்’  என சஜித் கூறுவாராயின் இது எவ்வளவு பெரிய சுயநலம்? மலையக மக்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் எனக்கு ஆதரவு வழங்கினால் மாத்திரமே நான் அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஆராய்வேன் என்பது தானே இதன் அர்த்தம்?  

எமக்கு அமைச்சுப்பதவிகள் வழங்கினால் மாத்திரமே நாமும் ஆதரவளிப்போம் என்ற உள்நோக்கத்தில் தான் மலையகத்தின் சகல அரசியல் கட்சிகளும் தற்போதைய நெருக்கடி அரசியலை  தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு பயணிக்கின்றன. இதில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கட்சிகள் மாத்திரம் விதிவிலக்கா என்ன? 

சஜித் பிரேமதாச ஒரு பலகீனமான எதிர்க்கட்சித் தலைவராக விளங்குகிறார் என்றால் அவரோடு இருக்கும் அல்லது அவருக்கு ஆதரவு தரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் தனது பலகீனத்தை இந்த ஒப்பந்தம் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. தோட்டத்தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் சஜித் பிரேமதாச இது வரை காத்திரமான எந்த  கருத்துகளையும் பாராளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் வெளிப்படுத்தவில்லை. 

காலம் காலமாக மலையக மக்களை பணயம் வைத்து, ஆட்சியமைக்கும் அரசாங்கங்களுடன் இணைந்து கொண்டு தமது சுகபோகங்களையும் சுயநலங்களையும் மாத்திரம் கருத்திற்கொண்டு அரசியல் செய்யும் கலாசாரத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணி கட்சிகளும் தம்மை இறுக பிணைத்துக்கொண்டிருக்கின்றன. ஒப்பந்தத்தில் என்ன உள்ளது என்பதை கூட்டணி பகிரங்கப்படுத்த வேண்டும். 

மலையக மக்களின் எதிர்காலத்துக்காகத்தான் ஒப்பந்தம் என்றால் அவர்களின் எதிர்காலம் பற்றி என்னென்ன விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அந்த மக்களும் அறிய வேண்டியது முக்கியம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18
news-image

தமிழ்ப் பொதுவேட்பாளர் ‘குதிரைக் கொம்பு’

2024-04-15 18:20:26