(நெவில் அன்தனி)
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (14) நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட்களால் இலங்கை அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முழுமையாக சுவீகரித்தது.
ஆப்கானிஸ்தானினால் நிர்ணயிக்கப்பட்ட 267 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 35.2 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
பெத்தும் நிஸ்ஸன்கவின் அபார சதம், அவிஷ்க பெர்னாண்டோவின் அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின.
இந்தத் தொடரில் அபாராமாக துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க தனது 52ஆவது போட்டியில் 44ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 2,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை வீரர்களில் குறைந்த போட்டிகளில் 2,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த வீரர் என்ற சாதனைக்கு உரித்தானார்.
இன்றைய கடைசிப் போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்கவும் அவிஷ்க பெர்னாண்டோவும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 173 ஓட்டங்களைப் பகிர்ந்து வலுவான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
அவர்கள் இருவரும் இந்தத் தொடரில் பகிர்ந்த இரண்டாவது சத இணைப்பாட்டம் இதுவாகும். முதலாவது போட்டியில் இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 182 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
அவிஷ்க பெர்னாண்டோ 91 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கவனக்குறைவான அடி தெரிவினால் விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் 66 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களை விளாசினார்.
அவிஷ்க பெர்னாண்டோ ஆட்டம் இழந்த பின்னர் குசல் மெண்டிஸுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 78 ஓட்டங்களை பெத்தும் நிஸ்ஸன்க பகிர்ந்தார்.
குசல் மெண்டிஸ் 40 ஓட்டங்களைப் பெற்றார்..
மறுபக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தம் நிஸ்ஸன்க 101 பந்துகளில் 16 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 118 ஓட்டங்களைக் குவித்தார்.
அணியின் வெற்றிக்கு மேலும் 14 ஓட்டங்கள் மாத்திரம் தேவைப்பட்ட நிலையில் பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டம் இழந்தார்.
சதீர சமரவிக்ரம 8 ஓட்டங்களுடனும் சரித் அசலன்க 7 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் வெற்றி இலக்கை அடைய உதவினர்..
பந்துவீச்சில் கய்ஸ் அஹ்மத் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 266 ஓட்டங்களைப் பெற்றது.
ரஹ்மத்துல்லா குர்பாஸ், ரஹ்மத் ஷா, அஸமத்துல்லா ஓமர்ஸாய் ஆகியோரின் திறமையான துடுப்பாட்ட உதவியுடன் ஆப்கானிஸ்தான் 40ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், ஆப்கானிஸ்தான் அதன் பின்னர் மோசமாகத் துடுப்பெடுத்தாடி கடைசி 6 விக்கெட்களை வெறும் 43 ஓட்டங்களுக்கு இழந்தது.
மொத்த எண்ணிக்கை 39 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் இப்ராஹிம் ஸத்ரான் 13 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார்.
அதன் பின்னர் மற்றைய ஆரம்ப வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸுடன் 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த ரஹ்மத் ஷா 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது குர்பாஸ் 48 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
குர்பாஸைத் தொடர்ந்து சொற்ப நேரத்தில் அணித் தலைவர் ஹஷ்மத்துல்லா ஷஹிடி 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (108 - 3 விக்.)
இந் நிலையில் ரஹ்மத் ஷாவும் அஸ்மத்துல்லா ஓமர்ஸாயும் 4 ஆவது விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ரஹ்மத் ஷா திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 2ஆவது தொடர்ச்சியான அரைச் சதத்தைப் பூர்த்தி செய்து 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
தொடர்ந்து அஸ்மத்துல்லா ஓமர்ஸாய், இக்ரம் அலிகில் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து 5ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலமான நிலைக்கு இட்டுச் செல்ல முயற்சித்தனர்.
ஆனால், மொத்த எண்ணிக்கை 223 ஓட்டங்களாக இருந்தபோது இக்ரம் அலி 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அவர் உட்பட கடைசி 6 விக்கெட்கள் 43 ஓட்டங்களுக்கு சரிந்தன.
அஸ்மத்துல்லா ஓமர்ஸாய் 54 ஓட்டங்களைப் பெற்று களம் விட்டு வெளியேறினார்.
இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானின் கடைசி 9 விக்கெட்களை 25 ஓட்டங்களுக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சுருட்டியமை குறிப்பிடத்தக்கது.
பந்துவீச்சில் ப்ரமோத் மதுஷான் 45 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அணிக்கு மீளழைக்கப்பட்ட துனித் வெல்லாலகே 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் 3 வருடங்களுக்குப் பின்னர் விளையாடும் அக்கில தனஞ்சய 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் ஆகிய இரண்டு விருதுகளையும் பெத்தும் நிஸ்ஸன்க தனதாக்கிக்கொண்டார்.
அவர் மூன்று போட்டிகளில் ஒரு இரட்டைச் சதம், ஒரு சதம் உட்பட 173.00 என்ற சராசரியுடன் 346 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்றார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையாகவும் இது அமைந்தது.
முதல் போட்டியில் சாதனைமிகு 210 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன் அடுத்த இரண்டு போட்டிகளில் 18 ஓட்டங்களையும் 118 ஓட்டங்களையும் பெற்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM