உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும் அதற்குரிய பரிகாரங்களும்..!

14 Feb, 2024 | 05:05 PM
image

தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற ஒரு முதுமொழியை எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இது எம்முடைய வாழ்க்கைக்கு அனைத்து நிலைகளிலும் பொருத்தம் என்றாலும்.., எம்முடைய ஆரோக்கியத்திற்கு சாலப் பொருத்தம் என்றும் முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிலர் புகை பிடிப்பார்கள். சிலர் மது அருந்துவார்கள். சிலர் மாமிசம் சாப்பிடுவார்கள். சிலர் இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு சைவ உணவுகளை மட்டுமே தீவிரமாக முன்னிலைப்படுத்தி பசியாறுவார்கள்.

ஆனால் இவர்கள்தான் ஆரோக்கிய சீர்கேட்டிற்கு அடிக்கடி ஆளாவார்கள். இது அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு முறையை காட்டிலும் அவர்களின் ஜாதக கட்டங்களில் உள்ள கிரகங்களே அவர்களின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கின்றன என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் இந்த பிறவியில் எந்த நோயினால் பாதிக்கப்படுவார் என்பதனையும் அவருடைய ஜாதக கட்டங்களே நிர்ணயிக்கின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அதனுடைய காரகத்துவ தன்மையுடன் சுப பலன்களை வழங்குவதுடன் அசுப பலனாக உடல் ஆரோக்கியத்தின் மீதும் பார்வையை பதிக்கிறது. இதனால் நாம் நோயினால் பாதிக்கப்படுகிறோம். இதற்கு வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரிடம் சிகிச்சை பெற்றால் நிவாரணம் பெற முடியும். இந்நிலையில் உங்களுக்கு எம்மாதிரியான பாதிப்புகளை கிரகங்கள் ஏற்படுத்தும் என்பதை மருத்துவ சோதிட குறிப்புகள் தெளிவாக உணர்த்துகின்றன. அதைப் பற்றிய விவரங்களை தொடர்ந்து காண்போம்.

ஒருவருடைய ஜாதகத்தில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய சூரியனின் மூன்று நட்சத்திரங்களில் எந்த கிரகமும் இடம்பெறவில்லை என்றால்.. அவர்களுக்கு ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் எந்த வயதில் வேண்டுமானாலும் கண் பார்வை தொடர்பான பிரச்சனை வரக்கூடும். கண்கள் மட்டுமல்ல நாடி நரம்புகளிலும் பாதிப்பு ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு தலைமுடி உதிர்தல் கூட நிகழலாம். இவர்கள் இத்தகைய பாதிப்பினை வைத்தியரின் ஆலோசனையுடன் மூக்கு கண்ணாடி அணிதல், கான்டாட் லென்ஸ் அணிதல், விக் வைத்துக் கொள்ளல் போன்ற பல வகையினதான சிகிச்சைகளைப் பெற்றாலும்... பரிகாரமாக வாரம் ஒரு முறையாவது அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து உடலில் உள்ள சூட்டை தணித்து சமநிலைக்கு கொண்டு வர வேண்டும்.

மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகிய சந்திரனின் நட்சத்திரத்தில் கிரகங்கள் இல்லையென்றால்... பெண்கள் மற்றும் பெண்மணிகளுக்கு கர்ப்பப்பை தொடர்பான நோய்கள் ஏற்படக்கூடும். ஆண்களாக இருந்தால் அவர்களுக்கு வயிறு மற்றும் செரிமான மண்டல பிரச்சனைகள் ஏற்படக்கூடும். நுரையீரல் பாதிப்பு, மனச்சோர்வு, மன அழுத்தம், மனநிலை தடுமாற்றம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சில பெண்மணிகளுக்கு மாதவிடாய் சுழற்சியில் தொடர்ச்சியாக பிரச்சனை வரக்கூடும். இவர்கள் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியரின் ஆலோசனையுடன் நிவாரண சிகிச்சைகளை மேற்கொண்டாலும்... பரிகாரமாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டு, அருவிகளில் நீராடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அருவிகளின் நீராடும் போது இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைய தொடங்கும். 

ஒருவருடைய ஜாதகத்தில் மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்று செவ்வாய்க்குரிய நட்சத்திரங்களில் கிரகங்கள் இல்லையென்றால் ரத்தம், ரத்தவோட்டம், ரத்த சோகை, இரத்தக் கட்டி உள்ளிட்ட ரத்தம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படக்கூடும். சில பெண்மணிகளுக்கு சிசு சிதைவு பாதிப்புகளையும் உண்டாக்கும். வேறு சிலருக்கு தீக்காயங்கள், விபத்து, காக்காய் வலிப்பு, பாத வெடிப்பு, காய்ச்சல்களையும் ஏற்படுத்தும். வைத்தியர்களின் நிவாரண சிகிச்சையை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டாலும், இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால்... உணவு கட்டுப்பாட்டை ஆயுள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகள், கோழி இறைச்சி, நூடுல்ஸ், எளிதில் செரிமானம் ஆகாத உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய புதனின் மூன்று நட்சத்திரங்களில் கிரகங்கள் இல்லை என்றால் மனநிலையில் தடுமாற்றம், நரம்பு தளர்ச்சி, நரம்பு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும். சிலருக்கு இயல்பான அளவைவிட கூடுதலாக வியர்வை வெளிப்படும். ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு உடலுறவின் போது முழுமையான ஆர்வமின்மை ஏற்பட்டு பாலியல் செயல்பாட்டில் குறைபாடு உண்டாகும். தலைச்சுற்றல், கேட்கும் திறனில் குறைபாடு, கை, கால் போன்றவை அடிக்கடி மரத்து போகும் தன்மை ஏற்படக்கூடும். சிலருக்கு தூக்கமின்மை பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடும். மேற்கூறிய பாதிப்புகளுக்கு நீங்கள் நிவாரண சிகிச்சைகளை மேற்கொண்டாலும் தியான பயிற்சி, மூச்சு பயிற்ச்சியை மேற்கொள்வது தான் ஒப்பற்ற பரிகாரம்.

ஒருவருடைய ஜாதகத்தில் பரணி, பூரம், பூராடம் ஆகிய சுக்கிர பகவானின் மூன்று நட்சத்திரத்தில் கிரகங்கள் எதுவும் இல்லையென்றால்.. பால்வினை நோய்த்தொற்றுக்கு எளிதில் ஆளாவார்கள். நீரிழிவு, பிறப்பு உறுப்புகளின் பலவீனம், சிறுநீர் தொடர்பான பாதிப்பு, கருப்பை கோளாறு, கண் புரை போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இவர்கள் தங்களுடைய பாதிப்புகளுக்கு வைத்தியர்களிடம் நிவாரண சிகிச்சையை மேற்கொண்டாலும்... நாளாந்தம் குடிக்கும் நீரின் அளவை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒருபோதும் குறைத்துக் கொள்ளக் கூடாது. அதேபோல் உறக்கத்தில் ஒரு ஒழுங்கினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எட்டு மணித் தியாலத் தூக்கத்தை ஆயுள் முழுவதும் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய குருவின் மூன்று நட்சத்திரங்களில் கிரகங்கள் எதுவும் இல்லை என்றால்.. மஞ்சள் காமாலை பாதிப்புக்கு ஆளாகுவார்கள். மேலும் சிலருக்கு தலைசுற்றல், சோர்வு, ரத்த சோகை, நாட்பட்ட நோய்கள், பித்தப்பை கோளாறுகள், தூக்கமின்மையால் ஏற்படும் மனநிலை மாற்றம் போன்ற பாதிப்புகளை பல்வேறு சூழல்களில் ஏற்படுத்தும். இவர்கள் தங்களுடைய பாதிப்புகளுக்கு வைத்தியர்களிடம் ஆலோசனை பெற்று சிகிச்சை பெற்றாலும் சூடான உணவுகளை (திட.. திரவ..) சாப்பிடக்கூடாது. அதற்காக மிகவும் ஆறிப்போன உணவையும் உண்ணக்கூடாது. இளஞ்சூடுடன் கூடிய உணவை தொடர்ச்சியாக  பசியாற வேண்டும். எப்போதும் உணவை அளவுடன் பசியாற வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய சனி பகவானின் மூன்று நட்சத்திரங்களில் கிரகங்கள் எதுவும் இல்லையென்றால்.. பக்கவாத பாதிப்பு ஏற்படக்கூடும்.‌ நாட்பட்ட நோய்களும், புற்றுநோய் பாதிப்புகளும் உண்டாகும்.‌ யானைக்கால் நோய், ஞாபக மறதி, சுரப்பிகள் தொடர்பான பாதிப்பு போன்றவை உண்டாகும்.‌ இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு வைத்தியர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றாலும் ஆயுள் முழுவதும் நாளாந்தம் நடைபயிற்சி மேற்கொள்வதை கைவிடக்கூடாது. குளிர்சாதன பெட்டிகளில் வைத்து பிறகு மீண்டும் சூடுப்படுத்தி பழைய உணவுகளை சாப்பிடுவதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

ஒருவருடைய ஜாதகத்தில் திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய ராகு பகவானின் மூன்று நட்சத்திரங்களில் கிரகங்கள் எதுவும் இல்லையென்றால்.. இருமல், குடல் தொடர்பான பாதிப்புகள், வயிற்றில் புண், தொழுநோய் பாதிப்பு, வயிற்றில் கட்டி, கல்லீரல் நோய், ரத்தக்குழாய் பாதிப்பு, அடைப்பு போன்றவை ஏற்படக்கூடும். இவர்கள்  சூழல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளுக்கு வைத்தியர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றாலும் இயற்கையான உணவுகளை தொடர்ந்து பசியாற வேண்டும். இவர்கள் ஆங்கில மருத்துவத்தை காட்டிலும் இயற்கை மருத்துவம் அல்லது மாற்று மருத்துவம் என தற்போது கருதப்படும் சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ சிகிச்சை முறைகளை பயன்படுத்த வேண்டும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இலைகள், மூலிகை பொடிகள் போன்றவற்றினை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஆரோக்கியமாக வாழ இயலும்.

ஒருவருடைய ஜாதகத்தில் அஸ்வினி, மகம், மூலம் ஆகிய கேது பகவானின் மூன்று நட்சத்திரங்களில் கிரகங்கள் எதுவும் இல்லையென்றால்... குடற்புழு, குடல் அடைப்பு, குருதி அழுத்தம், பேச்சில் தடுமாற்றம், காய்ச்சல், காது கேளாமை போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.‌ சிலருக்கு நாட்பட்ட மலச்சிக்கல் பாதிப்பும் ஏற்படக்கூடும்.‌ தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு வைத்தியரின் ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றாலும் தங்களுடைய உணவு பட்டியலில் வாழைப்பழத்தை இடம்பெறச் செய்ய வேண்டும்.‌ பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். சாறாக இல்லாமல் பழங்களாகவே சாப்பிட வேண்டும்.

தகவல் முரளி - தொகுப்பு சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வைத் தரும் திருமுல்லைவாயில்...

2024-04-18 17:30:19
news-image

தோஷங்கள் அனைத்தையும் நீக்கி அருள் பாலிக்கும்...

2024-04-17 17:44:50
news-image

யோகங்களை அருளும் யோகி தலங்கள் மற்றும்...

2024-04-16 14:24:26
news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11