யாழ். இசை நிகழ்ச்சி - கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் !

Published By: Digital Desk 3

13 Feb, 2024 | 09:38 AM
image

ஆர்.பி.என். 

யாழ். முற்றவெளியில் கடந்த 9ஆம் திகதி நடைபெற்ற தென்னிந்திய கலைஞர்களின் இசை நிகழ்ச்சி  குழப்பத்துக்கு மத்தியில் நிறைவடைந்தமை  இன்று பரவலாக  பேசு பொருளாக மாறியுள்ளதுடன்   இது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துக்களையும்  தெரிவித்துள்ளனர். குறிப்பாக யாழ். ரசிகர்கள்,தென்னிந்திய  கலைஞர்கள் மீதும், அதேபோன்று தென்னிந்திய  கலைஞர்கள் யாழ் . ரசிகர்கள்  மீதும்  பரஸ்பரம் நல்ல அபிப்பிராயமும், அன்பும் கொண்டவர்கள். இவை அனைத்தையும்  கவனத்தில் கொண்டே இசை நிகழ்ச்சிகள் காலாகாலமாக  ஒழுங்கு செய்யப்பட்டு வருகின்றன . 

அரசியல் , பொருளாதார நிலைமைகளுக்கப்பால்  துரதிஷ்டவசமாக,  தென்னிந்திய  கலைஞர்களும், யாழ் .மக்களும் இசை மீது கொண்டுள்ள அன்பைக் கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்த இந்த சம்பவம் மிகுந்த மன வருத்தத்தை இரு தரப்பிலும் ஏற்படுத்தி விட்டது என்பதே உண்மை.  எனவே இதிலிருந்து மீள்வதுடன்   தவறு எங்கு நடந்தது என்பதைக் கண்டறிந்து அதனை   சீர் செய்ய  வேண்டியது  சகல தரப்பினரதும் கடமையாகும் .

இசை நிகழ்ச்சிகளின் போது , ரசிகர்கள்  தங்கள் அன்புக்குரியவர்களை  நெருக்கமாக காண்பதற்கு  முண்டியடித்து முன் செல்ல முனைவது சர்வ சாரதாரணமானது. அண்மையில் சென்னையில் நடைபெற்ற  இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது  இதனை  ஒத்த சம்பவம் ஒன்று நடந்தது . அதனால் ரசிகர்கள் பெரும் சங்கடமடைந்தார்கள்  சமூக வலைத்தளங்கள் கடுமையாக விமர்சித்தன . அதனை தொடர்ந்து ரகுமான் மன்னிப்பு கோரியதுடன் , கட்டணங்களை திருப்பி செலுத்தவும் செய்தார் .

நிலைமை இவ்வாறிருக்க , யாழில் நடந்த சம்பவம்  பலரையும் முகம் சுளிக்க வைத்ததுடன் அதனை எவ்வாறு  தடுத்திருக்கலாம் என்று  சிந்திப்பது அவசியம். இதன் ஏற்பாட்டாளர்கள் யாழ். மக்களுக்கு நல்லதோர் இசை நிகழ்ச்சி ஒன்றை வழங்க  வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடனும், தங்கள் புதிய முயற்சிகளை மக்கள் மத்தியில் அறிமுகம் செய்யும் நோக்குடனும்  பல கோடி ரூபா செலவில் இதனை ஒழுங்கு செய்திருக்கலாம்.

இந்த வகையான பிரம்மாண்டமான நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யும் போது விசேட ஊடகவியலாளர் மாநாட்டை  ஒழுங்கு செய்து ஊடகங்கள் வாயிலாக, மக்களுக்கு தெளிவுபடுத்தி இருக்கலாம். அதன்மூலம்  சமூக ஊடகங்களில் இசை நிகழ்ச்சி தொடர்பில் எழுப்பப்பட்ட சந்தேகங்கள், மற்றும் அநாவசிய கருத்து மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்க முடியும் என்பது பலரதும்   அபிப்பிராயம். அண்மையில் சந்தோஷ் நாராயணின் யாழ்.கானம் இசை நிகழ்ச்சி  இலவசமாக மிகுந்த வரவேற்புடன்  நடந்து முடிந்ததையும் கவனத்தில் கொள்ள வேண்டும் . 

நிகழ்ச்சி ஒழுங்கமைப்பு முகாமைத்துவம் மிகவும் பிரதானமானது,  முதலில் இலவச  இசை நிகழ்ச்சி என்ற பிரசாரம் மேலோங்கும் போது ரசிகர்கள்  அலைமோதவே  செய்வார்கள் . பின்னர் அதில் ஒரு பகுதி  பணம் மறுபகுதி இலவசம் என வகைப்படுத்தப்பட்டிருந்ததுடன்,  வரிசை அமைப்பிலும், ஆசன ஒழுங்கமைப்பிலும் காணப்பட்ட  ஏற்றத்தாழ்வு ரசிகர்களை ஒருவகையில் பாதிக்கவே செய்தது  என்பதில் சந்தேகமில்லை ...

அந்த சந்தர்ப்பத்தில் எப்படியாவது முன்னால் செல்ல வேண்டும் என்பது சாதாரண இயல்பு. மேலும், முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வடக்கின்  பல பாகங்களில் இருந்தும் வந்து கூடியுள்ளனர். ரசிகர்களின் தொகை சுமார் 50 ஆயிரத்தையும்  தாண்டிவிட்டதாக சொல்லப்படுகின்றது. இதனை ஏற்பாட்டாளர்கள் மட்டுமல்ல எவரும் எதிர்பார்த்திருக்கமுடியாது. மடை திறந்த வெள்ளம் போன்று மக்கள் வந்து குவிந்துள்ளனர். அந்த வகையில் இது ஒரு  வெற்றிகரமான நிகழ்ச்சியாகவே பார்க்க வேண்டும்.

இது ஒருபுறமிருக்க,  இசை நிகழ்ச்சியாக மட்டுமன்றி  இது நட்சத்திரங்களின் சங்கமமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், முதலில் இலவசம் என்று கூறப்பட்ட நிகழ்ச்சி , பின்னர்  டிக்கட் நிகழ்ச்சியாக மாற்றப்பட்டதாகவும் , 25 ஆயிரம் , 7ஆயிரம், 3ஆயிரம் ரூபா என  வசூலிக்கப்பட்டதாகவும், மேலும் நட்சத்திரங்களுடன் படம் எடுக்க 30 ஆயிரம்  ரூபா பணம் செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவை அனைத்துக்கும் மத்தியில் குறித்த கலைஞர்கள் யாழ் வர விரும்பவில்லை என்றும் தாங்கள் மிக கஷ்டபட்டே அழைத்து வந்ததாகவும் மேடையில் கூறப்பட்டது. அது யாழ் , மக்களை மிகவும் மலினப்படுத்துவதாக அமைந்து விட்டது என  சமூக ஊடகங்களால்  விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஒரு முக்கிய விடயத்தை கருத்தில் கொள்ள வேண்டும், பிரதானமாக அங்கு வந்த ரசிகர்கள் தங்கள் விருப்பத்துக்குரியவர்களை அருகில் நின்று பார்க்க முண்டியடித்தார்களே தவிர,  எந்த வகையான வன்முறைகளிலும்  ஈடுபடவில்லை, பெண்கள் உட்பட எவரையும் அச்சுறுத்தவோ , மதுபோதையில் காணப்படவோ இல்லை.  சாதாரணமாக ஒரு சிறு சம்பவம் நடந்திருந்தாலே  பலர் காயமடையவும் , விரும்பத்தகாத நிகழ்வுகள் இடம்  பெறவும் வாய்ப்பு கிட்டியிருக்கும். மேலும் தள்ளு முள்ளு காரணமாக மூவர் காயங்களுக்குள்ளானதாகக்  கூறப்படுகிறது.  அந்த வகையில் இதனை எவரும் குழப்ப எத்தனிக்க வில்லை என்பது  தெளிவு . 

யுத்தம் நிலவிய காலகட்டத்தில் கூட தேனிசை செல்லப்பாவின் நிகழ்வு, ஒருபுறம் படையினர் மறுபுறம் புலிகள் என்று  இருதரப்புக்கும் நடுவே யாழ்.முற்றவெளியில்  மிக அமைதியாக நடந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், குறித்த நிகழ்வில் கலைஞர்களை பார்க்க முடியாத  மிக  நீண்ட இடைவெளியும், ஆதங்கமுமே  ரசிகர்களை முன்னோக்கி வர வைத்தது எனலாம். இதனால் கலவரமடைந்த முன்வரிசையில் இருந்த மக்கள், அங்கிருந்து வெளியேற ஆரம்பித்தது சற்று அமைதியற்ற சூழலுக்கு வழிவகுத்தது.

மேலும்,  கலாசாரம் குறித்து பேசப்படுகிறது, வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகளும் . ஒன்றுக்கும் அதிகமான நவீன  கைபேசிகளுக்கும்  இளம் வயதினர் மத்தியில் பவனி வரும் போது , நாம் மற்றவர்களை கை  நீட்டுவது சரியாகப் படவில்லை  என்ற கருத்தும் பலமாக நிலவுகிறது.

அத்துடன் , தனிப்பட்ட ரீதியில் ஒருவரை பகிரங்கமாக "போஸ்டர்"  ஒட்டி  மனம் நோகடிக்கும் பழக்கம்  இதுவரை  யாழ் . மண்ணில்  இடம் பெற்றதில்லை அதனை எவர் செய்திருந்தாலும் அது கண்டனத்துக்குரியது என்பதே யாழ் . மக்களின் கருத்தாகும் . 

கலைஞர்களை, கலைஞர்களாக பார்க்க வேண்டியது தமிழ் பாரம்பரியம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. வரலாற்று ரீதியான இலங்கை -இந்திய கலை பாரம்பரியத்தை நாம்  கட்டி வளர்க்க வேண்டுமே தவிர, அதற்கு ஊறு விளைவிக்கக் கூடாது  இன்று, ஈழத்து கலைஞர்கள் பலர் தமிழ் நாட்டுக்குச்  சென்று  தங்கள் திறமைகளை காட்டி ஜெயித்து வருகிறார்கள். அதனைக்  கொண்டாடும் நாம், அந்தக்  கலைஞர்கள் நமது மண்ணை மிதிக்கும் போது அவர்களை  கௌரவிக்க வேண்டும் . அந்த விடயத்தில்  இங்கு தவறு இடம்பெறவில்லை.

உண்மையில் இங்கு அதனை ஒழுங்கு செய்த முறை மற்றும் பாரிய இடைவெளி  என்பன பார்வையாளர்களை வெறுப்படைய செய்ததாகவே கூறப்படுகிறது. யாழ். முற்றவெளி ஒரு  "ஸ்டேடியம்"  போன்று அமைந்திருத்தாலோ அல்லது மக்கள் வருகையை கருத்தில் கொண்டு அதற்கமைய  ஒழுங்கு செய்யப்பட்டிருந்தாலோ, இந்த நிலைமை உருவாக்கி இருக்கமாட்டாது.  

இதேவேளை , யாழில் நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்து அனைத்து கலைஞர்களும் திருப்தியாக நாடு திரும்பியுள்ளதாக ஹரிஹரன் இசை நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டு குழு முக்கியஸ்தர்  ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவில் கூட இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டத்தை  நாங்கள் பார்க்கவில்லை. மக்கள் இவ்வளவு அன்பு செலுத்தி உள்ளார்கள்  என்றும் கூறியுள்ளார்.

நிகழ்ச்சி இடைநடுவில் நிறுத்தப்படவில்லை. முழுமையாக நடாத்தப்பட்டது. இடையில் சிறிது நேரம் மாத்திரமே நிறுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குறை என இதனைக்  கூற முடியாது. மக்களின் உணர்வின் வெளிப்பாடு என்றே கூற வேண்டும். அருமையான நிகழ்ச்சி. இப்படியான ஒரு நிகழ்ச்சி கொழும்பில் கூட நடத்தப்படவில்லை. இவ்வளவு நட்சத்திரங்களையும் பார்த்ததன் பின்னர் அவர்கள் தமது

உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். இவ்வளவு பெரிய ரசிகர்கள் ஒன்று கூடினால், எந்தவொரு ஏற்பாட்டாளராலும் கட்டுப்படுத்த முடியாது. ரசிகர்கள் முன்னோக்கி நகர்ந்தார்கள். அவ்வளவு தான். அதுவொரு பெரிய பிரச்சினை கிடையாது. என்று விளக்கியுள்ளார் .

இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கருத்து தெரிவிக்கையில், இதனை நான் ரசிகர்களின் தவறு என்று கூறமாட்டேன். அவர்கள் இசை நிகழ்ச்சிகளில் முண்டியடிப்பது இயல்பானது, அதனை ஒரு பிரச்சினையாகப் பார்க்கக்  கூடாது. சாதகமாக பார்க்க வேண்டும் . கொழும்பில், ஷாருக்கானின் நிகழ்ச்சி ஒழுங்கு செய்த போது  குண்டு வெடிப்புச்  சம்பவம் ஒன்று  இடம்பெற்றது . 

பலர் காயமடையவும் ,சிலர்  இறக்கவும் நேர்ந்தது . அவையாவும் சரித்திரம். யாழ்ப்பாணத்தில் சரியான ஸ்டேடியம் ஒன்று இல்லை , முற்றவெளி  நிகழ்ச்சிகளை  நடத்த ஏற்றதல்ல  எனவே யாழ். மாநகர சபையும், அரசியல் தலைவர்களும் முதலில் அதுகுறித்து சிந்திக்க வேண்டும். அதற்கான சூழல் இருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது என்றார். 

இது தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், "இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசங்களில் இடம்பெறுவது வேதனையளிக்கின்றது. எமது மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்வியலையும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றுவதற்கு எமது புலம்பெயர் உறவுகளின் முதலீடுகளை நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம். இந்நிலையில் புலம்பெயர் முதலீட்டாளர் ஒருவரின் முன்முயற்சியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில், இவ்வாறான அசௌகரியங்கள் ஏற்படுவது, மக்கள் நலன் சார்ந்த எமது எதிர்பார்ப்புகளுக்கு பின்னடைவுகளையே ஏற்படுத்தும். எதிர்பார்ப்புக்கும் அதிகமான மக்கள் வருகை தந்தமையும், ஒழுங்குபடுத்தலில் இருந்த குறைபாடுகள் சிலவுமே இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு காரணமாக அமைந்துள்ளது." என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

யாழ். முற்றவெளி மைதானத்தில் நடைபெற்ற  "Hariharan Live in Concert and Star Night" தொடர்பாக கலவையான விமர்சனங்களை இலங்கையிலும் இந்தியாவிலும் வெளிநாடுகளில் இருந்தும் வருவதை அவதானிக்க முடிகிறது. யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சிகள் நடாத்தப்படுவதும், அதனூடாக முதலீடுகள் கொண்டுவரப்படுவதும் வரவேற்கப்பட வேண்டியதாக இருந்தாலும், அந்த நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்களில் நெகிழ்ச்சித்தன்மை இருக்க கூடாது. நிகழ்ச்சி குறித்த அறிவிப்புகள், நுழைவுச்சீட்டுகளினால் ஏற்பட்ட குழப்பங்கள், பங்கேற்கும் கலைஞர்களில் இறுதி நேரத்தில் செய்யப்பட்ட மாற்றங்கள், மைதான ஏற்பாடுகள், பாதுகாப்பு சார் குறைபாடுகள் என பல்வேறு சர்ச்சைகள்  குழப்பத்தின் காரணிகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன. மறுபக்கத்தில் நிகழ்வை பார்வையிடச் சென்ற மக்களை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையிலும் சிலர் விமர்சிக்கிறார்கள்.

அவர்களில் சிலர் செய்த பிழைகளை ஒட்டுமொத்த யாழ்ப்பாண மக்கள் மீது திருப்புவதென்பது திட்டமிட்ட அரசியலாகவே தென்படுகிறது.

தவறிழைத்த மக்களை நான் கண்டிப்பதோடு, மண்ணிற்கு வருகை தந்திருக்கும் விருந்தினர்களை சங்கடப்படுத்தாமல் பார்த்துக்கொள்வதும் எமது மரபுசார் பண்பாடு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதேவேளை இதனைப் போல பெருமளவில் மக்கள் ஒன்றுகூடும், இந்திரவிழா, வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா, ஆலய விழாக்கள் உள்ளிட்டவற்றில் கண்ணியத்தோடு செயற்பட்டவர்கள் எம்மக்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, சம்பவத்தில் இடம்பெற்ற தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் இன்னும் சிறப்பான வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என துறை சார்ந்தவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இதுவல்ல யாழ்ப்பாண மக்களின் அடையாளம்” என கூறியுள்ளார்.

எவ்வாறு இருந்த போதிலும், குறித்த இசை நிகழ்சி  ஒவ்வொருவரின் பார்வைக் கேற்ப விமர்சிக்கப்பட்டு வருகின்றது . எதுவாக இருப்பினும்  பொது நிகழ்வொன்றில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டியது அனைவரதும் கடப்பாடாகும். அந்த வகையில் இந்த நிகழ்ச்சி  அனைவருக்கும் மறக்க முடியாத நிகழ்வாக மாத்திரமன்றி , அதிகம்   கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றாகவும்  இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18
news-image

தமிழ்ப் பொதுவேட்பாளர் ‘குதிரைக் கொம்பு’

2024-04-15 18:20:26