அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்பதற்கான ஆதாரம் ஒன்றை அவரது உறவினர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வேறு நாட்டில் பிறந்த ஒருவர் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது என்ற விதி அந்நாட்டுச் சட்டத்தில் உள்ளது. இதனால், ஜனாதிபதியாகப் பதவியேற்றது முதலே ஒபாமாவின் பிறப்பு மற்றும் சமயம் பற்றிய விவாதங்கள் அடிக்கடி இடம்பெற்று வந்தன. 

இந்த நிலையில், ஒபாமாவின் சகோதரர் முறையான மலிக் ஒபாமா என்பவர், ஒபாமா கென்யாவின் மொம்பசா என்ற நகரில் பிறந்தவர் என்று கூறி அதற்கான ஆதாரமாக அவரது பிறப்புச் சான்றிதழையும் வெளியிட்டுள்ளார்.

தனது சகோதரர் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றது மகிழ்ச்சியே என்றாலும், தான் பிறந்த மண்ணாகிய கென்யாவுக்கு எந்தவித உதவிகளையும் செய்யாதது, தமது குடும்பத்தினருக்கு எந்தவித உதவிகளையும் செய்யாதது, லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாஃபியைப் பதவியிழக்கச் செய்தது உள்ளிட்ட பல விடயங்களின் அடிப்படையில் ஒபாமா மீது தான் வெறுப்புக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பிறப்புச் சான்றிதழில், ஒபாமாவின் தந்தை பெயர் பராக் ஹுசெய்ன் ஒபாமா என்றும் தாயார் பெயர் ஸ்டேன்லி ஆன் ஒபாமா என்றும், பிறந்த திகதியாக ஒபாமாவின் உண்மையான பிறந்த நாளாகிய ஓகஸ்ட் 4, 1961 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒபாமாவின் உண்மையான தந்தை ஹுசெய்ன் ஒபாமா அல்ல; ஃப்ரேங்க் மார்ஷல் டேவிஸ் என்ற தீவிர கம்யூனிஸவாதியே என்றும் மலிக் ஒபாமா தெரிவித்துள்ளார். 

மேலும், ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாகத் தனது கருத்துக்களைக் கூறி வந்தார் மலிக். ஒபாமாவின் உறவினர் என்பதால் மலிக்கின் கருத்துக்களும் முக்கியத்துவம் பெற்றதாகவே விளங்கின. “ட்ரம்ப் இதயத்தில் இருந்து பேசுகிறார்” என்ற மலிக்கின் கருத்து ட்ரம்ப்புக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருந்தது என்று சொல்லப்படுகிறது.

ஒபாமா அமெரிக்காவில் பிறக்கவில்லை என்ற கருத்தை, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட பலரும் வெளிப்படையாகப் பேசி வந்தனர். குறிப்பாக, ஹவாயில் பிறந்ததாக ஒபாமா பொய் கூறுகிறார் என்று ட்ரம்ப் தெரிவித்திருந்தார். எனினும், அவரது தேர்தல் பிரசாரத்தின்போது, ஒபாமா அமெரிக்காவிலேயே பிறந்ததாக அவர் ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.