தென்றலுக்கு நேரெதிரான 'வங்கூழ்' : சுபாஷினி பிரணவனின் கவிதைத் தொகுப்பு 

Published By: Nanthini

13 Feb, 2024 | 12:58 PM
image

(மா. உஷாநந்தினி)

படங்கள் : எஸ்.எம்.சுரேந்திரன் 

ழுத்தாளர், ஆசிரியர், இசைக்கலைஞர், கவிதாயினி சுபாஷினி பிரணவனின் நான்காவது நூலான 'வங்கூழ்' கவிதைத் தொகுப்பு கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பு தமிழ் சங்க மண்டபத்தில் வெளியானது.

தேஜஸ்வராலயா கலைக்கூட இயக்குநர் - கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியராக கல்வி, கலை இலக்கிய பணியாற்றி வரும் சுபாஷினி பிரணவனின் நூல் வெளியீட்டு நிகழ்வு, பிரித்தானிய சைவ முன்னேற்ற சங்கத்தின் முன்னாள் தலைவர் ரபீந்திரமோகன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த நூல் வெளியீட்டு விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார். 

மகிமை விருந்தினராக கவிஞரும் எழுத்தாளருமான ஜின்னா ஷரிப்புத்தீன், சிறப்பு விருந்தினராக கொழும்பு பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் யோகராணி சிவபாலன் நிகழ்வில் பங்கேற்றதோடு, உவகை விருந்தினர்களாக பிரித்தானிய சைவ முன்னேற்ற சங்கத்தின் ஸ்தாபகர் வ.இ. ராமநாதன், சங்கத்தின் தலைவர் நிரஞ்சன், சங்கத்தின் பட்டயக் கணக்காளர் சூரிப்பிள்ளை பாலசிங்கம், சங்கத்தவர் லோகநாதன், வைத்திய கலாநிதி சோ. பதந்தன், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (வீரகேசரி) பத்திரிகை நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம்.செந்தில்நாதன், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ். செந்தில்வேலவர் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.

இதன்போது சுபாஷினி பிரணவனின் மகளான தேஜஸ்வினி பிரணவன் வரவேற்புரை வழங்கியதோடு, நிகழ்ச்சியையும் செழுமையான தமிழில் கவிதை நயத்தோடு தொகுத்து வழங்கினார். 

தொடர்ந்து, இந்து குருமார் அமைப்பின் தலைவரான சிவஸ்ரீ. கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் ஆசியுரையும், ரபீந்திரமோகன் தலைமையுரையும் ஆற்றினர். 

அவரை தொடர்ந்து, கவிஞர் ஜின்னா ஷரிப்புத்தீன் உரையாற்றினார். 

அவர், "தற்காலத்தில் கவிதைகள் எழுதப்பட வேண்டியது அவசியம்; நூல்களை தேடி வாசிப்பவர்களாக எல்லோரும் இருக்க வேண்டும்" என தெரிவித்தார். 

அத்தோடு அவர், 

"இந்த நூலிலுள்ள கவிதைகளை நான் வாசித்தமைக்கு முதல் காரணம், ஒவ்வொரு கவிதையிலும் ஓசை நயம் இருக்கிறது. ஓசை நயத்தோடு ஒருவர் கவிதை எழுத வேண்டுமானால், அவருக்கு யாப்பிலக்கணம் தெரிந்தால் போதும். சுபாஷினிக்கு யாப்பிலக்கணம் தெரியும். ஆனாலும், இறுக்கமான யாப்பு வடிவத்தில் கவிதை வரிகளை எழுதாமல், எல்லோரும் பொருள் உணர்ந்து வாசிக்குமளவுக்கு கவிதைகளினூடாக தன் கருத்துக்களை வெளிப்படுத்தி எழுதியிருக்கிறார். 

"இந்த நூலில் 'அதற்கு யார் பொறுப்பு?' என்ற கவிதையினூடாக நூலாசிரியர் ஓர் ஆசிரியராக இருந்து, பாடசாலை மாணவர்களை ஆசிரியர்கள் அணுகும் விதத்தை சாடியிருக்கிறார். 

"தமிழ்க் கவிதைகள் செத்துக்கொண்டிருக்கின்ற ஒரு காலகட்டத்தில் இப்படி ஒரு கவிதையையும் எழுதியிருக்கிறார்.

பேனை பிடித்திரண்டு ‍பேக்காட்ட வரி எழுதி 

நானும் கவிஞன் என நமக்குள்ளே பெருமை கொள்ளும் 

நீளும் பேராசை குணமுடையோர் முன்னாலே

மாகவியே பாரதியே நீ தெய்வமாயினாய் நிறை"

என கவிதை வரிகளையும் எடுத்துக்காட்டி கவிதைகளின் சிறப்புகளை மேலெழுந்தவாரியாக தொட்டுச் சென்றார். 

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி அதிபர் உரையாற்றுகையில், தனது பாடசாலை ஆசிரியரின்  பல்துறை திறமைகளையும் அவரது ஆசிரியப் பண்புகளையும் பாராட்டினார். 

நிகழ்வில் உரையாற்றிய வைத்திய கலாநிதி சோ. பதந்தன்,

"தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக புத்தக வாசிப்பு குறைந்துவிட்டது. நூல்களை வாங்குபவர்கள் மிக குறைவு. 

"இன்றைக்கு பொருளாதார பிரச்சினை, கடதாசியின் விலை அதிகரித்த காலகட்டத்தில் ஒரு நூலை வெளியிடுவது அரிதான விடயமாகிவிட்டது. 

"கவிதை எழுதுவது அருட்கொடை. இது நூலாசிரியர் சுபாஷினி சமூகத்துக்கு செய்யும் சேவையாகவே பார்க்கிறேன். அவர் ஆசிரியர் நிலையிலிருந்து கவிதைகளை வெளிப்படுத்துவதால், அந்த வரிகளை மாணவர்கள் எடுத்துக்காட்டாக கொள்வதனூடக, எதிர்கால கல்விச் சமூகத்துக்கு ஒரு சேவையாக இந்த நூல் உருவாக்கங்கள், வெளியீடுகள் அமையும்" என்றார். 

மேலும், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தனது உரையில், 

"வாசிப்பு என்பது மிகவும் அருகிப்போய்விட்ட  இந்த காலகட்டத்தில் இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், வாசிப்பதற்காக நேரத்தை செலவிடுவதில் தயக்கம் காட்டுகிறோம். அதை விட வாசிக்க நேரம் கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. 

"நாம் தொழில்நுட்ப ரீதியாக வளர்ந்து வருகிறோம். குறிப்பாக, கையடக்க தொலைபேசியில் பல்வேறு விடயங்களை வாசித்து, உள்வாங்கி, பல தகவல்களை அறிந்துகொள்வதாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வாறான சூழலில் கவிதை நூல் வெளியீடு என்பது காலத்தின் தேவையாக இருக்கிறது. 

"கதையாக இருக்கலாம், கட்டுரையாக இருக்கலாம். இவை அனைத்தும் பல பக்கங்களை கொண்டதாகவே அமையும். ஆனால், அவ்வாறு பல பக்கங்களை கொண்ட விடயங்களை இரத்தின சுருக்கமாக நான்கு வரிகளில் சொல்லும் பாணி கவிதைக்குண்டு..." என்று குறிப்பிட்டார். 

அடுத்து கவி நடையில் உரையாற்றிய நூலாசிரியர் சுபாஷினி பிரணவன் கூறியது போல், 'தென்றலுக்கு நேர் எதிர்ச்சொல்லான புயல்' வீசி, மரங்கள் அசைந்தாடும் தோற்றத்தில் அட்டைப்படம் அமைக்கப்பட்ட 'வங்கூழ்' நூல் வெளியிடப்பட்டது.  

நூலின் முதல் பிரதியினை கல்வி இராஜாங்க அமைச்சரிடமிருந்து 'குகன் மோட்டர்ஸ்' சந்திரவதி குகதாசன் பெற்றார். தொடர்ந்து, சிறப்பு பிரதியை 'சங்கர் புத்தகசாலை' நா.க. பஞ்சாட்சரமும், கெளரவ பிரதியை 'மகாராஜா நிறுவனம்' குகநாதன் வித்யநாத் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். 

நிகழ்வின் இறுதியில், தேஜஸ்வராலய கலைக்கூடம் மற்றும் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியர் சிலர், நூலை பற்றியும் தமது ஆசிரியரான நூலாசிரியரை பற்றியும் சில வார்த்தைகள் மேடையில் பகிர்ந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விகாஷ்னி சதாசிவத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-01-18 17:51:01
news-image

யாழ்ப்பாணம் - பாசையூரில் எம்.ஜீ.இராமசந்திரனின் 108...

2025-01-18 15:57:12
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பொங்கல்...

2025-01-16 20:18:32
news-image

“ஈழத்து திருச்செந்தூர்” மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர்...

2025-01-15 18:41:40
news-image

கொழும்பு - காக்கைதீவு கரையோரப் பூங்காவில்...

2025-01-15 20:57:46
news-image

கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன்...

2025-01-14 19:18:16
news-image

கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தில் திருவாசகம்...

2025-01-13 18:34:02
news-image

திருவெம்பாவை பத்தாம் நாள் பூஜையும்‌ ஆருத்திரா‌...

2025-01-13 18:31:38
news-image

யாழ். சுன்னாகம் புகையிரத நிலையத்தின் 10...

2025-01-13 16:49:45
news-image

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி...

2025-01-13 13:09:42
news-image

யாழ். நல்லூர் சிவன் கோவில் தேர்த்...

2025-01-13 11:53:26
news-image

இந்திய துணைத் தூதரகத்தால் தொண்டைமானாறில் பெண்...

2025-01-13 11:11:36