பூனைகளைத் திருடி பலிகொடுத்து அவற்றை உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்த கொலம்பிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், டேவிட் அந்திரேஸ் (31) என்பவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் பொலிஸில் புகாரளித்தனர். அதன் பேரில் வீட்டைப் பரிசோதனையிட்ட பொலிஸார், பூனைகளின் தலைகள் மற்றும் தோல்கள் சிலவற்றைக் கண்டெடுத்தனர். அவை, காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பூனைகளின் தோற்றத்துடன் ஒத்துப்போவதாக இருந்தன.

பொலிஸாரின் விசாரணையில், பூனைகளைத் திருடி பலி கொடுத்ததுடன் மட்டுமல்லாது, அவற்றை சமைத்துத் தின்றதாகவும் அந்திரேஸ் ஒப்புக்கொண்டார்.

கொலம்பியாவில் குதிரை, நாய், பூனை ஆகியவற்றின் இறைச்சியை உண்ணுவது வழக்கமே என்றாலும், செல்லப் பிராணிகளைத் திருடுவதும் அவற்றைக் கொடுமைப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றம்.

விசாரணைகள் முடிவடைந்த நிலையில் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் அந்திரேஸ்!