கடல் நீர் சுத்திகரிப்பு மற்றும் மருத்து மையம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்று நேற்று ஹம்பாந்தோட்டையில் அமெரிக்க கடற்படையினால் முன்னெடுக்ப்பட்டுள்ளது.

பசுபிக் ஒத்துழைப்பு 2017 கூட்டுப் பயிற்சியின் கீழ் சமூக சேவை திட்டங்கள் மற்றும் சமூக பொறுப்புத் திட்டங்கள் ஆகியன ஹம்பாந்தோட்டை துறைமுகத்தையடண்டிய பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் குறித்த திட்டங்களை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான போல் ரிவர் கப்பலில் பணியாற்றும் கடற்படை வீரர்கள் முன்னெடுத்துள்ளனர். 

30 இலங்கை கடற்படை வீரர்கள் அவர்களுடன் இணைந்து இயற்கை அனர்த்தங்களின் போது பொதுமக்களுக்கு எவ்வாறு  முதலுதவியளிப்பது தொடர்பான செயலமர்விலும் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான போல்ரிவரில் பணியாற்றும் மருத்துவக் குழுவினர் திஸ்ஸமகராம தள வைத்தியசாலையில் மருத்தவ மையங்களை நிறுவி மக்களுக்கு மருத்துவ உதவிகளை அளித்துள்ளனர்.

குறிப்பாக கண் சிகிச்சை, பல்மருத்துவம் மற்றும் வெளிநோயாளர் சிகிச்சைகளை அளித்துள்ளனர். இந்த மருத்துவ சிகிச்சைக்காக அப்பிரதேசத்தைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.