இலங்கையுடனான பூகோள அரசியல் ரீதியான செயற்பாடுகள் காரணமாக இந்தியாவும் அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் தமிழர்கள் விவகாரத்தில் அக்கறையற்ற போக்கை கடைப்பிடிக்கின்றனவா என்ற சந்தேகம் தற்போது மேலெழுந்து வருகின்றது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் தமது அன்றாட பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் தீர்வை கோரிவருகின்றனர்.
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து தமிழ் மக்கள் தமது உரிமைகள் நிலைநாட்டப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர். அன்று மிதவாத தமிழ் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்காகவும் அவர்களது உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் ஜனநாயக ரீதியில் போராட்டங்களை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து மூன்று தசாப்தகால ஆயுதப்போராட்டம் தமிழ் இளைஞர்களினால் முன்னெடுக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து மீளவும் ஜனநாயக ரீதியில் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
80களில் தமிழ் இளைஞர்களின் போராட்டத்துக்கு இந்தியா பேராதரவு வழங்கியிருந்தது. தமிழ் போராளிகளுக்கு இந்திய அரசாங்கம் பயிற்சிகளையும் ஆயுதங்களையும் வழங்கியிருந்தது. இவ்வாறு போராட்டத்துக்கு உத்வேகம் அளித்த இந்தியாவானது ஈழத்தமிழர் விவகாரத்தில் தொடர்ச்சியான அக்கறையினை பேணிவந்திருந்தது. இலங்கை அரசாங்கத்தரப்புக்கும் தமிழ் போராளிகள் தரப்புக்குமிடையில் திம்புவில் பேச்சுவார்த்தையினையும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் தொடர்ச்சியாக 1987ஆம் ஆண்டு இலங்கை–இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 13ஆவது திருத்த சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட்டதுடன் மாகாணசபை முறைமையும் அமுல்படுத்தப்பட்டது. ஆனாலும் இதுவரையில் தமிழ் மக்களுக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை.
யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் ஏதோ ஒருவகையில் அரசியல் தீர்வுக்கான மார்க்கத்தை ஏற்படுத்த முடியும் என்று தமிழ் மக்கள நம்பிக்கைகொண்டிருந்தனர். இந்தியாவின் அழுத்தம் காரணமாக தமக்களு விரைவில் தீர்வு கிடைக்கும் என்றும் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் இன்றுவரையில் அத்தகைய தீர்வு வழங்கப்படவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீ்ரவு காண்பதற்கு 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திவந்தது. ஆனாலும் இலங்கை அரசாங்கமானது 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு கூட இன்னமும் தயாராக இல்லை.
இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் ஈழத்தமிழ் மக்களின் வாழ்வாதார விவகாரத்திலும் இந்தியா தற்போது அக்கறையற்ற போக்கை கடைப்பிடிக்கின்றதோ என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. பூகோள அரசியல் ரீதியான விடயங்கள் இதற்கு காரணமாக அமைவதற்கான சாத்தியம் குறித்தும் தற்போது சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கை விவகாரத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் இந்தியாவானது தனது பூகோள அரசியல் செயற்பாடுகளை மீளமைக்கும் வகையில் செயற்படுகின்றதோ என்று தற்போது எண்ணத்தோன்றுகின்றது. தமிழ் மக்களின் விவகாரத்தில் இதுவரை அக்கறை செலுத்தி வந்த இந்தியாவானது தற்போது தெற்கில் சிங்கள மக்களின் ஆதரவை திரட்டும் வகையிலும் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையிலும் செயற்பட ஆரம்பித்திருக்கின்றதோ என்ற எண்ணப்பாடு உருவாகிவருகின்றது.
கடந்த வாரம் இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டைக் கொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான குழுவினரை இந்திய மத்திய அரசாங்கம் அழைத்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தது. அநுரகுமாரதிஸாநாயக் தலைமையிலான குழுவினர் ஐந்துநாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு புதுடில்லிக்கு சென்றிருந்தனர். இவர்களை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் , வெளியுறவு அமைச்சின் செயலாளர் வினய்மோகன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உட்பட்ட பலரும் சந்தித்து பேச்சுவாத்தை நடத்தியிருக்கின்றனர்.
ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் அந்தக்கட்சியானது இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டில் தீவிரமாக செயற்பட்டிருந்தது. அத்துடன் மாகாணசபை முறைமையையும் ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்திருந்தது. இந்தியா எத்தகைய திட்டங்களை மேற்கொண்டாலும் அதனை ஆக்கிரமிப்பாகவே அந்தக்கட்சி பிரசாரப்படுத்தியிருந்தது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்திலும் அதிகாரங்களை பகிர்வதற்கான கொள்கையிலும் எதிர்நிலைப்பாட்டையே அந்தக்கட்சி கொண்டிருந்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு இணைந்த மாகாணசபையை உருவாக்கப்பட்டது.
அந்த இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணசபை பிரிக்கப்படுவதற்கு ஜே.வி.பி.யே மூலகாரணமாக செயற்பட்டது. உயர்நீதிமன்றத்தில் அந்தக்கட்சி வடக்கு, கிழக்கு இணைப்புக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ததையடுத்தே 2005ஆம் ஆண்டு இரு மாகாணங்களும் பிரிக்கப்பட்டன.
இவ்வாறு இந்திய, இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த இந்தியாவின் திட்டங்களை ஆக்கிரமிப்பு என்று வர்ணித்த ஜே.வி.பி.யினரை அழைத்து இந்தியா தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றது. ஜே.வி.பி.யானது சீன சார்பு கட்சியாகவே இதுவரை நோக்கப்பட்டது. சீனாவின் ஆதரவுடன் இந்தக்கட்சியின் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக பகிரங்கமாக குற்றச்சாட்டக்கள் சுமத்தப்பட்டிருந்தன.
தற்போதைய நிலையில் தெற்கில் சிங்கள மக்கள் மத்தியில் ஜே.வி.பி.யின் செல்வாக்கு அதிகரித்திருப்பதாகவும் கருத்தக்கணிப்புக்கள் தெதரிவித்திருந்தன. இந்த நிலையில்தான் இந்தியாவானது ஜே.வி..யின் தலைவர்களை அழைத்து தற்போது கலந்துரையாடியிருக்கின்றது. இந்த செயற்பாடானது இலங்கை குறிப்பாக தெற்கில் அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்திய மத்தி அரசாங்கமானது ஜே.வி.பி.யை அழைத்தமைக்கான நோக்கம் என்ன? அதன் பின்னணி என்ன என்பது குறித்து தெற்கின் அரசியல் கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன.
இந்தியாவின் இந்த செயற்பாடு தமிழ் மக்கள் மத்தியிலும் சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும் என்ற நிலைபாட்டிலேயே தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் தற்போதும் உள்ளன. 2022ஆம் ஆண்டு கூட 13ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரி இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து கடிதம் அனுப்பியிருந்தனர்.
அண்மையில் இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ்ஜாவை தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியபோது அரசியல் தீர்வின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தனர். ஆனால் அரசியல் தீர்வை வலியுறுத்தும் விடயத்தில் இந்தியா தற்போது புதிய அக்கறை காண்பிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது மேலெழுந்து வருகின்றது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் தெற்கின் அரசியல் கட்சிகளுடனும் அரசாங்கத்தரப்பினருடனும் நல்லுறவை பேணும் வகையில் இந்தியாவின் செயற்பாடு அமைந்திருக்கின்றதோ என்ற சந்தேகம் தமிழ் தேசியக் கட்சியினர் மத்தியில் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
இதேபோன்றே அமெரிக்கா உட்பட மேற்குலகநாடுகளும் தமிழர்களின் பிரச்சினையை விடவும் சீனாவுடனான போட்டிக்கு முன்னுரிமை அளிக்கின்றனவோ என்ற சந்தேகமும் தற்போது உருவாகியிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமெரிக்க காங்கிரஸ் .உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு பதிலாக சீனாவுடான போட்டியினால் அதனை கையாள்வதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் முக்கியத்துவமளிக்கின்றன. என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களிடம் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இலங்கையில் பூகோள போட்டித்தன்மை அதிகரித்திருக்கின்றது. சீனாவில் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா, அமெரிக்கா உட்பட்ட மேற்குலகநாடுகள் செயற்பட்டு வருகின்றன. இத்தகைய பூகோள ரீதியிலான அரசியல் செயற்பாடுகள் காரணமாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பான இந்த நாடுகளின் முன்னைய நிலைப்பாடுகள் தற்போது மாற்றம் கண்டிருப்பதாகவே நோக்கவேண்டியிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் இந்த பூகோள அரசியல் சூழலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சிந்திக்கவேண்டும். அதற்கான திட்டங்களை வகுக்கவேண்டும். இதுவே இன்றைய காலகட்டத்தில் அவசியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM