இசையமைப்பாளரும், இசை கலைஞருமான சந்தோஷ் நாராயணன் நடத்தும் ‘நீயே ஒளி’

09 Feb, 2024 | 05:01 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன், சென்னையிலுள்ள நேரு திறந்தவெளி மைதானத்தில் எதிர்வரும் பெப்வரி 10 ஆம் திகதியன்று மாலை ‘நீயே ஒளி’ எனும் பெயரில் நேரலையான இசைநிகழ்ச்சியொன்றை ஒருங்கிணைத்திருக்கிறார்.  இந்நிகழ்வில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் பங்குபற்றவிருக்கிறார்கள். புதுமையான பாணியில் அமைக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படும் இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் நாராயணனுடன் இந்திய அளவில் புகழ்பெற்ற மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களும், நடன கலைஞர்களும் பங்குபற்றுகிறார்கள். அதனால் இசை ரசிகர்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இருந்தாலும் அண்மையில் சென்னை புறநகரில் நடைபெற்ற ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியொன்றில் பங்குபற்றுவதற்காக நுழைவு சீட்டு வைத்திருந்தும், ரசிகர்கள் உள்ளே செல்லமுடியாமல் கடும் நெரிசலும், நெருக்கடியும் ஏற்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதும், இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார்.  பிறகு விழாவை ஒருங்கிணைத்திருந்த நிறுவனம் ரசிகர்களுக்கு அவர்களுடைய கட்டணத்தை திருப்பியளித்ததும் நினைவிருக்கலாம்.

இந்நிலையில் ‘நீயே ஒளி’ இசைநிகழ்ச்சியை நடத்தும் சந்தோஷ் நாராயணன் பேசுகையில்,“ சென்னையிலுள்ள நேரு ஸ்டேடியத்தில் ‘நீயே ஒளி’ இசை நிகழ்ச்சியை நடத்தவேண்டும் என்று தீர்மானித்தவுடன் இந்த மைதானத்தின் நிர்வாகத்திலுள்ள உயரதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையை தொடங்கினோம். முதலில் நாங்கள் ரசிகர்கள் வருகைத் தருவதற்கும், அவர்கள் சிரமமில்லாமல் இசை நிகழ்ச்சியைப் பார்த்து  ரசிப்பதற்கும், அவர்கள் எதிர்பார்க்கும் வசதிகளைசெய்து கொடுப்பதற்கும் தான் முக்கியத்துவம் அளித்தோம். இதற்காக நாங்கள் கடந்த இரண்டு வாரங்களாக இந்த மைதானத்தில் முன்னேற்பாடுகளை செய்து வருகிறோம். 

மேலும்  ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை தரவேண்டும் என்பதற்காக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இது ஒரு கிரீன் கான்செர்ட். இந்த நிகழ்ச்சியில் நான் மட்டுமல்லாமல் இந்தியாவிலிருந்தும் மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்தும் பல்வேறு திறமையான இசை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்கள் என பலர் கலந்துகொள்கிறார்கள். கான்செர்ட்டின் கிராஃப் கூட எமோஷனலாக இருக்கும். ஒரு திரைப்படம் போல் எங்கேயும் நிற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரம் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்த கான்செர்ட் நடக்கும். இது ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் வித்தியாசமான அனுபவமாக இருக்கும். 

இந்த நிகழ்ச்சிக்கு 500 ரூபாய் டிக்கட் எட்டாயிரம் டிக்கட் வரை விற்பனை செய்ய திட்டமிட்டிருக்கிறோம். இதற்கான விற்பனையிலும் வெளிப்படையான அணுகுமுறையைத் தான் கடைபிடிக்கிறோம். அதனால் அனைத்த தரப்பு ரசிகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்” என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்