பாரதியார் பாடலைப்பாடி 'ஒற்றுமை' வகுப்பெடுக்கும் ரணில்; பாரததேசத்தைப் போன்று அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முன்வருவாரா? - ரவிகரன்

Published By: Vishnu

09 Feb, 2024 | 01:29 AM
image

பாரதியாரின் பாடலைப்பாடி ஒற்றுமை பற்றி வகுப்பெடும் அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவால் பாரததேசத்தைப்போன்று முழுமையாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியுமா? என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேவேளை இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழ்பேசும் சிறுபான்மைச்சமூகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்காது, பெரும்பாண்மையின ஆட்சியாளர்கள் தொடர்ந்து தமிழ்பேசும் மக்களுக்குத் துரோகமிழைத்துவருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின், ஐந்தாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் அரசதலைவர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய கொள்கைவிளக்கவுரை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

ஒன்பதாவது பாராளுமன்றத்தின், ஐந்தாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வில் அரசதலைவர் ரணில் விக்ரமசிங்க கொள்கைவிளக்கவுரையாற்றியிருந்தார்.

அரசதலைவர் குறித்த தனது கொள்கைவிளக்கவுரையிலே நாட்டைக் கட்டியெழுப்பும் கனவை நனவாக்க தமிழ், முஸ்லிம் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட அழைப்பு விடுத்திருந்தார்.

அதேவேளை ஒற்றுமையை வெளிப்படுத்தும் பாரதியார் பாடல் வரிகளையும் குறிப்பிட்டு, அவ்வாறான எண்ணம் எமக்கு ஏன் வரவில்லை எனவும், எமது நாட்டு இளைய சமூகத்தின் எதிர்காலத்திற்காக ஒன்றுபடமுடியாதிருப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

தேர்தல் ஒன்று நெருங்கிவருகின்ற சூழலில்தான், அரசதலைவர் நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளினதும், மக்களதும் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகின்றார். அரசதலைவரின் இத்தகைய பேச்சுக்கள் மிகவும் வேடிக்கையாகவுள்ளது.

குறிப்பாக அரசதலைவர் தனது உரையிலே,

"முப்பதுகோடி முகமுடையாள்-உயிர்

மொய்ப்புற வொன்றுடையாள்-இவள்

செப்பு மொழிபதினெட்டுடையாள்-எனிற்

சிந்தனை ஒன்றுடையாள்"

இவ்வாறு ஒற்றுமையை வெளிப்படுத்தும் பாரதியார் பாடல் வரிகளையே தனது உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

பாரததேசம் முப்பதுகோடி மக்களைக்கொண்டிருந்தாலும் அதன் உயிர் ஒன்றுதான், பாரதநாட்டில் பதினெட்டு மொழிகள் இருந்தாலும் அவை வெளிப்படுத்தும் சிந்தனை ஒன்றுதான் என்பதே அந்த பாரதியாரின் பாடல்வரிகளின் பொருளாகும்.

உண்மையில் பாரதத்தைப் பொறுத்தவரையில் அங்கு பல்வேறு மொழிகளைப்பேசுகின்ற, பல்வேறு இன மக்கள் வாழ்ந்தாலும் அங்கு மிகச் சரியான விதத்திலே அதிகாரங்கள் பகிர்ந்துகொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக காணி, பொலிஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அதிகாரங்கள் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

எனவே பாரதத்தில் வாழ்கின்ற வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்ற, வெவ்வேறு இன மக்கள் தமக்கான பூரண அதிகாரங்களுடன் அவர்களுடைய மாநிலங்களில், அவர்களுக்குரித்தான கலை, கலாச்சார, பண்பாட்டு, வாழ்வியல் அம்சங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ முடிகின்றது.

இத்தகைய அதிகாரப்பகிர்வால்தான் அவர்கள் இந்தியர்களாக ஒருமித்து ஒற்றுமையாக வாழ முடிகின்றது.

அத்தகைய ஒற்றுமையால்தான் பொருளாதார நிலையிலும், அறிவியல்,விஞ்ஞானம், படைக்கட்டுமானம், விளையாட்டுஉள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா தற்போது மேம்பட்டு நிற்கின்றது.

இவ்வாறு இந்தியாவில் மாநிலங்களுக்கு முழுமையாக அதிகாரங்கள் பகிரப்பட்டிருப்பதைப்போல், இங்கு இலங்கையிலும் மாகாணங்களுக்கு முழுமையான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதா?

அவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்துகொடுக்கப்படும் எண்ணங்கள் உரியவர்களுக்கு ஏற்படாதவரையில், நாட்டுக்காக ஒன்றுபடும் எண்ணங்கள் இனங்களுக்கிடையில் எவ்வாறு ஏற்படும்?

இலங்கையைப் பொறுத்தவரையில் தமிழ், சிங்களம்என இருவேறு மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழ்கின்றனர்.

இவ்வாறு இருமொழிகளைப் பேசுகிறமக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள், சகலருக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் ஆட்சியாளர்களுக்கும், பெரும்பான்மை இனத்தவர்களுக்கும் வரும்போதுதான், பாரதியார் தனது பாடல்வரிகளில் குறிப்பிட்டிருப்பதைப்போல இந்தநாடு இருமொழிபேசுகின்ற மக்கள்கூட்டத்தைக்கொண்டிருந்தாலும் இந்தநாட்டின் உயிரும், சிந்தனையும் ஒன்றாக இருக்கும்.

அரசதலைவர் முதலில் இந்த நாட்டில் சிறுபான்மையாக வாழ்கின்ற தமிழ்பேசும் மக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்கவேண்டும்.

தமிழ்பேசும் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய காணி, பொலிஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்.

அவ்வாறு இந்தநாட்டில் அதிகாரங்கள் பரவலாக்கப்படுகின்றபோதுதான் நாட்டுமக்களிடையே ஐக்கியத்தைப் பேணமுடியும்.

எனவே மாற்றமென்பது இங்கு வாழ்கின்ற தமிழ்பேசும் சிறுபான்மை மக்களின் மனங்களிலிருந்து வரவேண்டியதல்ல. இங்குள்ள பெரும்பான்மையின மக்களிடமிருந்தும், ஆட்சியாளர்களிடமிருந்துமே நாம் மாற்றங்களை எதிர்பார்க்கவேண்டியிருக்கின்றது.

தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கக்கூடாது என்கிற குறுகிய மனப்பாங்கிலிருந்து முதலில் ஆட்சியாளர்களும், பெரும்பாண்மையினத்தவர்களும் மாறவேண்டும்.

அத்தகைய மாறுதல்தான் இந்தநாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தி, இந்த நாட்டில் பொருளாதாரத்தை முன்னேற்ற வழிவகுக்கும்.

அரசததலைவர் ரணில் விக்கிரமசிங்க தற்போது பாரதியார் பாடலைப் பாடுகிறார் என்பது முக்கியமல்ல, இதைவிட எம்மாலும் மிகச்சிறப்பாக பாரதியார் பாடல்களைப் பாடிக்காட்டமுடியும்.

ஆகவே அரசதலைவர் ரணில் பாரததேசத்தில் இருப்பதைப்போன்று இலங்கையிலும் அதிகாரங்களைப் பரவலாக்க முன்வரவேண்டும். அதுவே மிகமுக்கியமானதாகும்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் தொடர்ச்சியாக தமிழ்பேசும் சிறுபான்மைச் சமூகத்திற்கு முழுமையான அதிகாரப்பகிர்வை வழங்குவதற்கு எந்த ஆட்சியாளர்களும் முன்வரவில்லை. தொடர்ந்து மாறி மாறி வருகின்ற ஆட்சியாளர்கள் தமிழ் பேசும் சிறுபான்மைச் சமூகத்திற்கு துரோகமிழைத்து வருகின்ற வரலாற்றையே காண்கின்றோம்.

அத்தகைய அரசியலை தொடர்ந்தும் முன்னெடுத்து தமிழ்பேசும் மக்களுக்கு அரசதலைவர் ரணில் துரோகமிழைக்கப்போகின்றாரா, அல்லது பாரதியாரின் பாடல் வரிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கப்போகின்றாரா என்பதை அவரே தீர்மானிக்கவேண்டும்.

வெறுமனே வார்த்தைகளால் ஒற்றுமைக்கான அழைப்பை விடுப்பதன்மூலம் இந்தநாட்டில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டுவிடாது  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிரமங்கள் இருந்த போதிலும் 16,000 ஆசிரியர்களை...

2024-07-22 23:34:52
news-image

இலங்கையில் சுமார் 2000க்கும் மேற்பட்டவர்களை பலிகொள்ளக்கூடிய...

2024-07-22 22:32:21
news-image

22 ஆவது திருத்தத்தை உயர்நீதிமன்றில் சவாலுக்குட்படுத்துவோம்...

2024-07-22 17:16:25
news-image

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா...

2024-07-22 22:02:03
news-image

இந்து சமுத்திரத்தின் சுதந்திரம் மற்றும் பிராந்திய...

2024-07-22 21:54:12
news-image

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதஸ்தலத்தில் சமய...

2024-07-22 21:31:10
news-image

22 ஆவது திருத்தம் ஜனாதிபதி தேர்தல்...

2024-07-22 17:15:15
news-image

அஸ்வெசும இரண்டாம் கட்டத்தில் 455 697...

2024-07-22 19:25:35
news-image

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி மக்களின் வரிப்பணத்தை...

2024-07-22 17:18:35
news-image

சுற்றுலா வர்த்தகத்தை மேம்படுத்துவதில் இணையுமாறு வெளிநாட்டு...

2024-07-22 19:10:14
news-image

"தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு" : புரிந்துணர்வு...

2024-07-22 18:38:46
news-image

சுங்கத் திணைக்கள நிர்வாக அதிகாரி மீது...

2024-07-22 17:23:24