சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றும் ஹொங்கொங் டி20 கிரிக்கெட் லீக் தொடர் ஹொங்கொங் நகரில் நடைபெற்று வருகிறது. 

இதில் நேற்று நடைபெற்ற  லீக் போட்டியொன்றில் சிட்டி கைடாக் - கோவ்லூன் கேண்டன்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்டி கைடாக் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ஓட்டங்களை குவித்தது.  அணியின் தொடக்க வீரர் கோயட்செர் 57 பந்தில் 5 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 87 ஓட்டங்களையும், கிறிஸ் ஜோர்டான் ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 3 நான்கு ஓட்டங்கள், 6 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

200 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் கோவ்லூன் கேண்டன்ஸ் அணியின் டெவைன் ஸ்மித், பாபர் ஹயாத் ஆகியோர் ஆரம்ப வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ஸ்மித் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினார். இவர் ஆட்டமிழக்காமல் 31 பந்துகளில் சதம் விளாசினார். இறுதியில் இவர் 40 பந்துகளுக்கு 13 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 121 ஓட்டங்களை குவித்தார்.

இதனால் கோவ்லூன் கேண்டன்ஸ் அணி 14.3 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மாத்திரம் இழந்து 204 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.