ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்

தினேஷ் குணவர்தனவிற்கு ஒரு வார தடை விதிக்கபட்டுள்ள நிலையில் கூட்டு எதிரணி பாராளுமன்ற குழு தலைமை பதவியை டலஸ் அழகப்பெருமவிற்கு வழங்க வேண்டும் என சபாநாயகரிடம் கூட்டு எதிரணி எம்.பிக்கள் கோரியதனால் இன்று சபையில் கடுமையான வாக்குவாதமும் சர்ச்சையும் ஏற்பட்டது.

தினேஷ் குணவர்தனவின் கழுத்தை துண்டிக்க கூட்டு எதிரணியினர் முற்படுகின்றனர். தினேஷ் குணவர்தனவை தவிர்ந்த ஏனையோருக்கு 23 இன் 2 கீழ் கேள்வி எழுப்புவதற்கு அதிகாரம் கிடையாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியதும் சபையில் சர்ச்சை மேலும் சூடுப்பிடித்தது.

பாராளுமன்றத்தில் இன்று 23 இன் 2 கீழ் தினேஷ் குணவர்தன கேள்வி தொடுப்பதற்கு நிகழ்ச்சி நிரலில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும் தினேஷ் குணவர்தன ஒரு வார தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக டலஸ் அழகப்பெரும கேள்வி எழுப்ப முற்பட்ட போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு மறுப்பு வெளியிட்டார். இதன்காரணமாக சர்ச்சையான நிலைமை ஏற்பட்டது. 

தினேஷ் குணவர்தனவிற்கு ஒரு வார தடை விதிக்கப்பட்டுள்ள தருவாயில் கூட்டு எதிரணி பாராளுமன்ற குழுவின் தலைவராக டலஸ் அழகப்பெருமவை ஏற்று 23 இன் 2 கீழ் கேள்வி எழுப்புவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கூட்டு எதிரணி எம்.பிக்கள் எனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர் என சபாநாயகர் அறிவித்தார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேசும போது,

தினேஷ் குணவர்தன சபையில் இல்லாவிட்டால் வேறு நாளில் அவரது கேள்வியை தொடுப்பதற்கு இடமளிக்க முடியும் . அதனை தவிர தினேஷ் குணவர்தனவிற்கு பதிலாக வேறு ஒருவருக்கு கேள்வி தொடுப்பதற்கு அனுமதிக்க முடியாது. அதற்கு அதிகாரம் இல்லை என்றார்.