சிவானந்தினி துரைசுவாமி எழுதிய தந்தை - மகன் வாழ்க்கைச் சரிதை நூல்கள் வெளியீடு

Published By: Nanthini

07 Feb, 2024 | 01:18 PM
image

(மா. உஷாநந்தினி)

படங்கள் : ஜே. சுஜீவகுமார்

லங்கை இந்து பேரவையின் உப தலைவியும் சைவ மங்கையர் கழகத்தின் முன்னாள் தலைவியுமான சிவானந்தினி துரைசுவாமி  எழுதிய 'Clippings on the Life and Times of Sir Waitialingam Duraiswamy' மற்றும் 'My Diplomat' ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு கடந்த 3ஆம் திகதி சனிக்கிழமை மாலை கொழும்பு சைவ மங்கையர் கழகத்தின் மங்கையர் மண்டபத்தில் நடைபெற்றது. 

மறைந்த சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமியின் (தந்தை) மருமகளும், அமரர் யோகேந்திரா துரைசுவாமியின் (மகன்) துணைவியாருமான நூலாசிரியர் சிவானந்தினி துரைசுவாமி, 'Clippings on the Life and Times of Sir Waitialingam Duraiswamy' நூலில் தந்தையினதும், 'My Diplomat' நூலில் மகனதும் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்துள்ளார். 

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக நீதவான் சசி மஹேந்திரன் கலந்துகொண்டார்.

மேலும், புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் அக்ஷராத்மானந்த ஜி மகராஜ்,  முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (வீரகேசரி) பத்திரிகை நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குமார் நடேசன், சிரேஷ்ட சட்டத்தரணி ஜெயந்தி வினோதன், சைவ மங்கையர் கழகத்தின் தலைவர் மாலா சபாரட்ணம், சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் அருந்ததி இராஜவிஜயன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வருகை தந்தனர்.   

இதன்போது, நீதவான் பாலசிங்கம் சசி மஹேந்திரன், பேராசிரியர் சாவித்ரி குணசேகர, பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம, சட்டத்தரணி நிரஞ்சன் அருள்பிரகாசம், அம்பிகை போர்மன், காயத்ரி மனோகரன் ஆகியோர் உரையாற்றினர். 

சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி 

வேலணையை பிறப்பிடமாக கொண்ட மறைந்த சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி 2ஆம் உலக மகா யுத்த காலத்தில் 1936ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரையான 11 வருடங்கள் இலங்கை அரசாங்க சபையின் சபாநாயகராக விளங்கிய ஒரே தமிழர் என்கிற பெருமைக்குரியவர் ஆவார். அந்த காலப்பகுதியில் இவர் இலங்கையின் முதல் பிரஜையாகவும்  விளங்கினார். 

இவர் தேசாபிமானி, நாட்டின் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த மாமனிதர், ஆன்மிகவாதி, மிகச் சிறந்த சமூக பற்றாளர், தமிழ் நேசர், வழக்கறிஞர் முதலான அடையாளங்களை கொண்டவர்.

1936ஆம் ஆண்டு துரைசுவாமி 6ஆம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு மன்னரால் அழைக்கப்பட்டு, பிரித்தானியா சென்றார். அங்கு அவர், மன்னரால் 'சேர்' பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 

யோகேந்திரா துரைசுவாமி 

இவர் 1979ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக கடமைகளை ஆரம்பித்தார்.

மக்கள் சேவையை தனது வாழ்நாள் கடமையாக கொண்டிருந்த இவர், சமூக நலன் கருதி பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்தார். 

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டபோது, களத்தில் துணிந்து நின்று பல்வேறு அரசியல் நெருக்கடிகளை எதிர்கொண்டார். 

பிற்காலத்தில், தீக்கிரையான யாழ் நூலகம் மீள கட்டியெழுப்பப்பட வேண்டும் என்கிற நோக்கிலும் யோகேந்திரா துரைசுவாமி முனைப்புடன் செயற்பட்டார். 

விருந்தினர் பகிர்வு

நூல் வெளியீட்டு நிகழ்வில் நீதவான் சசி மகேந்திரன் தனது உரையில், "விலைமதிப்பற்ற இந்த இரண்டு வரலாற்று நூல்களும் நாட்டின் கடந்த காலத்தை மாத்திரம் எடுத்துரைக்காமல், ஒளிமயமான எதிர்காலத்தையும் உருவாக்கும் விதமாக அமைந்துள்ளமை அரிதான விடயமாகும். 

நாட்டில் நீதி, சமத்துவம், சமாதானம் நிலைபெற சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி, யோகேந்திரா துரைசுவாமி ஆகிய இருவரதும் கண்ணியத்துடன், அர்ப்பணிப்புடனான பங்களிப்பை நாம் போற்றுகிறோம்" என தெரிவித்தார். 

"வைத்தியலிங்கம் துரைசுவாமி ஒரு சிறந்த அரசியல் பிரமுகர், உன்னதமான தலைவர், நல்ல மனிதர், தனக்கென ஒரு அரசியல் கெளரவத்தை சம்பாதித்தவர்" என்றார், பேராசிரியர் அர்ஜுன பராக்கிரம.   

யோகேந்திரா துரைசுவாமியின் பொதுச் சேவைகள் குறித்தும் அவர் அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்திய விதம் குறித்தும் உரையாற்றிய பேராசிரியர் சாவித்திரி குணசேகர, தீக்கிரையான  யாழ். பொது நூலகத்தை மீள கட்டியெழுப்ப யோகேந்திரா துரைசுவாமி முன்நின்று உழைத்ததாகவும் குறிப்பிட்டார். 

"தமிழினத்துக்கென ஒரு தேசத்தை பிரித்தெடுக்கும் நோக்கம் தந்தைக்கும் மகனுக்கும் இருந்ததில்லை" - சிவானந்தினி துரைசுவாமி 

நிகழ்வின்போது நூலாசிரியர் சிவானந்தினி துரைசுவாமி, "நான் எழுதிய சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமியின் வாழ்க்கைச் சரிதை, அவரது 150ஆவது பிறந்தநாளன்று வெளியாகியுள்ளது. அதைப்போலவே அவருடைய மகன் யோகேந்திரா துரைசுவாமியின் சரிதையையும்  எழுதி வெளியிட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்" என கூறினார். 

தொடர்ந்து, அவர் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையில்,

"எனது மாமனாரை பற்றி எண்ணற்ற விடயங்களை சொல்லுமளவுக்கு அவரை அதிகமாக பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. 

நான் திருமணம் முடித்துச் சென்றதையடுத்து,  துரைசுவாமி ஐயா மறைந்துவிட்டார். அதனால் அவரை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால், நான் அவரைப் பற்றி எழுதுவதற்கான சந்தர்ப்பங்கள் அமைந்தன. சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி பற்றிய ஊடகக் குறிப்புகளுடன் கோர்க்கப்பட்ட (தொகுக்கப்பட்ட) அல்பத்தினை துணையாகக் கொண்டு அவரது வரலாற்றை எழுதக்கூடியதாக இருந்தது.

அத்தோடு என் மாமனாரது கொள்கையை ஒத்த என் கணவரின் எண்ணம், சொல், செயல்களை பார்த்தும் நான் சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமியை பற்றி அறிந்துகொண்டேன்.

சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி சமுதாயத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தில்  அரசியலில் ஈடுபட்டார். இலங்கை அரசாங்க சபையின் உறுப்பினராக விளங்கினார். அரச சபையில் சபாநாயகர் பதவி வகித்த ஒரே ஒரு தமிழர் இவரே.

அரசியலில் ஈடுபட்டு தமிழ் இனத்தை பாதுகாக்க வேண்டும் என்கிற சிந்தனை இவருக்குள் இருந்தும், பிரிவுகளற்ற இலங்கையை - எல்லா இனங்களும் சுமுகமாக வாழக்கூடிய, எல்லா வித வசதிகள், வளர்ச்சிகளுடனான படித்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றே பாடுபட்டார். 

சிங்களம், தமிழ், பறங்கியர், இஸ்லாம் என எல்லா இன மக்களும் ஒன்று சேர்ந்து, ஒருவருக்‍கொருவர்  ஆறுதலாக, சுமுகமாக வாழ வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை. அந்த கொள்கையையே அவரது மகனும் கொண்டிருந்தார். 

தேசத்தை பிரித்து, தமிழினத்துக்கென தனியாக ஒரு  தேசத்தை பிரித்தெடுக்க வேண்டும் என்ற நோக்கம் தந்தை, மகன் இருவருக்கும் இருந்ததில்லை. 

ஒரு நாடு, ஒரே தேசத்து மக்களாக அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதே இருவரின் பெரும் நோக்கு. 

'தந்தையைத்தான் நான் பின்பற்றுவேன், அவருடைய கொள்கைகளே எனது கொள்கைகள்' என்கிற உன்னத நோக்கத்துடன் தான் எனது கணவர் யோகேந்திரா துரைசுவாமி அரசியலில் பிரவேசித்தார் என்றார். 

மேலும், அவர், "இளம் சமுதாயத்தை கட்டியெழுப்பவும் வட மாகாணத்துக்கு செழிப்பூட்டவும் எனது கணவர், அவரது பதவிக் காலத்தில் பல நலத்திட்டங்களை வகுத்து, அவற்றை செயற்படுத்தி வந்தார். ஆனால், யுத்தத்தில் முக்கால்வாசி சொத்துக்கள் அழிந்து போய்விட்டன. இருப்பிடங்கள் ஷெல் வெடிப்புகளால் தரைமட்டமாயின. 

தேவையின்றி நாம் யுத்தத்தில் அகப்பட்டதால் தமிழ் இனம்தான் பெருமளவில் பாதிக்கப்பட்டது. 

இன்னும் பல்வேறு விதங்களில் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதனால் இந்த யுத்தமே தேவையில்லாத ஒரு நிகழ்வுதான்" என வேதனையோடு கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனவுத் தேசம் - அனுபவப் பகிர்வு

2025-02-07 19:09:06
news-image

வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையிலான 150ஆவது அரங்கேற்றத்தில்...

2025-02-07 10:25:38
news-image

“கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரனின் நெறியாள்கையில் சஹானா...

2025-01-24 12:07:15
news-image

ஈழத்தமிழரங்கினை அந்திம காலம் வரை நேசித்த...

2025-01-18 16:50:18
news-image

‘இராவணனார்’ தெய்வீக மானிடர் (லங்கா பாங்கு...

2025-01-15 15:51:30
news-image

மலையக மக்களின் வாழ்வியலை, காத்திரமான சிந்தனைகளை...

2025-01-11 17:11:02
news-image

10 வயது சிறுமியின் நாட்டியப் பரிமாணம்!

2025-01-10 17:07:30
news-image

கலைகள் இருக்கும் வரை தமிழர்களின் பண்பாடும்...

2025-01-06 14:52:09
news-image

நாட்டியம் என்பது பெருங்கடல் : நான்...

2025-01-03 12:08:49
news-image

“வாழ்க்கைப் பயணத்துக்கான நம்பிக்கைத் துளியை கொடுப்பதே...

2024-12-29 13:27:25
news-image

அரச நாடக விருது விழா -...

2024-12-28 12:47:17
news-image

“சாகித்திய ரத்னா” உயர் அரச விருது...

2024-12-28 12:49:25