இலங்கை தமிழரசுக்கட்சியின் செயலாளர் நியமன விவகாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டிருக்கின்றது. கடந்த 27ஆம் திகதி இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியக்குழுக்கூட்டம் திருகோணமலையில் இடம்பெற்றது. இதன்போது பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவு இடம்பெற்றபோது சர்ச்சைக்கு மத்தியில் சண்முகம் குகதாசன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
அத்துடன் சிரேஷ்ட உபதலைவராக சி.வி.கே. சிவஞானமும் இணை பொருளாளர்களாக ஞா, சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரும் துணைத்தலைவர்களாக கே.வி. தவராசா, சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், பாக்கியச்செல்வம் அரியநேந்திரன், வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோரும் இணைச்செயலாளர்களாக திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, எம். சரவணபவன், இரா. சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் எம்.ஏ.சுமந்திரன் உட்பட 13 செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
ஆனாலும் மத்திய செயற்குழு கூட்டத்தில் இடம்பெற்ற இந்த தெரிவுகள் தொடர்பில் முதல்நாள் நடைபெற்ற பொதுச்சபைக்கூட்டத்தில் ஆராயப்பட்ட போது பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. உறுப்பினர்களிடையே வாதப் பிரதிவாதங்கள் அதிகரித்து கைகலப்பில் ஈடுபடும் அளவுக்கு நிலைமை மோசமடைந்தது.
செயலாளர் நியமனத்துக்கு எதிராக எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இத்தகைய சர்ச்சை எழுந்ததையடுத்து பொதுச்செயலாளர் தெரிவுக்கான பகிரங்க வாக்கெடுப்பு கோரப்பட்டது. இதற்கும் ஒருதரப்பு எதிர்ப்பு வெளியிட்டிருந்தது. ஆனாலும் புதிய நிர்வாகத்தினருக்கான அனுமதியை கோரும் பிரேரணை தமிழரசுக்கட்சியின் தலைவர் சிறீதரனினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் எட்டு மேலதிக வாக்குகளினால் பிரேரணை அங்கீகரிக்கப்பட்டது.
ஆனாலும் இந்த வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பெருமளவானவர்கள் சர்ச்சையை கிளப்பியதையடுத்து தேசிய மாநாட்டை ஒத்திவைப்பதாக மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்ததுடன் கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்திருந்தார்.
செயலாளர் நியமன சர்ச்சை காரணமாக மறுநாள் இடம்பெறவிருந்த பொதுச்சபைகூட்டம் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் மத்திய குழுக்கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு சண்முகன் குகதாசன் தெரிவு செய்யப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் பெரும்பான்மையான பொதுச்சபை உறுப்பினர்கள் அப்பதவிக்கு மீள் தெரிவை செய்வதற்கு வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதே போன்றே தெரிவை அவ்வாறே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சுமந்திரன் அணியினர் கோரிவருகின்றனர். இது குறித்து அவர் கடிதம் ஒன்றையும் கட்சியின் தலைவர் சிறிதரனுக்கு அனுப்பியுள்ளார்.
இலங்கை தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரையில் நிர்வாகக்குழு தெரிவானது சர்ச்சையின்றி ஒருமைப்பாட்டுடனே இடம்பெற்று வந்திருக்கின்றது. ஆனால் இம்முறை அந்த தெரிவானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் சந்தி சிரிக்கும் நிலையையும் உருவாக்கியிருக்கிறது.
ஏற்கனவே கட்சியின் தலைவர் தெரிவில் பெரும் போட்டா போட்டி இடம்பெற்றிருந்தது. தலைவர் தெரிவில் தமிழரசுக்கட்சியின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவியிருந்தது. தலைவர் தெரிவு விடயத்தில் வாக்கெடுப்பின்றி பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று மூத்த தலைவர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா உட்பட்ட பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனாலும் இந்த ஆலோசனை பின்பற்றப்படாது தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது. இந்த வாக்கெடுப்பில் சுமந்திரன் எம்.பி.யை தோற்கடித்து சிறீதரன் தமிழரசுக்கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். தமிழரசுக்கட்சியின் வரலாற்றில் பொது இணக்கப்பாடின்றி முதல் தடவையாக தலைவர் பதவிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாகவே கடந்த 27ஆம் திகதி மத்திய செயற்குழுக்கூட்டத்தில் செயலாளர் உட்பட்ட நிர்வாகக்குழுவுக்கான தெரிவு இடம்பெற்றிருந்தது. அதிலும் சர்ச்சை ஏற்பட்டிருக்கின்றது. வட மாகாணத்தை சேர்ந்த சிறீதரன் தலைவராக தெரிவு செய்யப்பட்டதையடுத்து கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரை செயலாளராக நியமிக்கவேண்டும். என்ற விடயம் கருத்தில் கொள்ளப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசனை செயலாளராக நியமிக்கவேண்டும் என்று கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த குகதாசனை நியமிக்க வேண்டும் என்று சுமந்திரன் தரப்பினர் கோரிக்கை விடுத்ததையடுத்தே இந்த நியமனத்தில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
தற்போது செயலாளர் நியமனத்தை மீண்டும் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையினால் சர்ச்சை நிலைமை தொடர்ந்து வருகின்றது. இந்த சர்ச்சைக்கு முடிவு காணப்பட்டு கட்சிக்குள் காணப்படும் உள்முரண்பாடுகளை களைவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
இலங்கை தமிழரசுக்கட்சி வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற கட்சியாக திகழ்ந்திருந்தது. இந்தக்கட்சியின் தலைமையிலேயே தமிழ் தேசியக்கூட்டமைப்பானது செயற்பட்டு வந்தது. 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது அதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணி தாய்க்கட்சியாக செயற்பட்டது. ஆனாலும் கூட்டணிக்குள் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து ஆனந்த சங்கரி கட்சியின் சின்னத்தை தனதாக்கிக்கொண்டார். இதனையடுத்து தமிழரசுக்கட்சியின் வீட்டு சின்னத்தில் கூட்டமைப்பு செயற்படவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அன்றுமுதல் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு தமிழரசு கட்சியே தாய்க்கட்சியாக செயற்பட்டு வந்தது.
இரா. சம்பந்தன் தலைமையில் செயற்பட்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர் பிளவுகளை சந்தித்தது. ஆனாலும் கூட்டமைப்பாக செயற்பட்டு வந்திருந்தது. கடந்த 2022ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழரசுக்கட்சியின் தான்தோன்றித்தனமான செயற்பாடு காரணமாக கூட்டமைப்பு பிளவடைந்தது.
அதில் அங்கம் வகித்த ரெலோ, மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக மேலும் மூன்று கட்சிகளை ஒன்றிணைத்து செயற்பட ஆரம்பித்திருந்தன. தமிழரசுக்கட்சி தனித்து நின்றது. தற்போது அந்தக்கட்சிக்குள் தலைமைத்துவப் போட்டி ஏற்பட்டு உள் முரண்பாடு அதிகரித்திருக்கின்றது. பொதுச்சபைக்கூட்டத்தில் கைகலப்பு இடம்பெறும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் தாய்க்கட்சியாக இருந்த தமிழரசுக்கட்சி தற்போது உள்முரண்பாட்டுக்குள் சிக்கி ஊசலாடுகின்றது.
இந்த சர்ச்சைக்கு முடிவு காணப்பட வேண்டும். அத்துடன் தமிழரசுக்கட்சியுடன் ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
தமிழரசுக்கட்சியின் புதிய தலைவராக சிறீதரன் பதவியேற்றதையடுத்து தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஓரணியாக செயற்பட தயார் என்று அறிவித்திருந்தார். அவரது இந்த அறிவிப்புக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகித்த கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் சாதகமான சமிக்ஞையை வெளிக்காட்டியிருந்தனர். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை அரசியல் கூட்டுக்கட்சியாக பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பாக நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட்ட சமயத்திலும் கூட்டமைப்பை பதிவு செய்யுமாறு கூட்டுக்கட்சிகள் வலியுறுத்தியிருந்தன. ஆனால் அதற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை செவிசாய்க்கவில்லை. அதன் காரணமாகவே பிரிவுகளும் பிளவுகளும் ஏற்பட்டிருந்தன.
தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணவும் முன்வரவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கின்றது.
வெறும் சுயநல அரசியலை கருத்தில் கொண்டு கட்சிகள் மத்தியில் உள் முரண்பாடுகளை அதிகரிக்காது ஒற்றுமையுடன் பயணிப்பதற்கு சகல தரப்பும் முன்வரவேண்டும்.
இலங்கை தமிழரசுக்கட்சியை பொறுத்தவரையில் தலைமைத்துவப் போட்டிக்காக முரண்படும் செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். மூத்த தலைவர்களுக்கு மதிப்பளித்து அவர்களது ஆலோசனைகளுக்கு இணங்க செயற்படும் மனநிலை புதிய நிர்வாக குழுவினருக்கு ஏற்படவேண்டும். இதனைவிடுத்து நான்பெரிது, நீ பெரிது என முரண்படுவதனால் கட்சியின் கட்டுக்கோப்பு சீர்குலையுமே தவிர வேறெதுவும் இடம்பெறப்போவதில்லை.
எனவே இனியாவது தமிழரசுக்கட்சியின் தலைமையும் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகளும் சிந்தித்து செயற்பட வேண்டும் என்று வலியுறுத்த விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM