சிக்லெட்ஸ் - விமர்சனம்

02 Feb, 2024 | 06:49 PM
image

தயாரிப்பு : எஸ்.எஸ்.பி. பிலிம்ஸ்

நடிகர்கள் : சாத்விக் வர்மா, ஜேக் ரொபின்சன், நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹல்தார், மஞ்சீரா, ஸ்ரீமன், மனோபாலா உள்ளிட்ட பலர்.

இயக்கம் : எம். முத்து

மதிப்பீடு : 2.5/ 5

‘திறந்திடு சீசே’ எனும் படத்தை இயக்கிய இயக்குநர் எம். முத்து சிறிய இடைவெளிக்கு பிறகு இயக்கியருக்கும் இளமை ததும்பும் கதை தான் ‘சிக்லெட்ஸ்’. 

இன்றைய இளம் தலைமுறை பெண்களுக்கு திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது குறித்த எதிர்பார்ப்பையும், அதற்கான சாத்தியத்தைப் பற்றியும், அது குறித்த பெற்றோர்களின் நிலைபாட்டையும் முன்னிலைப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த ‘சிக்லெட்ஸ்’ இளம் தலைமுறையினரைக் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். 

ரியா, அனுஷா, அம்பி என மூன்று இளம் பெண்கள் ‘ஏ’ லெவல் கல்வியை நிறைவு செய்து, உயர்கல்வியை கற்பதற்காக தயாராகிறார்கள். அத்துடன் தங்களுக்கு இந்த வயதுக்கே உரிய பயணம், பார்ட்டி, ஆண் நண்பர்கள், காதல், காமம் என சுதந்திரத்தை அனுபவிக்கவும் விரும்புகிறார்கள். ஆனால் இந்த மூன்று பெண்களின் பெற்றோர்களும், தங்களின் பிள்ளைகள் இந்த வயதில் தடுமாறாமல் கடந்து, வாழ்க்கையில் வெற்றிப்பெறவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதற்காக அவர்களை அவதானிக்கத் தொடங்குகிறார்கள். பிள்ளைகளோ பெற்றோர்களை ஏமாற்றி, தங்களுடைய ஆண் நண்பர்களுடன் பார்ட்டிகளில் பங்குபற்ற திட்டமிடுகிறார்கள். இதற்காக ஒரு பொய்யை கூறி அனைவரும் காரில் பயணிக்கிறார்கள். 

ஒரு புள்ளியில் தங்களது பிள்ளைகள் தங்களிடத்தில் பொய்யைச் சொல்லி பார்ட்டிகளில் பங்குபற்ற இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. அதன் பின்னர் இவ்விடயத்தில் பிள்ளைகள் வெற்றி பெற்றார்களா? அல்லது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளைக் காப்பாற்றினார்களா? என்பதுதான் படத்தின் கதை.

கதைக்களத்தில் பாலியல் விடயங்கள் பேசப்படுவதால், திரையில் நாயகிகளுக்கு கவர்ச்சியான ஆடைகளை அணியவைத்து, இளைய தலைமுறை ரசிகர்களை சூடேற்றுகிறார்கள். ஒவ்வொரு பெண்களுக்கும் அவர் தம் பெற்றோர்கள் மீதான புரிதல்  சரியாகவே இருக்கிறது என்பது போலவும், பெற்றோர்கள் தான் வீணாகவே கவலையடைகிறார்கள் என்பது போலவும் கதையைச் சொல்லியிருப்பது பார்வையாளர்களை கவர்வதற்குத்தான். அதே நேரத்தில் கலாசாரம் மாறியிருக்கிறது என்பதை இளம் தலைமுறையினர் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய பாலியல் விருப்பத்தை பெற்றோர்களுடன் பகிர்ந்து கொள்ள தயாராகவே இருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்கள். குறிப்பாக தன்பாலின உணர்வு மிக்க பெண் ஒருத்தி, தன்னுடைய பாலியல் விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவிப்பதைக் குறிப்பிடலாம். 

பிள்ளைகள் தடுமாறும்போது அவர்களுக்கு ஊன்றுகோலாக இருந்து பெற்றோர்கள் தான் கை தூக்கிவிடவேண்டும் என்பதை இயக்குநர் சொல்லியிருப்பதால் பாராட்டலாம். 

நடிகர்கள் மற்றும் நடிகைகள் புதுமுகமாக இருந்தாலும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதால் ரசிகர்களால் படத்தை ரசிக்க முடிகிறது. அவர்களும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக நடித்திருக்கிறார்கள். கொமடி குறைவு என்றாலும், காதலர்களுக்கிடையேயான நெருக்கமான காட்சிகள் அதிகம் என்பதால் தொய்வு தெரியவில்லை.

படத்தின் காட்சிகள் இளமையாக இருந்தாலும், காட்சி மொழியாக்கம் என்பது ஆர்கானிக்காகவே இருக்கிறது. அப்டேட்டாக இருந்திருக்கலாம். பாடல்களின் மெட்டில் இருக்கும் இளமை பாடல் வரிகளில் மிஸ்ஸிங்.

இயக்குநர் கே. பாக்யராஜின் பின்னணி குரல் கதையைப் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. படம் நிறைவடையும் தருவாயில் இயக்குநர் சொல்லவந்ததை பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒப்புக்கொள்ளத்தான் தோன்றுகிறது.

சிக்லெட்ஸ் - சொக்லேட் ஃபிளேவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right