இலங்கை அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு -20 போட்டியில் நியூசிலாந்து அணி 3 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றைக் கைப்பற்றிய நியூசிலாந்து அணி அதே உத்வேகத்துடன் இருபதுக்கு -20 தொடரிலும் களமிறங்கியது.

 இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப்பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக குப்தில் 58 ஓட்டங்களையும் வில்லியம்ஸன் 53 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக குலசேகர 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

183 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி இலங்கை அணி இறுதிநேரம் வரை மிகவும் போராடியது.

இருப்பினும் இறுதி நேரத்தில் 3 ஓட்டங்களால் வெற்றி இலங்கை அடையது தோல்வியடைந்தது.

இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் குணதிலக்க 46 ஓட்டங்களையும் சிறிவர்தன 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் நியூசிலாந்து அணி சார்பாக ஹென்றி மற்றும் போல்ட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

3 ஓட்டங்களால் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக நியூசிலாந்து அணியின் போல்ட் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு - 20 போட்டி எதிர்வரும் 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.