நேர்காணல்: சி.சி.என்
ஆசியாவின் மிகப்பழமை வாய்ந்த தொழிற்சங்கம் என போற்றப்படும் இலங்கை தொழிலாளர் காங்கரஸின் தலைவர் , கிழக்கு மாகாண ஆளுநர் என்ற அடைமொழிகளோடு வலம் வரும் செந்தில் தொண்டமானின் அண்மைக்கால நகர்வுகள் அவரை சர்வதேச மட்டத்தில் பேச வைத்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் அவர் நடத்திய காட்டிய பிரமாண்டமான பொங்கல் விழா, தமிழக மற்றும் வெளிநாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகளுக்காக சிறப்பு அதிதியாக அழைக்கப்படல், தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் வடக்கு கிழக்கு மக்களுக்கு இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொடுத்தமை, மலையக மக்களின் இருநூறு வருட பூர்த்தியை முன்னிட்டு டெல்லியில் இடம்பெற்ற முத்திரை வெளியீட்டில் கலந்து கொண்டமை, போன்ற விடயங்களைக் கூறலாம்.
மலையக சமூகம் தேசிய நீரோட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட தேசிய மட்டத்தில் பேசப்படும், செயலாற்றும் ஒரு தலைவர் தேவை என்ற கடந்த கால கோரிக்கைகளுக்கு வழிசமைக்குமுகமாக தலைமைத்துவ பண்புகளுடனும் துடிப்புடனும் வலம் வரும் அவருடனான நேர்காணல் இங்கு தரப்படுகின்றது.
கேள்வி: தமிழ் உலகம் திரும்பிப்பார்க்க வைத்த கிழக்கில் இடம்பெற்ற பிரமாண்ட பொங்கல் விழாவைப்பற்றி?
பதில்: கடந்த காலங்களில் அங்கு தமிழ் மக்கள் சரஸ்வதி பூஜையை நடத்தினாலும் அதற்கு இடையூறுகள் இருந்தன. ஆனால் இலங்கையில் முதன் முதலாக திருகோணமலையில் ஜல்லிகட்டு, சிலம்பாட்டம், படோகோட்டப்போட்டிகள், இரவு பகல் கபடி போட்டிகள், ஆயிரத்தெட்டு பானை பொங்கல், 1500 நடனக்கலைஞர்கள் ஒரே தடவையில் ஒரே இடத்தில் முன்னெடுக்கப்பட்ட பாரம்பரிய நடன நிகழ்வுகள் உலக வாழ் தமிழ் மக்களும் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றது. பல வெளிநாட்டு ஊடகங்களும் இதை உலக வாழ் தமிழ் மக்களுக்கு கொண்டு சேர்த்திருந்தன.
சமூக ஊடகங்களில் அதிகமானோர் கண்டு களித்த ஒரு நிகழ்வாக இது இருந்தது. இதற்கு மாகாணத்தின் அனைத்து தரப்பினரும் எமக்கு ஒத்துழைப்பை நல்கினர். அதற்கு முன்பதாக பிரமாண்ட கிறிஸ்துமஸ் நிகழ்வை நடத்தியிருந்தோம். அடுத்ததாக ரம்ஸான் நிகழ்வை நடத்துவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும் பொசன் போயா தின நிகழ்வுகளையும் முன்னெடுக்கவுள்ளோம். எமது நாட்டின் அனைத்து இனத்தவர்களும் மதத்தவர்களும் அவர்களுக்குரிய பாரம்பரியங்களை எந்த தடைகளும் இல்லாது முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்பு இப்போது உருவாகியுள்ளது என்பேன். அதை கிழக்கு மாகாணத்திலிருந்து முன்னெடுப்பற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தமை மகிழ்ச்சி.
இவ்விடத்தில் இதற்கான முழுமையான ஒத்துழைப்பையும் அனுமதியையும் வழங்கி என்னை சுதந்திரமாக இயங்க வைத்துள்ள ஜனாதிபதிக்கும் நன்றி கூற வேண்டும். கிழக்கு மாகாண மக்கள் மாத்திரமின்றி நாட்டின் அனைத்து இன மக்களும் தமது பாரம்பரியம், பண்பாடுகளை என்றும் எதற்காகவும் விட்டு விடக் கூடாது, விட்டுக்கொடுக்கவும் கூடாது என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
கேள்வி: இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் தொழிலாளர்களின் வேதனம், நிலவுரிமை தொடர்பில் என்ன நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றீர்கள்?
பதில்: சம்பள விடயத்தில் கம்பனிகளுடன் பேச்சு நடத்துவது இழுபறியான விடயம். கூட்டு ஒப்பந்த காலத்தில் பேச்சு நடத்துவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. இப்போது சம்பள நிர்ணய சபை ஊடாக தொழிலாளர்களின் வேதனம் தீர்மானிக்கப்பட்டு வருவதால் தற்போதைய சூழ்நிலைக்கு நாம் தொழில் அமைச்சின் ஊடாக, கோரப்பட்டுள்ள சம்பளத்தை நியாயப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். கம்பனிகள் சார்பில் என்ன காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன என்பதை அறிவதற்காகவே பேச்சு வார்த்தைகள் இடம்பெறுகின்றன. அடுத்ததாக நிலவுரிமை. இது இருநூறு வருட கால பிரச்சினை. நிலவுரிமை என்பது ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டிய அடிப்படை உரிமை. அதில் மாற்றுக்கருத்துகளுக்கு இடமில்லை. இது சாணக்கியமாக முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம். கடந்த பல வருடகாலமாக இது குறித்து பேசப்பட்டு வருகின்றது. அது தொடர்பில் நாம் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவற்றை எவ்வாறு பெற்றுக்கொள்வதென்பது குறித்த நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம்
கேள்வி: மலையகத்தில் அட்டன் நகரில் இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவைப்பற்றி நேர்மறை எதிர்மறை விமர்சனங்கள் எழுந்துள்ளனவே?
பதில்: எந்த நிகழ்வுகள் இடம்பெற்றாலும் விமர்சனங்கள் எழும். அதை தவிர்க்க முடியாது. தேசிய பொங்கல் நிகழ்வுகள் மலையகத்தில் இடம்பெற்றமை எமக்கு பெருமை தரக் கூடிய விடயம். இதற்கு முன்னரும் அமரர்களான செளமியமூர்த்தி தொண்டமான் , ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் காலப்பகுதியில் தேசிய பொங்கல் விழாக்கள் இடம்பெற்றன. எம்முடைய நோக்கம் எமது தமிழ் மக்களின் மரபையும் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதாகும்.
கேள்வி: இந்தியாவுடன் நெருக்கமான நட்பை பேணி வருவதாகத் தெரிகின்றது. சிறப்பு நிகழ்வுகளுக்கு உங்களை மாத்திரம் அழைப்பதன் நோக்கம் என்ன?
பதில்: அனைத்துத் தரப்பினருடனும் தொடர்புகளை பேணி வருவதன் காரணமாகவே என்னை சில முக்கிய நிகழ்வுகளுக்கு அழைக்கின்றனர். அது இந்திய மத்திய அரசாங்கமானாலும் தமிழ் நாடு அரசாங்கமானாலும் நான் பங்குகொள்வேன். ஆட்சியிலிருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ஸ்ரீ ஜே.பி.நட்டா, தமிழகத் தலைவர் அண்ணாமலை ஆகியோரின் ஏற்பாட்டிலேயே எமது மலையக சமூகத்தின் இருநூறு வருட கால பூர்த்தியை கெளரவிக்கும் வகையில் புதுடெல்லியில் ஞாபகார்த்த முத்திரை வெளியிடப்பட்டது. முதல் முத்திரை உறையை வெளியிடுவதற்கான நான் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையில் பல அரசியல்வாதிகள் இருந்தபோதிலும் எனக்கு முதல் முத்திரை உறை வழங்கப்படுவதற்கான கெளரவம் கிடைத்தது. மட்டுமின்றி மலையக மக்களுக்கு எதிர்காலத்தில் தேவையான வேலைத்திட்டங்கள் குறித்தும் பா.ஜ.க தலைவர்களுடன் கலந்துரையாடினேன். இதில் இ.தொ.காவின் உயர்மட்ட குழுவினரும் என்னோடு கலந்து கொண்டிருந்தனர்.
அதே போன்று அண்மையில் இடம்பெற்ற அயலக தமிழர் தின நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலில் கலந்து சிறப்பித்த மாநாட்டுக்கு சிறப்பு விருந்தினர் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. உலக வாழ் தமிழர்கள் வரிசையிலிருந்து எனக்குக் கிடைத்த அழைப்பை மிக முக்கியமானதாக கருதுகிறேன்.
மேலும் இலங்கையில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி தமிழர்களுக்காக மாத்திரமின்றி முழு இலங்கை மக்களுக்கும் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை கடந்த காலங்களில் நான் பெற்றுத் தந்திருக்கின்றேன். குறிப்பாக கொரோனா நெருக்கடி காலங்களில் டெல்லியிடம் கதைத்து ஒரு பில்லியன் டொலர் நிதியை வட்டியில்லாது பெற்றுக்கொடுத்தேன். தமிழக அரசிடமிருந்து 40 இலட்சம் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் பெற வழிவகுத்தமை முக்கிய விடயம். 500 மெட்ரிக் தொன் பால்பவுடர் 100 மெட்ரிக் தொன் மருந்து பொருட்கள் இதில் அடங்கின. பாண்டிச்சேரி அரசாங்கத்திடமிருந்தும் மருந்து பொருட்களை இலங்கை அரசாங்கத்துக்கு பெற்றுத்தந்தேன். அந்நேரம் நான் எந்த பதவி நிலைகளிலும் இல்லை. இருநாடுகளுக்குமிடையில் ஒரு உறவுப் பாலமாகவும் இராஜதந்திர ரீதியில் நட்பை பேணி வரும் ஒருவராகவும் இருந்த காரணத்தினாலேயே ஜனாதிபதி எனக்கு இப்படி ஒரு பொறுப்பை தந்திருக்கிறார் என நினைக்கிறேன்.
கேள்வி: பிரான்ஸ் நாட்டில் திருவள்ளுவர் சிலையை அங்குரார்ப்பணம் செய்து வைக்க சென்றிருந்தமை குறித்து?
பதில்: இந்திய பிரதமர் மோடியின் ஏற்பாட்டில் அந்நாட்டில் திருவள்ளுவர் சிலை ஒன்றை திறப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. இருநாட்டு அரசும் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டேன்.
கேள்வி: தமிழகத்தில் அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களுக்கு அண்மையில் கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டமைப் பற்றி…
பதில்: சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்து அகதிகளாக பலரும் பல நாடுகளுக்குச்சென்றனர். இந்தியாவைத் தவிர ஏனைய நாடுகள் அவர்களுக்கான குடியுரிமை அந்தஸ்த்தை வழங்கின. இந்திய குடியுரிமை சட்டத்தில் அதற்கு இடமில்லை. கடந்த பல தசாப்தங்களாக இவர்களது விடயத்தில் இலங்கை ஆட்சியாளர்களும் அக்கறை கொள்ளவில்லை. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் இந்திய மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் பேச்சு நடத்தியிருந்தார். அவரது வழிகாட்டலில் இவ்வாறு அகதிகளாக வாழ்ந்து வரும் சுமார் ஒரு இலட்சம் வடக்கு கிழக்கு தமிழர்களுக்கான அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிநிதியாக கலந்து கொண்டு அவற்றை வழங்கி வைத்தேன்.
கேள்வி: இவ்வாண்டு இடம்பெறவுள்ளதாகக் கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலில் மலையக சமூகம் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்?
பதில்: இப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நகர்வுகள் குறித்து தவறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடிகள் முழுவதுமாக தீர்க்கப்பட்டன என்று நான் கூறவில்லை. ஆனால் வரிசை யுகத்துக்கு முடிவு கண்டு ஓரளவுக்கு நாட்டை சீர்படுத்திய பெருமை அவருக்கு உள்ளது.
வேறு எவருமே அந்த சவாலுக்கு முகங்கொடுக்க முன்வரவில்லை. ஆனால் எல்லாவற்றையும் ஒரே நாளில் செய்து விடமுடியாது. தற்போது மக்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் சிலவாகும். இதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமல்ல, யார் ஜனாதிபதியாக இருந்தாலும் அமுல்படுத்தியே தீருவார்கள்.
கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளை சிறிது சிறிதாக ஜனாதிபதி ரணில் சீர்படுத்தி வருகின்றார். மலையக சமூகத்துக்கான காணி உரிமை மற்றும் வேதன பிரச்சினைகள் பற்றி நேரடியாக குரல் கொடுத்த ஜனாதிபதி இவராவார். சர்வதேச ரீதியாக இவருக்குள்ள தொடர்புகள், அறிவாற்றல், இராஜதந்திரம் ஆகியவற்றினாலேயே நெருக்கடிகளிலிருந்து அவரால் நாட்டு மக்களை மீட்க முடிந்தது. ஆகையால் நாம் அவரது கரங்களை வலுப்படுத்த வேண்டும். ஆனால் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டால் மீண்டும் நாடு பழைய நிலைமைக்கே சென்று ஆரம்பத்தில் நாம் முகங்கொடுத்த பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கேள்வி: தொழிற்சங்க தலைவர் என்பதற்கு அப்பால் ஒரு மாகாணத்தின் ஆளுநர் என்ற பொறுப்பில் முகங்கொடுக்கும் சவால்கள் என்ன?
பதில்: நான் பொறுப்பேற்றிருக்கும் கிழக்கு பிரதேசம் பற்றி புதிதாக ஒன்றும் கூற வேண்டியதில்லை. அனைத்து தரப்பினரையும் அனைத்து செல்ல வேண்டிய பொறுப்புகள் உள்ளன. ஆனால் அனைவரையும் திருப்திபடுத்த முடியாது. இதில் அரசாங்கத்தின் கொள்கைகள் முக்கியமானவை. ஆரம்பத்தில் பல எதிர்ப்புகள், இடையூறுகள் இருந்தன. ஆனால் எனது பதவி காலத்தில் இப்பிரதேசத்தின் அனைத்து சமூகங்களுக்கும் சேவையாற்ற வேண்டிய தேவை உள்ளது. அதை முன்னெடுத்து வருகின்றேன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM