(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்டில் முதல் சுற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததுடன் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தக்கூடியதென கருதப்படும் சுப்பர் 6 சுற்று இன்று செவ்வாய்க்கிழமை (30) ஆரம்பமாகிறது.
நான்கு குழுக்களில் நடத்தப்பட்ட முதல் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் 3 இடங்களைப் பெற்ற அணிகள் சுப்பர் 6 சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளன.
முதல் சுற்று சற்று பரபரப்பையும் விறுவிறுப்பையும் தோற்றுவித்திருந்தன. சில போட்டிகள் கணிசமான மொத்த எண்ணிக்கைகளைக் கொண்டிருந்தன.
சில போட்டிகள் குறைந்த எண்ணிக்கைகளைக் கொண்டிருந்த போதிலும் அப் போட்டிகள் கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.
துடுப்பாட்டத்தில் இளம் வீரர்கள் சிலர் அசத்தியதுடன் மற்றும் சிலர் பந்துவீச்சில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.
எவ்வாறாயினும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இலங்கையின் ஆற்றல்கள் சிறப்பாக அமையவில்லை. துடுப்பாட்டத்தில் தினுர கலுபஹன (2 அரைச் சதங்களுடன் 123 ஓட்டங்கள்), சுப்புன் வடுகே (ஒரு அரைச் சதத்துடன் 73 ஓட்டங்கள்) ஆகிய இருவரே குறைந்தது ஒரு அரைச் சதத்தைப் பெற்று திறமையை வெளிப்படுத்தினர்.
இலங்கை சார்பாக 2ஆவது அதிகபட்சமாக 75 ஓட்டங்களை இளம் வீரர் ஷாருஜன் சண்முகநாதன் பெற்றதுடன் விக்கெட் காப்பில் ஆறு ஆட்டம் இழப்புகளில் (4 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்) பங்களிப்பு செய்திருந்தார்.
பந்துவீச்சில் விஷ்வா லஹிரு 7 விக்கெட்களையும் ருவிஷான் பெரேரா, மல்ஷா தருப்பதி ஆகியோர் தலா 5 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
வித்தியாசமான சுப்பர் 6 சுற்று
சுப்பர் 6 சுற்று இரண்டு குழுக்களில் நடைபெறவுள்ளதுடன் ஒவ்வொரு குழுவிலும் 6 நாடுகள் வீதம் இடம்பெறுகின்றன.
முதல் சுற்றில் ஏ குழுவில் முதல் 3 இடங்களைப் பெற்ற இந்தியா, பங்களாதேஷ், அயர்லாந்து ஆகியனவும் டி குழுவில் முதல் 3 இடங்களைப் பெற்ற பாகிஸ்தான், நியூஸிலாந்து, நேபாளம் ஆகியனவும் சுப்பர் 6 சுற்றில் முதலாவது குழுவில் இடம்பெறுகின்றன.
பி குழுவில் முதல் 3 இடங்களைப் பெற்ற தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியனவும் சி குழுவில் முதல் 3 இடங்களைப் பெற்ற அவுஸ்திரேலியா, இலங்கை, ஸிம்பாப்வே ஆகியனவும் சுப்பர் 6 சுற்றில் இரண்டாவது குழுவில் இடம்பெறுகின்றன.
ஒவ்வொரு குழுவிலிருந்தும் சுப்பர் 6 சுற்றுக்கு தெரிவான அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டிகளில் ஈட்டப்பட்ட வெற்றிகளுக்கான புள்ளிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
இந்த சுப்பர் 6 சுற்று வித்தியாசமான முறையில் நடத்தப்படவுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் இடம்பெறும் அணிகள் தலா 2 போட்டிகளில் விளையாடும். மாறுபட்ட நிலைகளில் உள்ள அணிகளுடனேயே ஒவ்வொரு அணியும் மோதும். அதாவது சுப்பர் 6 சுற்றுக்கு தெரிவான முதல் நிலை அணிகள், இரண்டாம் நிலை அணிகள், 3ஆம் நிலை அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்தாடாது.
இதன் காரணமாக ஏ குழுவில் முதல் நிலை அணி இந்தியாவும் டி குழுவில் முதல் நிலை அணி பாகிஸ்தானும் சுப்பர் 6 சுற்றில் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடாது.
சுப்பர் 6இல் ஆரம்பப் போட்டிகள்
சுப்பர் 6 சுற்றின் ஆரம்ப நாளான செவ்வாய்க்கிழமை (30) இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான போட்டி புளூம்பொன்டெய்னிலும், இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையிலான போட்டி கிம்பர்லியிலும் பாகிஸ்தானுக்கும் அயர்லாந்துக்கும் இடையிலான போட்டி பொச்சேஸ்ட்ரோமிலும் நடைபெறவுள்ளன.
இலங்கை தனது மற்றைய சுப்பர் 6 போட்டியில் தென் ஆபிரிக்காவை பெப்ரவரி 2ஆம் திகதி எதிர்த்தாடும்.
பெப்ரவரி 3ஆம் திகதிவரை சுப்பர் 6 போட்டிகள் நடைபெறும். இதனிடையே முதல் சுற்றில் கடைசி இடங்ளைப் பெற்ற 4 அணிகள் 13, 14, 15, 16ஆம் இடங்களைத் தீர்மானிக்கும் நிரல்படுத்தல் போட்டிகளில் விளையாடவுள்ளன.
சுப்பர் சுற்று முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் குறுக்கு முறையிலான அரை இறுதிகளில் விளையாடும். அரை இறுதிப் போட்டிகள் பெப்பரவரி 6ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறும்.
இறுதிப் போட்டி பெனோனியில் பெப்ரவரி 11ஆம் திகதி நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM