ப்ளு ஸ்டார் - திரை விமர்சனம்

26 Jan, 2024 | 05:49 PM
image

தயாரிப்பு : லெமன் லீஃப் கிரியேசன்ஸ் பிரைவேட் லிமிடெட்

நடிகர்கள்  : அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், கீர்த்தி பாண்டியன், ப்ருத்விராஜன், இளங்கோ குமரவேல், லிஸ்ஸி அண்டனி மற்றும் பலர்.

இயக்கம்  : எஸ். ஜெயக்குமார்

மதிப்பீடு  : 3 / 5

பா.ரஞ்சித் வழங்கும் படம்... டைட்டில் ப்ளூ ஸ்டார்..  போஸ்டரில் துடுப்பாட்ட விளையாட்டு... இது போதாதா... படம் துடுப்பாட்ட விளையாட்டில் நடைபெறும் அரசியலைப் பற்றி பேசுகிறது என்று புரிந்துகொள்ள... இருந்தாலும் இந்த படைப்பை  மண்ணின் மணத்துடனும், அம் மண்ணில் வாழும் மனிதர்களின் உணர்வுகளுடனும் திரையில் எப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.? என்ற எதிர்பார்ப்பு எழுகிறது. ஏனெனில் கடந்த காலத்தில் ஒரு காட்சியில் பின்னணியில் தெரியும் அரசியல் சார்ந்த குறியீடுகளைக் கொண்டே சர்ச்சையை எழுப்ப ஒரு கூட்டம் தயாராகயிருக்கிறது. இந்நிலையில் பெயரிலேயே அரசியலைக் கொண்டிருக்கும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதைக் காண்போம். 

1990 களில் தமிழக நகரான அரக்கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் தான் கதைக்களம். இங்கு பெரும்பச்சை என்ற பெயரில் ஒரு சிற்றூர் இருக்கிறது. இதில் காலனி தெரு மற்றும் ஏனைய மக்கள் வசிக்கும் தெரு என இரண்டு பிரிவுகள் இருக்கிறது.

இவ்விரு ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் ‘ப்ளு ஸ்டார்’ மற்றும் ‘ஆல்ஃபா பொய்ஸ்’ என இரு அணிகளாக  இருந்து விளையாடி வருகிறார்கள். இந்த இரு அணிகளும் தங்களுக்குள் யார் பெரியவர்? எனற கேள்வி எழுந்துக்கொண்டேயிருக்கிறது. ஒரு புள்ளியில் இந்த இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கும் வேறொரு தரப்பினரிடமிருந்து அவமானப்படுகிறார்கள். 

இதனால் இந்த இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் ஒற்றுமையாக இருந்து தங்களின் விருப்பத்திற்குரிய துடுப்பாட்டத்தை விளையாட வேண்டிய சூழல் உருவாகிறது. இவ்விரு அணி வீரர்களும் தங்களுக்குள் உள்ள பல ஆண்டு கால பகையை மறந்து ஒன்றிணைந்தார்களா? துடுப்பாட்ட போட்டியில் வெற்றிப் பெற்றார்களா? என்பதே இதன் கதை.

பொதுவாக பா. ரஞ்சித்தின் படம் என்றால்.. ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அவமானம், சாதீய ரீதியிலான ஒடுக்குமுறை, வாழ்வாதார பிரச்னை..எனும் விடயங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இந்த படத்திலும் ப்ளு ஸ்டார் அணியின் தலைவராக ரஞ்சித் எனும் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அசோக் செல்வன் அத்தகைய பிரச்சினைகளை எதிர்கொள்கிறார். ஆனால் இந்த முறை சற்று வித்தியாசப்படுத்தியிருக்கிறார்.

கிறித்துவ மதத்திற்கு மாறிய ஒடுக்கப்பட்ட மக்களாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். மேலும் மதம் மாறினாலும்... ஒடுக்கப்பட்ட மக்களின் குணங்களை கொண்டிருப்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார். இது திரைக்கதையில் சுவராசியத்திற்கு உதவினாலும், ஒரு கட்டத்தில் தொய்வைத் தருகிறது. குறிப்பாக அசோக் செல்வனின் தாயார் கதாப்பாத்திரம் பைபிள் வசனங்களை பேசுவதை சொல்லலாம். 

துடுப்பாட்ட விளையாட்டு வீரரான சாந்தனு பாக்யராஜ் அவமானப்படும் போது..அவருக்குள் நடைபெறும் மாற்றம்... திரைக்கதையில் இயக்குநர் சொல்ல வந்திருக்கும் அரசியல் மற்றும் சுவராசியமான விடயமும் கூட.

இதைவிட ‘புல்லட்’ பாபு என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி, அதன்மூலம் துடுப்பாட்ட விளையாட்டில் நடைபெறும் அரசியலை தோலுரித்திருப்பது.. ரசிக்க வைக்கிறது.

துடுப்பாட்டத்தைப் பற்றி இளம்பெண்களுக்கும் கனவுகளும், ஆசைகளும் இருக்கிறது என்பதை கீர்த்தி பாண்டியன் கதாப்பாத்திரம் மூலம் சொல்லியிருப்பதும்.. அவர்களுக்கு எம்மாதிரியான விடையை இந்த சமூகம் அளிக்கிறது என்பதையும் இயக்குநர் சுட்டிக்காட்ட தவறவில்லை.

துடுப்பாட்டத்தைப் பற்றிய படம் என்பதால் இதற்கு முன் வெளியான ‘சென்னை-28’, ‘கனா’ என ஏராளமான படங்களில் தாக்கம் இருக்கும் என எதிர்பார்த்தால்... அதிலிருந்து விலகி தனித்துவமான படைப்பு என்பதை இயக்குநர் நிரூபிருத்திக்கிறார். இருப்பினும் துடுப்பாட்ட விளையாட்டு தொடர்பான காட்சிகளின் நீளம் அதிகம். குறிப்பாக இரண்டாம் பாதியில் இடம்பெறும் துடுப்பாட்ட காட்சிகளின் நீளம் அநியாயம். உச்சக்கட்ட காட்சி எதிர்பார்த்தவை தான் என்றாலும்.. அதிலும் சின்ன சின்ன ஜிமிக்ஸ்களால் ரசிக்க வைக்கிறார் இயக்குநர். 

ரஞ்சித்தாக நடித்திருக்கும் அசோக் செல்வன் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.காதல், கோபம், வெறித்தளமான விளையாட்டு, என அனைத்திலும் ஸ்கோர் செய்து அசத்துகிறார்.

சாந்தனு பாக்யராஜ் தன் கதாப்பாத்திரத்தின் கனத்தை உணர்ந்து பொறுப்புடன் நடித்து மனதைக் கவர்கிறார். 

பிருத்விராஜன் - ரசிகர்களுக்கு ஆறுதலாகவும், சிரிப்பை வரவழைப்பவராகவும் நடித்து தன் பங்களிப்பை நிறைவு செய்து, மனதில் தங்குகிறார். 

கீர்த்தி பாண்டியன் - மண்ணுக்கேற்ற பொண்ணாக மாறி, மாணவியாகவும், துடுப்பாட்ட வீராங்களையாகவும், காதலியாகவும், காதலில் உருகுபவராகவும், காதலனுக்கு ஆதரவாகவும் நடித்து தன் இருப்பை உறுதிசெய்திருக்கிறார். 

இவர்களை கடந்து பக்ஸ் என்ற பகவதிபெருமாள கதாப்பாத்திரம் இந்த கதை முழுவதையும் நடத்தி செல்லும் மைய அச்சாணியாக நடித்து, அனைவரின் மனதையும் கவர்கிறார்.

தமிழ் ஏ அழகனின் ஒளிப்பதிவும், கோவிந்த வசந்தாவின் இசையும் படத்திற்கு பலம்.

பா. ரஞ்சித்தின்  உ தவியாளர் என்பதை இயக்குநர் நிரூபித்திருப்பதுடன், துடுப்பாட்ட விளையாட்டை மையப்படுத்தி ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலைப் பேசுவதில் குருவை மிஞ்சிய சீடராகவும் வெற்றிப் பெற்றிருக்கிறார். 

ப்ளூ ஸ்டார்  - வின்னிங் ஷாட்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிம்ரன் நடிக்கும் 'தி லாஸ்ட் ஒன்'

2024-09-07 15:08:05
news-image

விஜய் நடித்த 'கோட்' திரைப்படத்தின் முதல்...

2024-09-07 15:02:33
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'வேட்டையன்' ஃபர்ஸ்ட்...

2024-09-07 14:47:15
news-image

திரையிசை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் 'மீசை...

2024-09-06 14:38:06
news-image

'தலைவெட்டியான் பாளையம்' புதிய நகைச்சுவை இணைய...

2024-09-06 13:16:44
news-image

ஜூனியர் என்.டி.ஆர். நடிக்கும் 'தேவரா பார்ட்...

2024-09-05 19:09:14
news-image

யோகி பாபு வெளியிட்ட 'ஜாலி ஓ...

2024-09-05 18:09:33
news-image

தி கிரேட்டஸ்ட் ஒஃப் ஆல் டைம்...

2024-09-05 17:59:12
news-image

புது பிக்பொஸ் விஜய் சேதுபதி 

2024-09-05 14:21:00
news-image

புதுமுக நடிகர் அத்வே நடிக்கும் 'சுப்ரமண்யா'...

2024-09-04 17:56:46
news-image

மைக்கேல் தங்கதுரை நடிக்கும் 'ஆரகன்' படத்தின்...

2024-09-04 17:53:06
news-image

அவல நகைச்சுவை படைப்பாக தயாராகும் 'நிர்வாகம்...

2024-09-04 17:50:39