உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 8 நாடகளேயான பச்சிளம் குழந்தையை சரியான நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்க பிரதமர் நரேந்திர மோடி செய்த உதவியால் குழந்தை உயிர் தப்பியுள்ளது.

அசாமைச் சேர்ந்த கலிதா-ஹிமாக்‌ஷி தம்பதியினருக்கு எட்டு நாட்களுக்கு முன்னர் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆனால் குழந்தையின் உடலிலிருந்து முதன்முறையாக வெளியாகும் மலமானது, அதன் நுரையீரலில் சேர்ந்துவிட்டது. இதன் காரணமாக அந்த குழந்தை மூச்சு விட கடுமையாக திணறியுள்ளது.

  கடந்த சில நாட்களாக சிகிச்சை அளித்து வந்த அசாம் மருத்துவர்கள், குழந்தையின் உடல் நிலை மோசமடைந்ததால் உடனடியாக டெல்லியில் உள்ள வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்கு குழந்தையை அனுமதிக்க அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் ஹெலிகொப்டர் மூலமாக அந்த எட்டு நாள் குழந்தை அசாமிலிருந்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.

ஆனால் தலைநகரில் உள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக குழந்தையை குறிப்பிட்ட நேரத்தில் டெல்லி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியுமா? என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே இந்த பிரச்சனை குறித்து முன்னதாகவே பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைமையை புரிந்து கொண்டு இந்த விவகாரத்தில் தலையிட்ட மோடி, குழந்தை விரைவாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வகையில் எம்பியுலன்ஸ் செல்லும் வீதியில் போக்குவரத்தை முற்றாக நிறுத்த உத்தரவிட்டார்.

இதன் காரணமாக டெல்லி விமான நிலையம் வந்ததும்,சரியான நேரத்தில் வீதி வழியாக டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில் நேற்று அந்த குழந்தை ஆபத்துக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தங்கள் குழந்தையை காப்பாற்றிய தெய்வம் மோடி என அந்த பெற்றோர்கள் தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.