சி.சி.என்
மலையகத்தில் இப்போது கட்சித்தலைவர்கள் மாத்திரமே வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தொழிற்சங்க ரீதியாக தொழிலாளர் உரிமைகள் பற்றி பேசும் மக்கள் தலைவர்களை காணமுடிவதில்லை. இருநூறு வருடங்களை கடந்தும் இன்னும் தொழிலாளர் பிரச்சினைகளைப்பற்றிய எந்த தீர்வுகளையும் காண முடியாது அது பற்றி அரசாங்கத்திடம் பேச முடியாத நிலைமைகளில், இந்த மக்களின் வாக்குகளைப் பெற்றவர்கள் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.
மலையகத்தில் பாலும் தேனும் ஓடும் என்று கூறியவர்கள் நாட்டில் இருப்பதே அதிசயமாகவுள்ளது. சினிமா பாணியில் மேடைகளில் வசனங்களைப் பேசியவர்கள் மக்கள் மத்தியிலிருந்து நீண்ட தூரம் சென்று விட்டனர். அநேகமாக தேர்தல் என ஒன்று அறிவிக்கப்பட்டவுடன் வழக்கம் போன்று மக்களைத் தேடி வருவர். அவர்களை வரவேற்கும் தொடர்ச்சியான தவறுகளையே இந்த மக்கள் செய்யப்போகின்றனர் என்பதை இப்போதே உறுதியாக கூறி விடலாம்.
தொழிலாளர் வேதன விவகாரம் தோல்வியை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இது வரை இடம்பெற்ற பேச்சு வார்த்தைகளில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஒரு சதமேனும் கூட்டித்தர கம்பனிகள் இணங்கவில்லையெனத் தெரிய வந்துள்ளது. நேரடியாக கம்பனிகளை சந்திக்க அச்சமுற்ற நிலையில் ஜனாதிபதியை வைத்து சில தொழிற்சங்கங்கள் காய்நகர்த்த முயன்றாலும் அது சாத்தியப்படவில்லை. ஜனாதிபதியின் பணிப்புரைக்கே செவிசாய்க்காத கம்பனிகள் எங்ஙனம் மக்கள் மத்தியில் ஆதரவின்றி இருக்கும் தொழிற்சங்கங்களின் பக்கம் திரும்பிப்பார்க்கப் போகின்றன?
காணி உரிமை, மலையக பல்கலைக்கழகம் போன்ற விடயங்களை இந்த சமூகத்துக்குப் பெற்றுக்கொடுக்க இனி யாராவது பிறந்து தான் வர வேண்டுமோ என்ற நிலைமை மலையகத்தில் உருவாகியுள்ளது. வாக்குரிமையற்று நாடற்றவர்களாக இருந்த காலத்தில் இல்லாத அடக்குமுறைகளையும், அலட்சியப்படுத்தல்களையும் இன்று பெருந்தோட்டத்தொழிலாளர்கள் அனுபவித்து வருகின்றனர்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை நன்குணர்ந்துள்ள சிங்கள மக்கள் இன்று எந்த தேசிய கட்சிகளின் தலைவர்களையும் நம்பத் தயாராக இல்லை என்பதை ஊடகங்களின் வாயிலாக உணர்த்தி வருகின்றனர். தற்போதைய ஜனாதிபதியையே அவர்கள் விமர்சிக்கின்றனர். இது ஜனநாயக பண்புகளில் ஒன்றாகும். மேலும் தாம் வாக்களித்த அரசியல்வாதி தமது மக்களின் பிரச்சினைகளை பேசாதிருந்தால் அது குறித்து கேள்வி எழுப்பும் உரிமை மக்களுக்குள்ளது.
இப்போது மலையக சமூகத்தில் அந்த எழுச்சியை காண முடிகின்றது. சமூக ஊடகங்களில் தமது பிரதிநிதிகளிடம் அவர்கள் எழுப்பி வரும் கேள்விகளுக்கு சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் அவர்களுக்கு வால் பிடிப்பவர்களாலும் பதில் கூற முடியவில்லை. இதன் காரணமாகவே அவர்கள் தொடர்ந்தம் கட்சிகளின் தலைவர்களாகவும் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளாகவும் உள்ளனர். மக்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசாதவர்கள் எங்ஙனம் மக்கள் தலைவராக முடியும்? அவர்களும் அரசாங்கத்துக்கு வால் பிடிப்பவர்களே..!
இப்போதுள்ள மலையக அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தொழிற்சங்கப் பிரிவுகளின் செயற்பாடுகளைப்பார்த்தால், மக்களை வழிநடத்தக் கூடிய தலைவன் என்று சொல்லக் கூடிய அளவுக்கு எவருமே இல்லாத வெற்றிடம் நிலவுகின்றது. மலையகத்துக்குத் தேவை ஒரு தேசிய தலைமைத்துவமே ஒழிய ஒரு தோட்டத்துக்குள்ளேயோ அல்லது நகரத்துக்குள்ளேயோ சுற்றித் திரியும் பிரதிநிதிகள் இல்லை.
மக்களை அறிவுறுத்தும் வகையில் எந்த செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் திறன் கொண்டவர்களாக எந்த அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இல்லை என்பது வேதனை. மொத்தத்தில் இவர்களுக்கு தேசிய அரசியலோ அல்லது சமூக அரசியலோ புரியவில்லை. எதற்காக அரசாங்கத்தோடு இணைந்திருக்கின்றோம், எதற்காக எதிர்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கின்றோம் என்ற எந்த உணர்வுகளும் இல்லாது அடுத்த தேர்தல்களுக்கு முகங்கொடுக்க தயாராகி வருகின்றனர் மலையக அரசியல்வாதிகள்.
அதே போன்று வழமையாக இவர்கள் கூறப்போகும் பொய்களை இரசிக்க காத்திருக்கின்றது மலையக சமூகம். கடந்த வருடம் முழுதும் மலையகம்–200 என்ற பெயரில் நிகழ்வுகளை நடத்தி எந்தவொரு தோட்டப்பகுதியிலும் ஒரு மலசலகூடத்தை சரி அமைத்துத் தராத இவர்களா இந்த ஆண்டு தேர்தல்கள் முடிந்தவுடன் ஆட்சியமைக்கும் அரசாங்கத்துடன் இணைந்து காணி உரிமையைப் பெற்றுத்தரப் போகின்றார்கள்? இவர்களா மலையக பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டப்போகின்றனர்? இவர்களா தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுத்தரப் போகின்றனர்? தலைமைத்துவத்தின் பண்புகளைப் பற்றி போதிக்கும் அரசியல்வாதிகள் தாம் மக்களுக்கு ஒரு நல்ல தலைவனாக விளங்குகின்றோமா என்பது பற்றி சிந்திப்பதில்லை.
2024ஆம் வருடம் நாட்டு மக்கள் அனைவருக்குமே பெரும் நெருக்கடிகளை தருவதாகவே உதித்துள்ளது. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலைகளைப் பற்றி புதிதாக எதுவும் கூறத்தேவையில்லை. நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரக்கூடிய பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுத்தர வேண்டும் என எந்த மலையக பிரதிநிதியாவது நாடாளுமன்றில் வாய் திறந்து கதைத்தார்களா? பல சலுகைகளை பெற்று வரும் அரச ஊழியர்களே நெருக்கடிகளுக்கு மத்தியில் அரச நிவாரணத்தை எதிர்ப்பார்த்து நிற்கின்றனர்.
அரசாங்கமும் வாழ்க்கைச்செலவு கொடுப்பனவாக அவர்களுக்கு ஐயாயிரம் ரூபாவை முதற்கட்டமாக வழங்குவதற்கு முடிவெடுத்துள்ளது. இங்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவுக்கு குறைவாக பெற்று வரும் தொழிலாளர்களுக்கு ஐம்பது ரூபாவை உயர்த்துவதற்கே கம்பனிகள் பின்னடிக்கின்றன. சம்பள உயர்வு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாட்களை கடத்தும் ஒரு நாடகமே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதை புரிந்து கொண்ட தொழிலாளர்கள் அமைதி காத்து வருகின்றனர்.
சம்பள உயர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று தம்மை மறந்து அறிக்கை விடும் பிரதிநிதிகள் உண்மையில் தாம் நகைச்சுவை நடிகர்கள் தான் என்பதை தொழிலாளர்களுக்கு வெளிப்படுத்தி விடுகின்றனர். பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிற்சங்க செயற்பாடுகளே இல்லாத நிலையில் இவர்கள் கூறியவுடன் தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராட ஆரம்பித்து விடுவார்களா?
மலையக அரசியலில் தம்மை தலைவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் முதலில் அந்த அடைமொழிக்கு தாம் பொருத்தமானவர்கள் தானா என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM