இராமரும் அனுமானும் அன்று இந்தியாவிற்கும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைத்து போர் தொடுத்து ஆக்கிரமிப்பு செய்தனர். அனுமான் தனது வாலால் தீ வைத்து இலங்கையை அழித்தார். அதே போன்றதொரு ஆக்கிரமிப்பு முறை தற்போது உருவெடுத்து புதிய இராமாயணத்திற்கு இந்தியா வித்திட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். 

இலங்கை அரசாங்கம் தனக்கு தெரியாது என கூறுகின்ற ஒரு விடயத்தை இந்திய பாராளுமன்றத்தில் உறுதிப்பட பேசுவது , இலங்கை மீதான இந்தியாவின் பலவந்தமான ஆக்கிரமிப்பின் வெளிப்பாடா ? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஒன்றிணைந்த  எதிர் க்கட்சியின்  ஊடக சந்திப்பில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கையின் பொருளாதாரம் படுபாதாளாத்தில் விழுந்துள்ளது. இந்நிலையில் சர்வதேசத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான ஜோர்ஜ் ஷோரோஸ் என்பவரை அழைத்து வந்து அரசாங்கம் பொருளாதார மாநாடு நடத்துகின்றது. 

ஜோர்ஜ் ஷோரோஸ் என்பவர் ஜேம்ஸ் பெக்கரை விட பன்மடங்கு ஆபத்தானவர் என்பதே உண்மை. 1992 ஆம் ஆண்டில் ஐரோப்பிய வங்கி பாரிய நிதி நெருக்கடிக்குள் விழுவதற்கு இவரே காரணகர்த்தாவாக இருந்தார். 

இது இவ்வாறு இருக்க இந்தியா இன்று இலங்கைக்கு பாலம் அமைப்பது தொடர்பில் பேசி வருகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியில் கடன் கோரியுள்ளதாகவும் அது கிடைக்கப்பெற்றதும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாலம் அமைப்பதாகவும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசப்படுகின்றது. 

இதன் உண்மை தன்மை தொடர்பில் அரசாங்கம் உறுதிப்பட கூறாத நிலையில் அதனை நிராகரித்து வருகின்றது. ஆனால் இந்தியா பாலம் அமைப்பதற்கு கடன் பெற்றுக் கொள்ளும் வரை சென்றுள்ளது. 

அவ்வாறானால் இந்தியா இலங்கை மீது பலவந்தமாக ஆக்கிரமிப்பை மேற்கொண்டு வருகின்தா ? இதே போன்று தான் அன்று இராமரும் அனுமானும்  இலங்கைக்கு பாலம் அமைத்து போர் தொடுத்தார்கள். அனுமான் வாலால் இலங்கைக்கு தீ வைத்து பேரழிவை ஏற்படுத்தினார். அதே போன்றதொரு நிலைமையா இன்றும் ஏற்பட போகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வியெழுப்பினார்.