தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழினத்தின் சாபக்கேடாகும். இவர்கள் இருக்கும் வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களுக்கு விமோசனம் கிடையது. நல்லிணக்கத்தை ஸ்தாபிப்பதற்கு எடுக்கும் சகல முயற்சிகளுக்கும் இவர்கள் தடையாக உள்ளார்கள். இலங்கையில் சிங்கள அரசு, தமிழ் அரசு என்று எதுவுமில்லை. ஸ்ரீலங்கா அரசே இலங்கையில் உள்ளது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
பாராளுமன்றத்தில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தை நீதி அமைச்சர் சமர்ப்பித்த பின்னர் உரையாற்றுகையிலேயே இத்தகைய குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். நீதி அமைச்சரது கருத்திலிருந்து அரசாங்கமானது நாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முனைவதாகவும் அதற்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதாகவே அமைந்திருக்கின்றது.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் தமிழ் மக்கள் தமது உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். நாடு சுதந்திரம் பெற்றதன் பின்னர் தமிழ் மிதவாதத் தலைவர்கள் தமிழ் மக்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காக அஹிம்சாவழியில் போராடினார்கள். சிங்களத் தலைவர்களுடன் தமிழ்த் தலைவர்கள் பல்வேறு ஒப்பந்தங்களையும் உடன்பாடுகளையும் கண்டிருந்தார்கள்.
தந்தை செல்வநாயகம் காலத்தில் பண்டா–செல்வா ஒப்பந்தம், டட்லி– செல்வா ஒப்பந்தம் என பல்வேறு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. ஆனாலும் அந்த இணக்கப்பாடுகள் எதுவும் உரிய வகையில் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அஹிம்சாவழியில் போராடிய தமிழ்த் தலைவர்கள் தெற்கில் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
இவ்வாறு ஜனநாயக வழியிலான போராட்டங்கள் தெற்கின் அரச தலைவர்களினால் உதாசீனம் செய்யப்பட்டதையடுத்தே அநீதிக்கு எதிராக நீதி கோரி தமிழ் இளைஞர்கள் 80களின் முற்பகுதியில் ஆயுதம் ஏந்தவேண்டிய நிலைமை உருவாகியிருந்தது..
வடக்கு, கிழக்கில் விடுதலைப்புலிகள் பலம்பெற்றிருந்த காலப்பகுதியில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, சந்திரிக்கா குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது ஆட்சிக்காலங்களில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
2001 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்க காலத்தில் நோர்வேயின் அனுசரணையுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒரு கட்டமாக ஒஸ்லோ பிரகடனம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. ஒருமித்த நாட்டுக்குள் சமஷ்டி தீர்வை அடிப்படையாக ஏற்கும் வகையிலேயே இந்த பிரகடனம் கைச்சாத்தானது. ஆனாலும் இத்தகைய பேச்சுவார்த்தைகளும் உரிய தீர்வை வழங்கியிருக்கவில்லை.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் யுத்தத்தை வெற்றிகொண்ட மமதையில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுந்திர முன்னணி அரசாங்கமானது பேச்சுக்களை நடத்துவதற்கு முன்வரவில்லை. விடுதலைப்புலிகளை அழித்த பின்னர் பேச்சுக்கள் அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டில் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ செயற்பட்டு வந்தார்.
ஆனாலும் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது. 16 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இதன்போது இடம்பெற்றன. இந்த பேச்சுக்களில் பெரும் ஆர்வத்துடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பில் இந்தப் பேச்சுக்களில் அதிக அக்கறை காண்பிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் தொடர்பிலும் காணாமல்போனோர் விவகாரம் குறித்தும் புனர்வாழ்வு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளிப்படுத்துவது குறித்தும் இந்தப் பேச்சுக்களில் அக்கறை காண்பிக்கப்பட்டது. இவ்விடயங்களில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்ட போதிலும் அந்த இணக்கப்பாடுகளை நடைமுறைப்படுத்த அன்றைய அரசாங்கம் முன்வரவில்லை. இருந்தாலும் பொறுமையுடன் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் இந்தப் பேச்சுக்களில் பங்குபற்றியிருந்தனர். பின்னர் அந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து அரசாங்கத்தரப்பானது விலகிக்கொண்டது.
அன்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்ற விடயத்தில் அக்கறையுடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்டிருந்த போதிலும் அதனை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
இதன் பின்னர் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் உருவானதையடுத்து அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த இணக்கப்பாடு புதிய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு வலியுறுத்தியது. இதற்கிணங்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வழி நடத்தல் குழு நியமிக்கப்பட்டு அரசியல் தீர்வு, தேர்தல் முறை மாற்றம் , புதிய அரசியலமைப்புக்கான விடயம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடல்களின் போது இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் பெரும் விட்டுக்கொடுப்புடனும் சகிப்புத்தன்மையுடனும் பேச்சுக்களில் ஈடுபட்டனர். ஒருமித்த நாட்டுக்குள் மாகாணங்களின் அதிகாரம் மீளப்பெற முடியாத வகையிலான தீர்வை பெற்றுக்கொள்ளும் வகையில் இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன. இந்தப் பேச்சுவார்த்தையின் போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பானது பல்வேறு விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்ட போது ஏனைய அரசியல்கட்சிகளின் தலைவர்கள் அதனை கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனாலும் அந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாது சம்பந்தன் அரசியல் தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்.
2016ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்கு முன் தீர்வு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார். அதன் பின்னர் தீபாவளிக்கு முன்னர் தீர்வை பெற்று விட முடியும் என்று அவர் கருத்து வெளியிட்டார். இவ்வாறு பெரும் நம்பிக்கையுடன் அரசியல் தீர்வுக்கான முயற்சியில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு அன்று ஈடுபட்டிருந்தது. ஆனால் தெற்கின் அரசியல் சூழ்நிலை காரணமாக அந்த முயற்சியும் இடைநடுவில் கைவிடப்பட்டது.
இதேபோன்றே தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியிலும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகள் அக்கறை காட்டி வருகின்றன. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி 75 ஆவது சுதந்திர தினத்தை இலங்கை கொண்டாடியது. அந்தத் தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண சகலரும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த அழைப்புக்கு ஏற்ப தமிழ் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதி ரணிலுடன் கலந்துரையாடினர். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற சர்வகட்சி குழுக்கூட்டத்திலும் கடந்த வருடம் ஜனவரி மாதம் இடம்பெற்ற சர்வகட்சி குழுக்கூட்டத்திலும் தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர்.
13ஆவது திருத்தச் சட்டத்தையாவது முழுமையாக நடைமுறைப்படுத்தி பிரச்சினைக்கான தீர்வுக்கு வழிவகுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழ்த் தேசியக்கட்சிகளின் தலைமைகள் மத்தியில் காணப்பட்டது. ஆனால் 13ஆவது திருத்தச் சட்டத்தை கூட நடைமுறைப்படுத்த முடியாத சூழல் தொடர்ந்தும் நிலவி வருகின்றது. அரசில் தீர்வு காண்பதற்கு தயார் என்று ஜனாதிபதி கூறிவருகின்றார். அதற்கான நல்லிணக்க சமிக்ஞைகளை அவர் காண்பித்து வருகின்றார். ஆனால் யதார்த்த ரீதியில் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதுவரை காலமும் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழ் தேசியக்கூட்டமைப்பு உட்பட தமிழ் தேசியக்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கியே வந்துள்ளன. தற்போதும் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளன. ஆனால் அதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கவேண்டும். இதனைவிடுத்து தமிழ்க் கட்சிகளின் தலைமை மீது குற்றம்சாட்டிவிட்டு தப்பித்துக்கொள்ள அரச தரப்பு முனையக்கூடாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM