இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று பகல் ஜகார்த்தாவில் உள்ள செர்கானோ ஹட்ட சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

இந்தோனேசிய அரசின் சார்பாக அந்நாட்டின் பொதுப் பணிகள் மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சர் மற்றும் விசேட தூதுக்குழுவினர் ஜனாதிபதியை கோலாகலமாக வரவேற்றனர்.

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் பேண்தகு மற்றும் சமநிலையான அபிவிருத்தியை நோக்கமாகக்கொண்டு நடைபெறும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாடு நாளை ஜகார்த்தாவில் ஆரம்பமாகிறது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளதுடன் இலங்கை நேரப்படி நாளை முற்பகல் 11.00 மணிக்கு மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

இதே நேரம் இந்தோனேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தோனேசியாவில் வாழும் இலங்கையர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இன்று பிற்பகல்கலந்துகொள்ளவுள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க, திலீப் வெதஆரச்சி உள்ளிட்டோர் ஜனாதிபதியுடன் இப்பயணத்தில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.