மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவு, வெள்ளப் பெருக்கு, தீ விபத்து முதலான அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு குடியிருப்புகளை இழந்தவர்களுக்கு இன்னும் 6 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது. அவற்றை முன்னுரிமை அடிப்படையில் கட்டிக் கொடுக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

அட்டன் - டிக்கோயா நகர அபிவிருத்திச் சங்கத்தின் கூட்டம் அட்டன் சக்தி மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில்,

பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறுவதற்கு அட்டன்-டிக்கோயா நகர மக்கள் பெருமளவில் வாக்களித்திருந்தமைக்கு எமது தலைவர் அமைச்சர் திகாம்பரம் சார்பில் நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த நகரங்களின் அபிவிருத்திக்கும், மக்களின் தேவைகளுக்கும் அமைச்சு மட்டத்திலான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கத் தயாராகவுள்ளேன்.

அரசாங்கத்தின் நிதியுதவிகளைப் ஏற்றுக் கொள்வதற்கு பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இயங்க வேண்டும். அட்டன் நகரில் அத்தகைய பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் இல்லாத காரணத்தால் சமூக ரீதியில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாமல் இருந்தது. எனினும், தற்போது அட்டன் – டிக்கோயா நகர அபிவிருத்திச் சங்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டு பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதன் இப்பிரதேசங்களில் உள்ள கிராமங்களை ஒன்றிணைக்க முடியும். இதன் மூலம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களின் நிதிகளின் ஊடாக வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். இவ்வாறு ஏனைய நகரங்களிலும் பதிவு செய்யப்பட்ட அமைப்புகளை உருவாக்குகத்தில் ஆர்வம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

கலைக்கப்பட அட்டன் – டிக்கோயா நகர சபையில் எமது தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில் எந்தவொரு உறுப்பினரும் இருக்கவில்லை. எனினும், எமது தலைவர் அமைச்சரான பிறகு நகரில் உள்ளக அரங்கம் ஒன்றை அமைக்க ஒரு கோடி ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருந்தார். இம்முறை ஹிஜிராபுர, வில்பிரட் நகர், ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வீதி ஆகியவை முப்பது இலட்ச ரூபா செலவில் செப்பனிடப்பட்டுள்ளன. இதே போன்று இன்னும் பல வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன.

சில பாதைகளை அமைக்கும் போது நடைமுறைப் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. அவ்வாறு பிரச்சினைகள் சிகலகல் இருந்தால் அரசாங்க நிதியைப் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் ஏற்படும். எனவே, சட்ட ரீதியிலான பிரச்சினைகளை சுமுகமாக அணுகி தீர்த்துக் கொள்ள பொது மக்கள் தமது ஒத்துழைப்பையும் பங்களிப்பையும் செலுத்த முன்வர வேண்டும். விரைவில் காமினிபுர, சாலியபுர, ஆரியகம முதலான பகுதிகளுக்கு விஜயம் செய்து தேவைகளைக் கண்டறிந்து உட்கட்டமைப்பு வசைதிகளைச் செய்து கொடுக்க அபிவிருத்திச் சங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

அரசாங்கம் சமுர்த்தி அடிப்படையில் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. அதற்குத் தேவையான விண்ணப்பப் படிவங்களை என்னிடம் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கூரைத் தகடுகள், சிமெந்து முதலானவை தேவைப்படும் குடும்பங்களும் சுயதொழில் முயற்சிகளை மேற்கொள்கின்றவர்களும் இந்த அமைப்பின் ஊடாக தொடர்பு கொண்டால் அவற்றைப் பெற்றுக் கொடுக்க நடவடிகை எடுக்கத் தயாராக இருக்கின்றேன்.

அரசாங்கம் மலையகத்தில் வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்வதற்கு 100 கோடி ரூபா நிதியை வரவு செலவுத் திட்டத்தில் வழங்கியுள்ளது. இதில் தோட்டப் பகுமற்றும் தீ விபத்துகளில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுக்க அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்து வருகின்றார். மலையகத்தில் கடந்த காலங்களில் வெள்ளப் பெருக்கு, மண்சரிவு மற்றும் தீ விபத்துகளில் வீடுகளை இழந்தவர்களுக்கு 6 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு நகர்ப்புற வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இன்னும் ஐந்து வருடங்களுக்குள் சகல பகுதிகளிலும் அபிவிருத்திகளை மேற்கொள்ள வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.