"உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்" : 'அன்னபூரணி' சர்ச்சைக்கு நயன்தாரா வெளியிட்ட அறிக்கை 

Published By: Nanthini

19 Jan, 2024 | 11:57 AM
image

நயன்தாராவின் நடிப்பில் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகி, திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'அன்னபூரணி'.

நயன்தாராவின் 75வது திரைப்படமான 'அன்னபூரணி' படத்தில் ஜெய், சத்யராஜ் போன்றோர் நடித்துள்ளனர். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்தில் சமையல் கலை நிபுணராக, அந்தணப் பெண்ணாக வரும் நயன்தாராவை, ஒரு காட்சியில் இறைச்சி சாப்பிட வைப்பதற்காக, 'கடவுள் ராமர் கூட இறைச்சி சாப்பிட்டார்' என ஜெய் பேசும் வசனம் இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அது மட்டுமன்றி, பல காட்சிகளில் இந்து மதம் தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, படத்தின் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, நயன்தாரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்தோடு, ஓடிடியிலிருந்தும் இந்த படம் நீக்கப்பட்டது. 

தொடர்ந்து இந்த திரைப்படத்துக்கு எதிரான கண்டன கருத்துக்கள் உலா வரும் நிலையில், நயன்தாரா இக்கருத்துக்களுக்கு வருத்தத்தோடு பதிலளிக்கும் வகையில் எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 'ஜெய் ஸ்ரீராம்' என்ற வாசகத்துடன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். 

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :

"ஜெய் ஸ்ரீராம்.... எனது நடிப்பில் வெளியான 'அன்னபூரணி' திரைப்படம் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடனும் சுய விருப்பத்துடனும் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

'அன்னபூரணி' திரைப்படத்தை வெறும் வணிக நோக்கத்துக்காக மட்டுமல்லாமல் ஒரு நல்ல கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சியாகவே பார்த்தோம். மன உறுதியோடு போராடினால் எதையும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் வகையிலேயே 'அன்னபூரணி' திரைப்படத்தை நாங்கள் உருவாக்கினோம்.

அன்னபூரணி வாயிலாக ஒரு நேர்மறையான கருத்தை விதைக்க விரும்பிய நாங்கள் எங்களை அறியாமலேயே சிலரது மனங்களை புண்படுத்தியிருப்பதாக உணர்ந்தோம். தணிக்கை குழுவால் சான்றளிக்கப்பட்டு திரையரங்கில் வெளியான ஒரு படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டது நாங்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று.

மற்றவர் உணர்வைப் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கும் எனது குழுவுக்கும் துளியும் இல்லை. கடவுளின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டு அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கும் நான் ஒருபோதும் இதை உள்நோக்கத்துடன் செய்திருக்க மாட்டேன்.

அதையும் மீறி உங்களின் உணர்வுகளை எந்த வகையிலாவது புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். அன்னபூரணி படத்தின் உண்மையான நோக்கம் ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தானே தவிர யார் மனதையும் புண்படுத்துவது அல்ல.

எனது 20 ஆண்டுகால திரைப் பயணத்தின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான்... அது நேர்மறையான எண்ணங்களை பரப்புவதும், மற்றவர்களிடமிருந்து நல்லவற்றை கற்றுக்கொள்வதும் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என கூறியுள்ளார். 

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்