உங்களுடைய திசைக்கான எளிய வாழ்வியல் பரிகாரங்கள்

18 Jan, 2024 | 08:48 PM
image

எம்மில் பலருக்கும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருக்கும் ஆனால் இதற்கான சில சிறிய நுட்பமான சூட்சுமங்களை மட்டும் யாரேனும் கோடிட்டுக் காட்டிவிட்டால், அதனை உறுதியாக பின்பற்றிக்கொண்டு முன்னேறிவிடுவர்.

இதனை உணர்ந்துதான் ஜோதிட நிபுணர்கள் உங்களுக்கான திசை எந்த திசை நடக்கிறது என்று கேட்டு தெரிந்துகொண்டு அதற்கேற்ற சில எளிய வாழ்வியல் பரிகாரங்களை பரிந்துரைக்கிறார்கள்.

அவர்கள் பரிந்துரைக்கும் விடயங்களை அந்தந்த தசா முழுவதும் உறுதியாக பின்பற்றினால், எந்தவித சிக்கலும் இல்லாமல் வாழ்க்கையை வெற்றிகரமாக கொண்டு செல்ல இயலும். சூரியன் முதலாக சுக்கிரன் வரையிலான தசைகளை வரிசையாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதனை கீழே காண்போம்.

சூரிய திசை

ஆறு ஆண்டு காலம் நீடித்திருக்கும் சூரிய பகவானின் திசை நடைபெறும்போது, அரசாங்க உதவிகளும் அரசாங்கத்தின் அனுசரணையும் தடையில்லாமல் கிடைக்கும். இந்தத் தருணத்தில் போக்குவரத்து விதிகளை மீறுவதோ அல்லது அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக பேசுவதோ செயல்படுவதோ கூடாது. அரசின் திட்டங்களுக்கும், அரசின் அணுகுமுறைக்கும் நாம் சாதகமாக நடந்துகொள்ள வேண்டும். அரசுக்கு ஆதரவாக செயற்பட்டால் புகழும் செல்வமும் செல்வாக்கும் கிடைக்கும். எதிராக செயற்பட்டால் தண்டனையும் கிடைக்கும்.

மேலும் சூரிய மகா திசை நடைபெறும்போது தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்ப உறுப்பினர்கள் மீது எரிச்சலும் ஆத்திரமும் கோபமும் வரும். ஆனால், அதை நடைமுறைப்படுத்தினால், அதனை பேச்சில் வெளிப்படுத்தினால், விரிசல் ஏற்பட்டு, கருத்து வேறுபாடு, முரண்பாடு உண்டாகும். அது உங்கள் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பாதிக்கும். இதனால் சூரிய மகா திசையின்போது குடும்ப உறுப்பினர்களிடமும் கரிசனத்துடன் நல்ல வார்த்தைகளை பேச வேண்டும். இதனால் குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமை அதிகரித்து, உங்களது புகழ் குடும்பம் மற்றும் உறவினர்கள் இடையே அதிகரிக்கும்.

மேலும் சூரிய மகா திசையில், தந்தை இருப்பவர்கள் தந்தையின் பேச்சுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும். அவரின் வழிகாட்டலையும் ஆலோசனையும் கேட்டு நடந்தால் வெற்றி எளிது.

சந்திர திசை

பத்து ஆண்டுகள் நீடித்திருக்கும் சந்திர மகா திசையில், தாயுடன் இருப்பவர்கள் தாயின் பேச்சை பிரதானமாக கேட்க வேண்டும். தாயின் சொல்லைத் தட்டாமல் கேட்க வேண்டும்.

சந்திரன் மனோகாரகன் என்பதால் மனம் தொடர்பான பிரச்சினைகள் எளிதாக ஏற்படக்கூடும். இதனை உணர்ந்து உங்களை தனிமைப்படுத்திக்கொள்ளாமல் கூட்டத்துடன் இருப்பதையும் கலகலப்பாக பேசுவதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சந்திர மகா திசை நடக்கும்போது திங்கட்கிழமைகளில் ஒரு சிலருக்காவது அன்னதானம் வழங்குவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

செவ்வாய் திசை

ஏழு ஆண்டுகளைக் கொண்டிருக்கும் செவ்வாய் திசையை சகோதர திசை என்றே குறிப்பிடுவர். இந்த திசை நடைபெறும்போது உடன்பிறந்த மற்றும் உடன்பிறவா சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் பகைமையை பாராட்டக் கூடாது. சகோதரர்கள் மற்றும் சகோதரிகளுடன் இணக்கப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும். சுமூகமான உறவை பேண வேண்டும்.

இந்த திசையில் தேவையில்லாத பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து கருத்து சொல்லக்கூடாது. 

செவ்வாய் திசை நடைபெறும் காலகட்டம் முழுவதும் வாகனத்தில் பயணிக்கும்போது முழு கவனத்துடன் செல்ல வேண்டும். கரணம் தப்பினாலும் மரணம் என்பது இந்த திசையில் நடைபெறுவதற்கு சாத்தியக்கூறு அதிகம் என்பதால் முழு விழிப்புணர்வுடன் வாகனத்தை இயக்க வேண்டும்.

ராகு திசை

18 ஆண்டுகள் நீடித்திருக்கும் ராகு பகவானின் திசை சகல சௌகரியங்களுடன் வாழ வேண்டும் என்று விருப்பத்தை உண்டாக்கும். இந்த திசை நம்மை மறக்கடிக்கும். பல தவறான பழக்கங்களும் இந்த திசையில் குடிகொள்ளும். புகைப்பழக்கம், மது பழக்கம், போதை பழக்கம் ஆகிய அனைத்தும் இந்த திசையில் ஏற்படும் என்பதால் இதிலிருந்து சற்று தள்ளி நிற்க வேண்டும்.

இந்த திசையில் எதிர்ப்பாலினத்திடம் காமம் கலந்த காதல் வரும். இது தொடர்பான எச்சரிக்கையை மனதில் நிறுத்தி, எதிர்பாலினத்திடம் பழக வேண்டும்.

ராகு பகவான் என்பது பிரம்மாண்டம் என்பதால் அபிரிமிதமான வளர்ச்சியை இந்த திசையில் ராகு பகவான் ஏற்படுத்துவார். இந்த திசையில் பெண்கள் ஆயிரம் ரூபாய்க்கு உடை அணியாமல் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் உடையை அணிந்து தங்களது தோற்றப்பொலிவை வெளிப்படுத்துவர்.‌ இது தொடர்ந்தால் திசையின் இறுதி காலகட்டத்தில் பொருளாதார ரீதியில் மீள இயலாத சிக்கலை சந்திக்க நேரிடும். அதனால் ராகு திசை முழுவதும் எளிமையாகவும் சிக்கனமாகவும், கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்து சற்று தள்ளியும் இருக்க வேண்டும்.

குரு திசை

பதினாறு ஆண்டுகள் நீடித்திருக்கும் குரு மகா திசை என்பது பலருக்கு வரமாகவும், சிலருக்கு சாபமாகவும் இருக்கும். குரு பகவான் முழுமையான சுப கிரகமாக இருந்து இருந்தாலும் சிலருக்கு வறுமையையும், சாபங்களையும் வழங்குவார். இதிலிருந்து மீள வேண்டும் என்றால் உங்களுக்கு குருவாக இருக்கும் அனைவரிடமும் குறிப்பாக பெரியவர்களிடம் அவர்களின் ஆசியை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். உதாரணத்துக்கு உங்களை விட வயதானவர்களை சந்தித்தால் இரு கரம் கூப்பி சிரம் தாழ்த்தி பணிவுடன் வணக்கம் சொல்வதை வழக்கப்படுத்திக்கொண்டால், இந்த திசையின்  தாக்கங்களிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம். 

சிலர் தங்களுடைய இருப்பிடத்துக்கு அருகே இருக்கும் முதியோர் இல்லங்களுக்கு சென்று அங்குள்ள பெரியவர்களிடத்தில் அன்பாக நடந்து கொண்டு, அவர்களின் ஆசியைப் பெற்றால் நன்மை பயக்கும். இந்த திசையில் குருவின் பரிபூரண அருள் கிடைத்தால் குபேரனாக மாறக்கூடும்.

சனி திசை

பத்தொன்பது ஆண்டுகள் நீடித்திருக்கும் சனி திசை நடைபெறும் போது எம்முடைய நேர்மையும், கண்ணியமான ஒழுக்கத்தையும் சோதனை செய்யும் தருணங்கள் நிறைய ஏற்படும். இதன்போது சிறிய அளவில் தவறு செய்தாலும் கூட திருட்டு பட்டம் கட்டி, திருடன் என்ற பெயரை ஆயுள் முழுக்க சுமக்க வேண்டியதிருக்கும்.

சனி திசை நடைபெறும் காலம் முழுவதும் வாய்மையே வெல்லும் என்ற தத்துவத்தில் முழு ஈடுபாடு கொண்டு உண்மையாய் இருக்க வேண்டும். இதன் காரணமாகவே நீங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள். நீங்கள் தொடர்ந்து உண்மையாக இருந்தால் உங்களுக்கான ஆதரவு நீடிக்கும்.

சனி திசை நடக்கும்போது அவர்களுக்கு கீழ் பணியாற்றும் பணியாட்களையும், வேலையாட்களையும் சமமாக பாவித்து உணவளிக்க வேண்டும். அவர்களை பட்டினி போட்டால் சனி பகவான் உங்களை தண்டிப்பார்.

வேலையாட்களிடம் கூடுதல் வேலையையும் வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால், அதற்கான சிறப்பு ஊதியத்தையும் வழங்கிவிட வேண்டும்.

புதன் திசை

பதினேழு ஆண்டுகள் நீடித்திருக்கும் புதன் திசையில் எம்முடைய மனதுக்குள் புதிய புதிய எண்ணங்கள் தோன்றும். புத பகவான் இளமையை குறிப்பதால் வேலையில்லா இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவரும் இலாபம் அடைந்து நீங்களும் மேன்மை அடையலாம்.

நீங்கள் கற்றுக்கொண்ட சூட்சுமத்தையும், சூத்திரத்தையும் வாய்ப்பில்லாமல் முடங்கி கிடப்பவர்களுக்கு கற்பித்து அவர்களை வாழ்வில் முன்னேற செய்ய வேண்டும்.

பாடசாலையில் அல்லது உயர் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு கல்வி சார்ந்த உதவிகளை வழங்கலாம்.

தாய்மாமன் உறவு இருந்தால் அதனை சீராக பேண வேண்டும்.

திருமணமான ஆண்களுக்கு அவர்களுடைய மாமனாரும் புத பகவானை குறிப்பதால், அவருடனான உறவையும் நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.

கேது திசை

ஏழு ஆண்டுகளைக் கொண்டிருக்கும் கேது திசை ஒருவருடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றி விடும் சக்தி படைத்தது. நீங்கள் சட்டவிரோத காரியங்களை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால், இந்த திசையில் சிறைக்கு செல்ல வேண்டியதிருக்கும்.

இந்த திசையின்போது நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் வாழ்க்கையை வாழ வேண்டும். அத்துடன் சித்தர்கள், ஞானிகள், குருமார்கள், ஜீவசமாதிகளுக்கு செல்வது போன்றவற்றில் ஆர்வம் காட்டினால், எந்தவித எதிர்மறை பலனும் ஏற்படாமல் தப்பிக்கலாம்.

குடும்ப உறுப்பினர்களுடனோ அல்லது தனியாகவோ குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் உள்ள புனித தலத்துக்கு தீர்த்த யாத்திரை அல்லது புனித யாத்திரை செல்ல வேண்டும். 

இந்தக் காலகட்டத்தின்போது நீங்கள் செல்லும் இடங்களில் எதிர்ப்படும் பிச்சைக்காரர்களை சிறிதும் அவமதிக்கக் கூடாது. அப்படி அவமதித்தால் உங்களுக்கான தண்டனை உறுதி.

மேலும் இந்த திசை நடக்கும் போது எம்முடைய வாயிலிருந்து எதிர்பாராமல் தடித்த வார்த்தைகள் வெளிப்படும். அப்படி வெளிப்பட்டால் அதற்கும் சேர்த்து நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியதிருக்கும். இந்த காலகட்டத்தில் தன்மையான வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சுக்கிர திசை

இருபது ஆண்டுகள் நீடித்திருக்கும் சுக்கிர திசை.. பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கும் திசை. சுக்கிர பகவான் சுகமான லௌகீகமான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிப்பதால், இந்த காலகட்டத்தின் போது மிதமிஞ்சிய சௌகரியங்களை அனுபவிக்க வாய்ப்பு வழங்குவார். அதே தருணத்தில் வீண் செலவுகளையும் ஆடம்பர செலவுகளையும் அதிகரிக்கச் செய்வார். இதனால் இந்த காலகட்டத்தில் நீங்கள் ஈட்டும் வருவாயை சிக்கனமாக செலவு செய்து சேமிக்க பழகிக் கொள்ள வேண்டும். 

மனைவி சொல்லே மந்திரம் என்ற தத்துவத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு வாழ வேண்டும். ஏனெனில் இந்த மகா திசையின் போது பெண்களிடம் விருப்பு அல்லது வெறுப்பு ஏற்படக்கூடும். இதன் காரணமாக உங்களது கவனம் சிதறி, மனைவியைத் தவிர்த்து வேறு பெண்களிடம் தொடர்புகள் ஏற்படக்கூடும். இதனால் மனைவியின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.

மேற்கூறிய எளிய வாழ்வியல் பரிகாரங்களை ஒவ்வொரு திசையின்போது, அந்த திசையினை அறிந்துகொண்டு, அதற்கேற்றபடி, உங்களது வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொண்டால், வெற்றி பெறலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அபிஷேகம் செய்வதன் மூலம் பலன் பெறுவது...

2025-01-20 17:52:05
news-image

கடன் சுமை குறைவதற்கான எளிய பரிகாரம்...!?

2025-01-18 22:11:20
news-image

வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சுமமான வழிமுறை..!?

2025-01-17 17:01:03
news-image

தொழிலில் ஏற்படும் தடையை நீக்குவதற்கான எளிய...

2025-01-16 20:12:57
news-image

செல்லப் பிராணியை எப்போது வாங்கலாம்?

2025-01-15 17:39:12
news-image

ஒவ்வொருவரும் நாளாந்தம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக...

2025-01-13 15:56:39
news-image

குலதெய்வத்தின் அருளை பெறுவதற்கு எளிமையான வழிமுறை..!?

2025-01-09 15:26:03
news-image

எதிர்மறை ஆற்றலை அழித்து செல்வத்தை குவிக்கும்...

2025-01-08 19:26:11
news-image

கல்வியில் தேர்ச்சி பெறுவதற்கான எளிய குறிப்புகள்..!?

2025-01-07 16:03:17
news-image

ஆகமி கிரகத்தின் அருளை பெறுவதற்கான சூட்சம...

2025-01-06 16:36:08
news-image

சொந்த வீட்டு கனவை நனவாக்கும் சூட்சம...

2025-01-05 17:49:20
news-image

நாம் அனைவரும் சாதிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-01-03 16:55:59