கிளிநொச்சியில் கடந்த 21 நாட்களில் 244 பேர்  பன்றிக் காய்ச்சல் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சல் எனப்படும் H1N1 இன்புளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கண்டுபிடிக்கப்பட்ட தினமான பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் இம் மாதம் 3 ஆம் திகதி வரையான  21 நாட்களில் 244  பேர் H1N1 இன்புளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு  உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்திக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. 

 

இவர்களுள் 25 கர்ப்பவதிகளும்  9 சிறுவர்களும் அடங்கலாக 37 பொதுமக்கள்  H1N1 இன்புளுவன்சா நோய்த்தாக்கத்திற்கு உள்ளாகி உள்ளமை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

திருநகர், புதுமுறிப்பு, தருமபுரம், முரசுமோட்டை, வேரவில், உதயநகர், கனகாம்பிகைக்குளம், மலையாளபுரம், இராமநாதபுரம், கிருஸ்ணபுரம், சாந்தபுரம், புளியம்பொக்கணை, திருவையாறு, செல்வாநகர், வட்டக்கச்சி, முகமாலை, கல்மடுநகர், புன்னைநீராவி, புலோப்பளை ஆகிய இடங்களில் இருந்து பன்றிக்காய்ச்சல் தொற்றிற்கு உள்ளான நிலையில் கர்ப்பவதிகள் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.

கண்டாவளை, விவேகானந்தநகர்.ஸ்கந்தபுரம், கல்மடுநகர், உமையாள்புரம், இராமநாதபுரம் ஆகிய இடங்களிலிருந்து 12 வயதிற்குக் குறைவான குழந்தைகள் பன்றிக்காய்ச்சல் தொற்றிற்கு உள்ளான நிலையில் இனங்காணப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

உதயநகர்மேற்கு, புதுமுறிப்பு, கல்மடுநகர், திருவையாறு ஆகிய இடங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கர்ப்பவதிகள் பன்றிக்காய்ச்சல் தொற்றிற்கு உள்ளான நிலையில் இனங்காணப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள்பொது இடங்களில் ஒரே நேரத்தில் சந்தித்திருப்பது எமது ஆய்வுகளில்  தெரியவந்துள்ளது. உதாரணமாக ஒருகிராமத்தில் இரு கர்ப்பவதிகள் மரணவீடு ஒன்றில் சந்தித்துள்ளனர். இவர்களில் ஒருவர் மூலம் மற்றையவரும் பன்றிக்காய்ச்சல் தொற்றிற்கு இலக்காகியுள்ளார். 

எனவே அடுத்துவரு இரண்டு வாரங்களுக்காவது கர்ப்பவதிகள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்வதன் மூலம் பன்றிக்காய்ச்சல் தொற்றிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம்.

எந்தவொரு கர்ப்பவதிக்கோ அல்லது பிரசவித்ததாயாருக்கோ காய்ச்சல் ஏற்படின், உடனடியாக –காய்ச்சல் ஏற்பட்ட முதலாவது நாளிலேயே- அவர் அருகில் உள்ள அரசவைத்தியசாலையில் அனுமதிக்கப்படவேண்டும். இதுவரை பன்றிக்காய்ச்சல் தொற்றுடன் இனங்காணப்பட்ட அனைத்துக் கர்ப்பவதிகளும் காய்ச்சல் ஏற்பட்டதினத்திலேயே அருகில் உள்ள அரசவைத்தியசாலைக்கு சென்றமையால் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டுக் குணமடைந்துள்ளனர். 

ஆகவே கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கர்ப்பவதியோ அல்லது பிரசவத்தின் பின்னரான தாயாரோ காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள அரச மருத்துவமனையை நாடவும். மேலதிக விபரங்களுக்கு உங்களது குடும்பநல உத்தியோகத்தரையோ அல்லது பொதுச்சுகாதார பரிசோதகரையோ நாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.