பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டியின் நேற்றைய இறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற பேஸ்வர் சல்மி அணி இந்த ஆண்டுக்கான செம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இந்த போட்டியில் பேஸ்வர் சல்மி அணியை எதிர்த்தாடிய குவேட்ட கிலாடியேட்டர்ஸ் அணி 58 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.

பாகிஸ்தான் சுப்பர் லீக்கின் லீக் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்ற நிலையில், இறுதிப் போட்டி பாகிஸ்தானின் லாஹுர் நகரில் இடம்பெற்றது.

கடந்த 2009 ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டிருந்தனர்.

இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தானில் விளையாட மறுப்பு தெரிவித்ததுடன்,  கடந்த 8 வருடங்களாக போட்டிகள் நடைபெறவில்லை.

இந்நிலையில் பல்வேறு முயற்சிகளின் பின்னர் சிம்பாப்வே ஒரு தொடரில் பங்கேற்றது. இதன் பிறகு தற்போது பாக். சுப்பர் லீக் நேற்று கோலகலமாக இடம்பெற்றது.

சுமார் 10 ஆயிரம் பாதுகாப்பு படையினரும், பாதுகாப்பு விமானங்களுக்கு மைதானத்தை வட்டமிட்டன.

பார்வையாளர்கள் 5 அடுக்கு பாதுகாப்பு நிலைகளை தாண்டியே மைதானத்துக்கு உள்வாங்கப்பட்டனர்.

இவ்வாறான பாதுகாப்புடன் பாக். சுப்பர் லீக்கை எந்தவித குறைபாடுகளும் இன்றி பாகிஸ்தான் கிரிக்கெட் நடத்தி முடித்துள்ளது.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பேஸ்வர் சல்மி அணி 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பேஸ்வர் சல்மி அணி சார்பாக கம்ரன் அக்மல் 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குவேட்டா கிலாடியேட்டர்ஸ் 16.3 ஓவர்களில் 90 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக டெரன் சமி தெரவுசெய்யப்பட்டதுடன், தொடர் ஆட்டநாயகனாக கம்ரன் அக்மல் தெரிவுசெய்யப்பட்டார்.