இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெறும் இந்து சமுத்திர பிராந்திய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (06) இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்கிறார்.

இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள நாடுகளின் பேண்தகு மற்றும் சமாந்தரமான அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்பட்டுவரும் இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அமைப்பின் 20 ஆவது ஆண்டு நிறைவுடன் இணைந்ததாக அரச தலைவர்கள் மாநாடு கோலாகலமாக இடம்பெறவுள்ளது.

இந்து சமுத்திரத்தை அமைதியான, நிலையான, சுபீட்சமான பிராந்தியமாக மாற்றுவதற்காக கடல்சார் ஒத்துழைப்பை பலப்படுத்துதல்' எனும் தொனிப்பொருளில் அரச தலைவர்கள் மாநாடு நாளை மறுதினம் (07)  ஜகார்த்தா நகரில் ஆரம்பமாவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று முற்பகல் உரையாற்றவுள்ளார்.

இலங்கைக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் மீன்பிடி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி தொடர்பான 02 உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் இந்தோனேசிய ஜனாதிபதி ஜொகோ விடோடோ ஆகியோருக்கிடையிலான உத்தியோபூர்வ சந்திப்பு எதிர்வரும் 08 ஆம் திகதி முற்பகல் மர்டெக்கா மாளிகையில் இடம்பெறவுள்ளது.