'வெள்ளைப் பந்து கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்டமைக்கு முன்னாள் தேர்வாளர்களின் நிகழ்ச்சிநிரல்களே காரணம்' - ஏஞ்சலோ மெத்யூஸ்

Published By: Vishnu

16 Jan, 2024 | 08:18 PM
image

(நெவில் அன்தனி) 

சர்வதேச மட்டப்படுத்தப்பட்ட ஓவர் (வெள்ளைப்பந்து கிரிக்கெட்) கிரிக்கெட்டிலிருந்து தாம் ஓரங்கட்டப்பட்டமைக்கு முன்னாள் தேர்வாளர்களே காரணம் என ஏஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார்.

முன்னாள் தெரிவாளர்கள் தன்னை புறக்கணித்த போதிலும் உப்புல் தரங்க தலைமையிலான புதிய தெரிவுக் குழுவினர், இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ண திட்டத்தில் தன்னை உள்ளடக்கியுள்ளதாக ஸிம்பாப்வேயுடனான முதலாவது ரி20 போட்டி வெற்றியின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.

சுமார் 3 வருடங்களின் பின்னர் சர்வதேச ரி20 கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற மெத்யூஸ், ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஸிம்பாப்வேக்கு எதிரான முதலாவது போட்டியில் தனது அனுபவத்தின் மூலம் சிறப்பாக துடுப்பெடுத்தாடி அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 3 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் வெற்றியீட்டியது.

14 ஓவர்கள் நிறைவில் இலங்கை 6 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது.

அப்போது இலங்கையின் வெற்றிக்கு கடைசி 6 ஓவர்களில் 61 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 

ஆரம்பத்தில் மந்தகதியில் துடுப்பெடுத்தாடிய மெத்யூஸ் பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி தசுன் ஷானக்கவுடன் 7ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றிக்கு அடிகோலினார். கடைசி 3 பந்துகளில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது சிக்ஸ் அடிக்க முயற்சித்து மெத்யூஸ் ஆட்டம் இழந்தார்.

ஆனால், அடுத்த 2 பந்துகளில் 6 ஓட்டங்களைப் பெற்ற துஷ்மன்த சமீர அணியின் வெற்றியை உறுதிப் படுத்தினார்.

மேத்யூஸ் 38 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றதுடன் தசுன் ஷானக்க 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

'கடந்த 2 எல்.பி.எல். அத்தியாங்களில் நான் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை, அதற்கான காரணங்கள் எனக்கு கூறப்படவில்லை. தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக்கொள்ள முடிகளை எடுக்கும்போது அது பாதிப்பைத்தான் ஏற்படுத்தும். எம்மால் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கும் தகுதிபெற முடியமால் போனது. 

'ஆனால், நாம் முழு மனதுடன் பயிற்சிகளில் ஈடுபட்டு விளையாடினால், திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழலை உருவாக்க முடியும் என நான் நம்புகின்றேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் தொடர்ச்சியாக முயற்சித்துவந்தேன். எனது முயற்சிகளை நான் தொடர்ந்தேன். என்னால் இன்னும் சிறிது காலம் விளையாட முடியும் என்று நினைக்கிறேன்' என்று மெத்யூஸ் தெரிவித்தார்.

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் இலங்கை மிகச் சிறந்த அணியாக மிளிர்ந்தபோது (2007 - 2014) மெத்யூஸ் திறமையான பந்துவீச்சாளராக இருந்ததுடன் அடிக்கடி பவர்ப்ளேயில் பந்துவீசி வந்தார். ஆனால், உபாதை காரணமாக அவர் ஒரு சிறப்பு துடுப்பாட்ட வீரராக மட்டும் அணியில் இடம்பெற நேரிட்டது. கடந்த 2 வருடங்களில் பவர்ப்ளேயில் ஒரு முக்கிய பந்துவிச்சாளராக அவர் மாறியுள்ளார்.

ஸிம்பாப்வேக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதலாவது ரி20 போட்டியில் பந்துவீச்சை ஆரம்பித்த அவர் 2 ஓவர்களில் 13 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார்.

இதனை தான் பெரிதும் விரும்புவதாக குறிப்பிட்ட அவர், 

'எனக்கும் புதிய தெரிவாளர்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் தெளிவாக இருக்கிறது. எதிர்காலத்திற்கான எனது திட்டங்கள் என்னவென்று என்னிடம் கேட்ட அவர்கள், தங்களின் திட்டங்களையும் கூறினார்கள். நாங்கள் மிக விரிவாக கலந்துரையாடினோம். நான் அவர்களின் திட்டத்தில் இருப்பதாக அவர்கள் சொன்னார்கள். டி20 உலகக் கிண்ணத்தில் என்னால் சில ஓவர்கள் வீச முடிந்தால் அது நலமாக இருக்கும் என அவர்கள் என்னிடம் கூறினார்கள். அவர்களது திட்டப்படி என்னால் அணிக்கு எந்த வகையிலாவது உதவ முடிந்தால் அதனை நிச்சயமாக என்னால் செய்ய முடியும்' என்றார் மெத்யூஸ்.

'எல்.பி.எல். போட்டிகளில் நான் பந்துவீசி வந்தேன். உள்ளூர் ஒருநாள் போட்டிகளிலும் நான் பந்துவீசியதை அவதானித்திருப்பீர்கள். நான் பந்துவீசினால் அது அணியில் சமநிலையை ஏற்படுத்தும். எனவே மேலதிக துடுப்பாட்ட வீரரையா அல்லது பந்துவீச்சாளரையா அணியில் இணைப்பது என்பது குறித்து அணித் தலைவருக்கு தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்' என மெத்யூஸ் மேலும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியின்போது இடையில் அழைக்கப்பட்ட மெத்யூஸ் சிறப்பாக பந்துவிசி 5 போட்டிகளில் 17.83 என்ற சராசரியுடன் 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈவா வலைபந்தாட்டத்தில் விமானப்படைக்கு 2 சம்பியன்...

2025-01-17 21:24:06
news-image

ITF ஆசியா அபிவிருத்தி சம்பியன்ஷிப்: சிறுமிகள்...

2025-01-17 20:50:01
news-image

இளம் பெட்மின்டன் வீரர்களுக்கு பண்டாரவளை சென்...

2025-01-17 17:29:38
news-image

எம்சிஏ டி பிரிவு 40 ஓவர்...

2025-01-16 20:03:33
news-image

ஐசிசி 19இன் கீழ் மகளிர் ரி20...

2025-01-16 18:13:11
news-image

மகளிர் சர்வதேச ஒருநாள்  கிரிக்கெட்: ப்ரத்திகா,...

2025-01-15 18:24:23
news-image

றினோன் கால்பந்தாட்டப் பயிற்சியகத்தின் 'கால்பந்தாட்டம் மூலம்...

2025-01-14 19:24:40
news-image

டிசம்பர் மாதத்தின் அதிசிறந்த ஐசிசி வீரர்...

2025-01-14 18:34:07
news-image

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா...

2025-01-14 17:02:04
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பெத்தும்...

2025-01-14 14:24:06
news-image

வட மாகாணத்தில் மேசைப்பந்தாட்டப் பயிற்சித் திட்டம்

2025-01-14 14:11:23
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-13 22:15:59