சுதந்திரத்துக்கு பின்பும் இலவச கல்வியை பெறமுடியாத ஒரே சமூகத்தினராக இந்நாட்டில் மலையக பெருந்தோட்ட சமூகத்தினர் விளங்கினர். இந்த அவலம் சுமார் நாற்பது வருடங்கள் வரை நீடித்தன. அதன் பின்னர் படிப்படியாக தோட்டப்பாடசாலைகள் அரசாங்கத்தினால் உள்வாங்கப்பட்டு மாகாண பாடசாலைகளாக மாற்றம் பெற்ற பின்னரும் இலவச கல்வியை அவர்களால் முழுமையாக அனுபவிக்க முடியாத அவலம் தொடர்கின்றது.
2023 ஆம் ஆண்டு மத்திய மாகாணத்தில் அதிக மாணவர் இடைவிலகல்களை கொண்ட மாவட்டமாக நுவரெலியா விளங்குகின்றது. இந்த புள்ளி விபரங்களை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன் படி மத்திய மாகாணத்தில் கடந்த வருடம் மொத்தமாக 1986 மாணவர்கள் தமது கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். அதிகமாக நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா கல்வி வலயத்தில் 570 மாணவர்களும் அட்டன் கல்வி வலயத்தில் 541 மாணவர்களும் கொத்மலை கல்வி வலயத்தில் 319 மாணவர்களும் கம்பளை கல்வி வலயத்தில் 209 மாணவர்களும் இடை விலகியுள்ளனர்.
குறித்த கல்வி வலயங்கள் பெருந்தோட்டங்களை அதிகமாகக் கொண்ட பிரதேசங்களாகும். ஆகவே பொருளாதார நெருக்கடி மற்றும் வறுமை ஆகியன இந்த இடை விலகல்களில் செல்வாக்கு செலுத்துகின்றன. ஆனால் 2022 ஆம் ஆண்டே மாணவர் இடைவிலகல் கணிசமாக அதிகரித்திருந்தன. அதற்கு கொவிட் தாக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து நாட்டில் உருவான பொருளாதார நெருக்கடிகள் காரணமாகக் கூறப்படுகின்றன.
இதில் உண்மைகள் உள்ளதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன. பொருளாதார பாதிப்பு காரணமாக பெருந்தோட்டப்பிரதேசங்களில் 42.8வீதமான குடும்பங்கள் கடனாளிகளாக மாறி விட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நாடாளுமன்றில் கடந்த ஒன்பதாம் திகதி தரவுகளை முன்வைத்திருந்தார். ஆகவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வறுமை நிலையை அரசாங்கமே ஏற்றுக்கொள்கின்றது என்பது தான் உண்மை.
ஆனால் அவர்களுக்கு உரிய நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கமோ அல்லது இந்த மக்களின் பிரதிநிதிகளோ அக்கறை கொள்வதில்லை. உணவுப் பொருட்கள் விலையேற்றத்தால் இந்த சமூகத்தினர் மூன்று வேளை உணவை முழுமையாக பெறுவதில்லை. அவ்வாறிருக்கும் போது தமது பிள்ளைகளுக்கான பாடசாலை சீருடைகள்,காலணிகள்,புத்தக பைகள் போன்றவற்றை எவ்வாறு இவர்களுக்கு கொள்வனவு செய்ய முடியும்?
சில தோட்டப்பிரதேசங்களிலிருந்து பாடசாலைகளுக்கு பஸ்களில் செல்ல வேண்டும். பல பகுதிகளில் இ.போ.ச பஸ்கள் இல்லை. இதனால் மாணவர் பருவகாலச் சீட்டுகளையும் பெற முடியாது. தனியார் பஸ்களில் பாடசாலை சென்று வருவதற்கு தமது பிள்ளைக்கு ஒரு நாளைக்கு இருநூறு ரூபாய் வரை செலவளிக்க இந்த பெற்றோர்களுக்கு முடிவதில்லை. இதன் காரணமாக தொடர்ச்சியாக பாடசாலைக்கு செல்வதில் இந்த பிள்ளைகள் நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றனர்.
இந்த காரணங்களை வைத்தே சில பாடசாலை நிர்வாகங்களும் மாணவர்களை இடை நிறுத்துகின்றன. மாணவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்களை பாடசாலைக்கு வரச்செய்வதில் இக்காலத்தில் எந்த பாடசாலை சமூகமும் கூடுதல் அக்கறை காட்டுவதில்லை.
இடைவிலகலுக்கு வறுமை ஒரு பிரதான காரணமாக விளங்கினாலும் பாடசாலைகளில் சில மாணவர்களுக்கு இழைக்கப்படும் உளரீதியான கொடுமைகள் பற்றியும் இங்கு பேச வேண்டியுள்ளது. குறிப்பாக சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்கள் இவ்வாறு இலக்கு வைக்கப்படுகின்றனர்.
மிகவும் கடினங்களுக்கு மத்தியில் தமது பிரதேச பாடசாலைகளில் சாதாரண தரம் சித்தியடைந்து சிறந்த பெறுபேறுகளுடன் நகர்ப்புற பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மிக அதிகம். சராசரி புள்ளிகளைப் பெற்றாலும் பாடசாலை பெறுபேறுகளை இலக்கு வைத்து செயற்படும் சில அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களினால் அவர்கள் மனரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுகின்றனர்.
பாடசாலை சமூகம் எதிர்ப்பார்க்கும் பெறுபேறுகளை குறித்த மாணவனோ மாணவியோ பெற முடியாத சந்தர்ப்பத்தில் அவர்கள் கட்டாயப்படுத்தி பாடசாலைகளிலிருந்து இடை நிறுத்தப்படுகின்றனர். அல்லது வேறு பாடப்பிரிவை தெரிவு செய்வதற்கு வற்புறுத்தப்படுகின்றனர்.
இது தொடர்பான தகவல்கள் மூடி மறைக்கப்படுகின்றன. ஏனெனில் பாடசாலைகளிலிருந்து குறித்த மாணவர்கள் விலகிச்செல்லும் போது தமது சொந்த விருப்பத்தின் பேரிலேயே இவர்கள் செல்கின்றனர் என்றவாறு அவர்களின் பெற்றோர்களிடமும் கடிதங்கள் பெறப்படுகின்றன. இல்லாவிடின் அவர்களுக்கான விடுகை பத்திரத்தை குறித்த பாடசாலை நிர்வாகங்கள் வழங்குவதில்லை.
மலையக பெருந்தோட்ட கல்வி சமூகம் எதிர்நோக்கிவரும் இவ்வாறான பிரச்சினைகளை மலையக அரசியல்வாதிகள் கண்டுகொள்வதில்லை. அவற்றை தவிர்க்கவே பார்க்கின்றனர். மத்திய மாகாணத்தின் முதல் கல்வி அமைச்சரிலிருந்து முப்பது வருடங்களாக அந்த பதவியை அலங்கரித்து வந்த அனைவருமே நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களில் பலர் பாராளுமன்ற பிரவேசம் கண்டு எம்.பிக்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் , இராஜாங்க அமைச்சர்களாகவும் பணியாற்றியவர்கள். நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போது நாடாளுமன்றத்திலுள்ள இரண்டு எம்.பிக்களும் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சர்களாக இருந்தவர்கள்.
அதில் ஒருவர் கல்வி இராஜாங்க அமைச்சராகவும் விளங்கியவர். இவர்களது காலத்திலும் மாணவர் இடைவிலகல்கள் இருந்திருக்கலாம். ஆனால் அப்போது இது குறித்து அவர்கள் அக்கறை கொள்ளாமலிருந்த காரணத்தினாலேயே பாதிப்பு இன்று எல்லை மீறி சென்றுள்ளது. இப்போதும் காலம் கடந்து விடவில்லை என்பதை உரியவர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM