தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை பிரச்சினையான இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றபோதிலும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் உரிய அக்கறை காண்பித்திருக்கவில்லை என்ற குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் 2012ஆம் ஆண்டு முதல் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பொறுப்புக்கூறல் விடயத்தில் அரசாங்கம் அக்கறை காண்பிக்கவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும் கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூறும் விடயத்தில் உரிய அக்கறையினை செலுத்தியிருக்கவில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஓரளவு இணக்கப்பாட்டினை தெரிவித்திருந்த போதிலும் உரிய தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் அந்த செயற்பாடும் அமைந்திருக்கவில்லை.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் காணாமல்போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டதுடன் நட்ட ஈட்டுக்கான செயற்றிட்டமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அத்துடன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. ஆனாலும் 2019ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டதையடுத்து இந்த நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்தன.
தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
இந்த சட்டமூலத்துக்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 41 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் சபையில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்தை ஸ்தாபிக்கும் வகையிலேயே இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த சட்டமூலத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேரே எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
இந்த சட்டமூலத்தை சமர்ப்பித்து உரையாற்றிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ,இலங்கையில் எவரும் இரண்டாம் தர பிரஜைகள் அல்ல. அனைவரும் இலங்கையர்கள் என்பதை உறுதிப்படுத்துவதே நல்லிணக்க சட்டமூலத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும் என்று சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அத்துடன் தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் என்பது முக்கியமானது. இது இன்று நேற்று ஆரம்பமான பேசுபொருளல்ல முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சியில் யுத்த சூழலில் போது இந்த அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அப்போது நிர்வாக மட்டத்தில் மாத்திரம் அந்தஸ்து வழங்கப்பட்டது. தற்போது அரசியலமைப்பின் ஊடாக இதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருக்கின்றார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கும் பொறுப்புக்கூறல் விடயத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் வகையிலுமே உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த அலுவலகம் தொடர்பில் தமது நம்பிக்கையீனத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
யுத்தத்தின் வடுக்களாக காணப்படும் காணாமல்போனோர் விவகாரம், தொடர்பில் இன்னமும் அரசாங்கம் உரிய தீர்வினை காணவில்லை. காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்பதனை அறிவதற்காக மக்கள் தொடர்ச்சியான போராட்டங்களை தற்போதும் நடத்தி வருகின்றனர்.
காணாமல்போனோருக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள போதிலும் அந்த அலுவலகத்தின் செயற்பாடுகளினால் இதுவரை எந்தப்பயனும் ஏற்பட்டதாக தெரியவில்லை. அடுத்த வருடத்துக்குள் காணாமல்போனோர் அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு தீர்வு வழங்கப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் கடந்தவாரம் உறுதி வழங்கியிருந்தார்.
ஆனால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரியவில்லை. இந்த நிலையில்தான் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கு தீர்வுகாணும் வகையில் உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை அமைப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இந்த அலுவலகத்தின் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியுமா என்பது தொடர்பில் பெரும் சந்தேகமான நிலைமையே காணப்படுகின்றது.
இந்த நிலையில் யுத்தத்துடன் தொடர்புடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் 2025ஆம் ஆண்டாகும் போது தீர்வு வழங்கப்படும். இடம்பெயர்ந்தோர் மற்றும் காணாமல்போனவர்களின் பிரச்சினை தொடர்பாக அரசியல் ரீதியிலான தீர்வுகள் காணப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கொழும்பு இளைஞர் பெளத்த சங்கத்தின் 125 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டிருக்கின்றார்.
இதேபோன்றே கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற சேர். பொன். அருணாச்சலத்தின் நூற்றாண்டு நினைவுதின நிகழ்வில் பங்கேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சுதந்திரமான தேசத்தை கட்டியெழுப்ப சேர்.பொன். அருணாசலத்தின் ‘‘இலங்கையர்’’ என்ற எண்ணக்கருவை ‘‘ இலங்கையர்களின் தேவைகள் ’’ என்ற வகையில் மேம்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம்.
அந்த வேலைத்திட்டத்தை பலப்படுத்தும் வகையில் யுத்தம் சார்ந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் 2025க்குள் தீர்வு காண எதிர்பார்க்கின்றோம் என்று சுட்டிக்காட்டியிருந்தார். சேர்.பொன் அருணாசலம் தமிழ் சிங்கள, முஸ்லிம் என்று அல்லாமல் இலங்கையர் என்ற எண்ணக்கரு தொடர்பில் அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். அந்தக் கொள்கையை பின்பற்றிய டி.எஸ். சேனாநாயக்க அனைத்து இனத்தவரையும் மதத்தவரையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தார் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார்.
யுத்தத்துடன் தொடர்புடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் அடுத்தவருடத்துக்குள் தீர்வுகாணப்படும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடாகும். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா? அதற்கான அரசியல் சூழ்நிலை எதிர்காலத்தில் நிலவுமா? என்ற கேள்விகள் தற்போது எழுகின்றன.
யுத்தத்தின் கோரத்தினால் தமிழ் மக்கள் பெரும் அழிவுகளை சந்தித்தனர். உயிர்களையும் உடைமைகளையும் இழந்து அநாதரவாக்கப்பட்ட தமிழ் மக்கள் இன்றும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி நிற்கின்றனர். காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. படையினரால் சுவீகரிக்கப்பட்ட காணிகள் இன்னமும் முழுமைாக விடுவிக்கப்படவில்லை.
வடக்கு, கிழக்கில் திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து வருகின்றன. மீள் குடியேற்றம் இன்னமும் நிறைவுறுத்தப்படவில்லை. அரசியல் கைதிகள் விவகாரத்திலும் முழுமையான தீர்வு எட்டவில்லை. யுத்தப்பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களின் வாழ்வாதாரம் இன்னமும் முழுமையாக கட்டியெழுப்பப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை.
இவ்வாறு யுத்தத்தின் வடுக்களைப் போக்குவதற்கு அரசாங்கமானது இதயசுத்தியுடன் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன் யுத்தத்துக்கு காரணமான இனப்பிரச்சினைக்கும் அரசியல்தீர்வு காணும் விடயத்தில் அக்கறை செலுத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டால்தான் இலங்கையர் என்ற மனப்பாங்குடன் சகல மக்களும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்பும் நிலை ஏற்படும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றார். பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் என்று உறுதிமொழியும் வழங்கி வருகின்றார். ஆனால் அவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கான அரசியல் சூழ்நிலை தற்போது காணப்படுகின்றதா? என்று சிந்திக்கவேண்டியுள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க அலுவலகம் மூலமாக பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்புவதாகவே தெரிகின்றது.
ஆனால் அந்த அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் நம்பிக்கை கொள்ளவில்லை. அவ்வாறாயின் எவ்வாறு பிரச்சினைகளுக்கு தீர்வை காணமுடியும் என்ற கேள்வி எழுகின்றது. எனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெறும் பேச்சளவிலன்றி செயற்பாட்டளவில் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காண முயற்சிக்கவேண்டும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்புக்களை வழங்கினால் மட்டுமே நாட்டில் நல்லிணக்கம் சாத்தியம் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM