ரி - 20 தொடர் ஒன்றை 30 மாதங்களின் பின் புதிய தலைமையின் கீழ் வென்றெடுக்கும் முயற்சியில் இலங்கை

14 Jan, 2024 | 11:45 AM
image

(நெவில் அன்தனி)

ஸிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றிய சூட்டோடு அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரையும் வென்றெடுக்கும் குறிக்கோளுடன் இலங்கை களம் இறங்கவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர் கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று இரவு ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது, மூன்றாவது போட்டிகள் இதே மைதானத்தில் 16ஆம், 18ஆம் திகதிகளில் நடைபெறும்.

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் மூவகை சர்வதேச கிரிக்கெட் அணிகளுக்கு 3 வெவ்வேறு வீரர்கள் முழுநேர தலைவர்களாக நியமிக்கப்பட்ட பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் முதலாவது ரி20 கிரிக்கெட் தொடர் இதுவாகும்.

இலங்கை கடைசியாக இந்தியாவுக்கு எதிராக 2021 ஜூலை மாதம் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 - 1 ஆட்டக் கணக்கில் வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னர் கடந்த 30 மாதங்களில் ரி20 கிரிக்கெட் தொடர்களில் இலங்கை வெற்றிபெற்றதில்லை.

இந் நிலையில் 30 மாதங்களின் பின்னர் முதலாவது ரி20 தொடர் வெற்றியை ஈட்டும் குறிக்கோளுடன் புதிய தலைவர் ஹசரங்கவின் தலைமையின்கிழ் இலங்கை இத் தொடரை எதிர்கொள்கிறது.

உபாதை காரணமாக 6 மாதங்களாக சிகிச்சையுடன் ஓய்வுபெற்றுவந்த வனிந்து ஹசரங்க சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மீள்வருகையில் ஸிம்பாப்வேக்கு எதிராக 19 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தி தனது தனிப்பட்ட அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து இலங்கை அணியின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார். இது அவருக்கு பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது.

இப்போது 8 மாதங்கள் கழித்து சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் வனிந்து ஹசரங்க மீள் பிரவேசம் செய்யவுள்ளார்.

அத்துடன் 34 மாதங்களின் பின்னர் முன்னாள் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸும் 28 மாதங்களின் பின்னர் சுழல்பந்துவீச்சாளர் அக்கில தனஞ்சயவும் ரி20 குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஸிம்பாப்வேக்கு எதிரான ரி20 தொடருக்கு 16 வீரர்களைக் கொண்ட பலம்வாய்ந்த குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட ஆரம்ப வீரர் பெத்தம் நிஸ்ஸன்க இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடுவாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

இலங்கை குழாத்தில் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க (உடற்தகுதியைப் பொறுத்து), குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாகவும்,

வனிந்து ஹசரங்க, உதவித் தலைவர் சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், அக்கில தனஞ்சய, தனஞ்சய டி சில்வா, முன்னாள் அணித் தலைவர் தசுன் ஷானக்க, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சகலதுறை வீரர்களாகவும்,

மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷன்க, மதீஷ பத்திரண, நுவன் துஷார ஆகியோர் பந்துவீச்சாளர்களாகவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

இந்த வீரர்களில் பெரும்பாலும் குசல் மெண்டிஸ், பெத்தும் நிஸ்ஸன்க அல்லது குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, துஷ்மன்த சமீர, டில்ஷான் மதுஷன்க, அக்கில தனஞ்சய அல்லது மதீஷ பத்திரண ஆகியோர் முதலாவது போட்டிக்கான முதல் பதினொருவராக அணியில் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது இவ்வாறிருக்க, இலங்கையும் ஸிம்பாப்வேயும் 12 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன. அத்துடன் இந்த இரண்டு அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட முதலாவது  சர்வதேச ரி20 கிரிக்கெட்   தொடர் இதுவாகும்.

ஸிம்பாப்வே அணி 12 வருடங்களின் பின்னர் ரி20 போட்டி ஒன்றில் இலங்கையில் விளையாடவிருப்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.

இதற்கு முன்னர் இரண்டு அணிகளும் ஒன்றையொன்று 3 போட்டிகளில் மாத்திரமே எதிர்த்தாடியுள்ளன.

இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் இடையில் முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டி கனடாவின் ஒன்டாரியோவில் 2008இல் நடைபெற்றது.

ஒன்டாரியோ ரி20 என அழைக்கப்பட்ட அத் தொடரில் ஸிம்பாப்வேயை 5 விக்கெட்களால் இலங்கை வெற்றிகொண்டிருந்தது. அத் தொடரில் பாகிஸ்தானும் பங்குபற்றியிருந்தது.

இரண்டு வருடங்கள் கழித்து கரிபியன் தீவுகளில் நடைபெற்ற ஐசிசி ரி20 உலகக் கிண்ண (பி குழு) போட்டியில் ஸிம்பாப்வேயை 14 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

ஹம்பாந்தோட்டையில் 2012இல் நடைபெற்ற ரி20 போட்டியில் இலங்கை 84 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.

எனினும் தற்போது ஸிம்பாப்வே அணி ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதால் இந்தத் தொடர் இலங்கைக்கு சற்று சவாலாக அமையும் என கருதப்படுகிறது.

ஸிம்பாப்வே அணிக்கு சகலதுறை வீரர் சிக்கந்தர் ராஸா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையிலான ஸிம்பாப்வே குழாத்தில் ரெயான் பேர்ல், க்ரெய்க் ஏர்வின், ஜோய்லோர்ட் கம்பி, டினாஷே கமன்ஹுகம்வெ, க்ளைவ் மதண்டே, மில்டன் ஷம்பா ஆகியோர் துடுப்பாட்ட வீரர்களாவும்,

சிக்கந்தர் ராஸாவுடன் ப்றயன் பெனெட், லூக் ஜொங்வே, கார்ல் மும்பா, டோனி முன்யொங்கா ஆகியோர் சகலதுறை வீரர்களாகவும்,

வெலிங்டன் மசகட்ஸா, ப்ளெசிங் முஸராபனி, எய்ன்ஸ்லி இண்டிலோவு, ரிச்சர்ட் ங்கராவா ஆகியோர் பந்துவீச்சாளராகவும் இடம்பெறுகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாருஜன் பாடசாலைகளுக்கிடையிலான போட்டியில் இரட்டைச் சதமடித்து...

2025-03-26 14:39:40
news-image

வரலாற்று சாதனை படைத்தது பஞ்சாப் கிங்ஸ்! 

2025-03-26 17:00:16
news-image

லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் ஆட்ட...

2025-03-25 15:08:56
news-image

மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த தமிம் இக்பாலுக்கு மாரடைப்பு...

2025-03-24 15:37:18
news-image

பரபரப்புக்கு மத்தியில் மும்பை இண்டியன்ஸை கடைசி...

2025-03-24 02:56:34
news-image

18ஆவது ஐபிஎல் அத்தியாயத்தில் இஷான் கிஷான்...

2025-03-23 21:38:21
news-image

18ஆவது IPL அத்தியாயத்தின் ஆரம்பப் போட்டியில்...

2025-03-23 10:26:39
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 60 மீற்றர்...

2025-03-22 04:00:36
news-image

இலங்கையில் நடைபெறவுள்ள தொடர் ஓட்டப் போட்டிக்கு...

2025-03-22 04:54:39
news-image

உலக உள்ளக அரங்க சம்பியன்ஷிப்பில் இத்தாலி...

2025-03-21 18:32:55
news-image

லாஓசை 22 வருடங்களுக்குப் பின்னர் வீழ்த்திய...

2025-03-21 21:12:57
news-image

ஒலிம்பிக் ஸ்தாபனத்தை கண்ணியத்துடன், பெருமையுடன் வழிநடத்துவதாக...

2025-03-21 15:13:08