(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு 2000 இலட்சம் ரூபாவை மேலதிகமாக ஒதுக்குவதன் காரணம் என்ன ?நிதி ஒழுக்கத்தை பற்றி பேசும் ஜனாதிபதி முதலில் நிதி ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. நாமல் ராஜபக்ஷக்கு எவ்வாறு அரச இல்லத்தை வழங்க முடியும்.
ராஜபக்ஷர்கள் இன்றும் அரச இல்லங்கள் வாழ்கிறார்கள்.இவர்களுக்கு வெட்கம் என்பதொன்று இல்லையா என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கடுமையாக சாடினார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்றத்துக்கு குறைநிரப்பு பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடி,நிதி ஒழுக்கம் பற்றி அரசாங்கம் பாடம் கற்பிக்கிறது.
இவர்களின் நிதி ஒழுக்கத்தை சற்று ஆராய்ந்து பார்ப்போம்.டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரச முயற்சியாண்மை திணைக்களத்துக்கு 13 ஆயிரம் இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த 13 ஆயிரம் இலட்சம் ரூபா எவ்வாறு செலவு செய்யப்பட்டது என்பதை பாராளுமன்றத்துக்கு அறிவியுங்கள்.இதில் நிதி ஒழுக்கம் உள்ளதா ?
இந்த குறை நிரப்பு பிரேரணையில் ஜனாதிபதியின் மேலதிக செலவுகளுக்காக 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், எரிபொருள் மற்றும் வாகன பராமரிப்புக்காக ஒதுக்கப்பட்ட மானியத்தின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு 2000 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.
வரவு செலவு திட்டத்தின் போது ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள்,எரிபொருள் மற்றும் வாகனங்களுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது.
ஜனாதிபதிக்கான செலவினங்கள் நாட்டுக்கு பாரிய சுமை என்பதை பலமுறை குறிப்பிட்டுள்ளோம்.இதற்கு மேலதிகமாக 2000 இலட்சம் ரூபாவை ஒதுக்க குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.முதலில் ஜனாதிபதி நிதி ஒதுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற காலத்தில் இருந்து முழு நாட்டையும் வலம் வருகிறார்.இலங்கையில் எந்த அரச தலைவர்களும் இவ்வாறு உலகை சுற்றவில்லை.ஒன்று மரண வீட்டுக்கு செல்கிறார்.
திருமண வீட்டுக்கு செல்கிறார்.அல்லது உலக நாடுகளின் அரச தலைவர்கள் பங்குப்பற்றாத மாநாடுகளில் உரையாற்றுகிறார்.முழு உலகையும் சுற்றி விட்டு மீண்டும் உலகம் சுற்ற 2000 இலட்சம் ரூபாய் கேட்கிறார்.
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்கும், சீருடை வழங்குவதற்கும் மானியம் ஒதுக்கப்படவில்லை.
பரீட்சை வினாத்தாள் திருத்தும் ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை. ஆனால் ஜனாதிபதி உல்லாச பயணம் செல்ல 2000 இலட்சம் ரூபா ஒதுக்கப்படுகிறது.
ஆகவே இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்றமும் சிந்திக்க வேண்டும்,ஜனாதிபதியும் சிந்திக்க வேண்டும்.
பாடசாலை உபகரணத்தில் இருந்து அத்தியாவசிய உணவு பொருட்கள் வரை வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.வரி வருமானத்தை பெற்றுக் கொண்டு ஜனாதிபதி உலகை சவாரி வருகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி செயலகத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு வரும் போது மஹிந்த ராஜபக்ஷ விஜேராம மாவத்தையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வரும் போது இவர்களின் வாகன பேரணியுடன் அம்புலன்ஸ் வண்டி வருகிறது.
இவர்கள் படுக்கை நோயாளிகளா? ஆனால் பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளில் அம்புலன்ஸ் இல்லை. இவ்வாறான செயற்பாடுகளின் போது மக்கள் எவ்வாறு திருப்தியுடன் வரி செலுத்துவார்கள்.
அரசியல்வாதிகள் சுகபோகமாக வாழ்வதற்காகவே வரி அறவிடப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோக பூர்வ இல்லத்தில் வாழ முடியும்.
நாமல் ராஜபக்ஷ அரச இல்லத்தில் வாழ்கிறார்.அவரது தந்தை,சித்தப்பா உட்பட குடும்பமும் அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.வெட்கமில்லையா ? நாமலுக்கு எவ்வாறு அரச இல்லம் வழங்க முடியும்.முடிந்தால் பாராளுமன்றத்தில் குறிப்பிடுங்கள்.
கப்பலில் களியாட்டம் நடத்தியது தற்போது பேசுபொருளாக உள்ளது. பகலில் 20 மீற்றர் தூரம் கூட தெரியாதவர்கள் துறைமுகத்தை பார்வையிட சென்றார்களாம். அதுவும் இரவில் யாரை ஏமாற்றுகின்றீர்கள். நாட்டு மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் வகையில் வரியை அதிகரித்து விட்டு அரச நிதியை மோசடி செய்கின்றீர்கள்.
2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் செலவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு நேர்ந்தது என்ன,ஏன் மேலதிகமாக 2000 இலட்சம் ரூபா குறை நிரப்பு பிரேரணை ஊடாக கோரப்படுகிறது என்பதை பாராளுமன்றத்துக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இந்த கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளிப்பார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM