சர்வதேச கிரிக்கெட் பேரவையிடமிருந்து விரைவில் மகிழ்ச்சிகரமான செய்தி - ஹரீன் நம்பிக்கை

12 Jan, 2024 | 06:45 AM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை மீது சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) விதித்துள்ள தற்காலிகத் தடை விரைவில் நீக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நம்பிக்கை வெளியிட்டார்.

ஐசிசியின் வருடாந்தப் பொதுக் கூட்டம் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் ஐசிசியுடன் நடத்தவுள்ள மற்றொரு சுற்று பேச்சுவார்த்தையுடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை மீதான ஐசிசியின் தற்காலிகத் தடை நீக்கப்படும் என நம்புவதாக சுற்றுலாத்துறை அமைச்சில் வியாழக்கிழமை (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்த ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃவ் அலாடைஸுடனான பயனுள்ள கலந்துரையாடலை அடுத்தே அமைச்சர் இந்த நம்பிக்கையை வெளியிட்டார்.

இலங்கைக்கு வருகை தந்த அலாடைஸ்,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஐசிசி பிரதிநிதிகள் திருப்தி அடைந்துள்ளதாகவும், அவர்கள் புறப்படுவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான தற்காலிக உறுப்புரிமை தடையை நீக்குவதற்கான பச்சைக்கொடியை காட்டியதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறினார்.

இலங்கை விளையாட்டுத்துறை யாப்பு விதிகள் குறித்து ஐசிசி பிரதிநிதிகள் அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், ஐசிசியின் தார்மீக கோட்பாடுகளுக்கு ஏற்ப ஒழுங்குமுறைகளில் திருத்தம் செய்யுமாறு அவர்கள் கோரியதாகவும் தெரிவித்தார்.

தற்போதைய விளையாட்டுத்துறை யாப்பு விதிகளை திருத்தி அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களும் புதிய திருத்தத்தின் கீழ் மாற்றப்படும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

வீரர்களின் நலன்களில் அதிக கவனம் செலுத்தும் அதேவேளை, தற்போதைய முக்கிய தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாகம், பயிற்சி கட்டமைப்பு ஆகியவை மறுசீரமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தினார்.

ஐசிசியின் வருடாந்த மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ள நிலையில், ஐசிசியினால் ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டமை சுற்றுலாத்துறைக்கு பாரிய இழப்பாகும் என அமைச்சர் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான தற்காலிக உறுப்புரிமை தடை பெப்ரவரி மாதத்திற்குள் நீக்கப்பட்டால் ஐசிசி வருடாந்த மாநாடு கொழும்பில் நடைபெற வாய்ப்பிருப்பதாக கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரம் தெரிவித்தது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிருவாகத்தில்  அரசியல் தலையீடு இடம்பெற்றதாகத் தெரிவித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்தியதாக ஐசிசி கடந்த வருடம் நவம்பர் 21ஆம் திகதி அறிவித்திருந்தது.

ஐ பி எல் போட்டிகள் சிலவற்றை இலங்கையில் நடத்த கோரிக்கை

இந்த வருடம் நடைபெறவுள்ள இண்டியன் பிறீமியர் லீக் (IPL) போட்டிகள் சிலவற்றை இலங்கையில் நடத்துமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய் ஷாவிடம் சம்பிரதாயபூர்வமாக கோரிக்கை விடுத்ததாக அமைச்சர் கூறினார்.

இந்தியாவில் லோக் சபா தேர்தல் நடைபெறவுள்ள அதே காலப் பகுதியில் ஐபிஎல் போட்டிகள் சிலவும் இடம்பெறவுள்ளன.

'இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் செயலாளர் ஜெய் ஷாவை திடீரென சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போது சாத்தியமான இராஜதந்திர கரிசணைகள் குறித்து கலந்துரையாடினேன். அதேவேளை, அடுத்த ஐபிஎல் அத்தியாயத்தில் 3 போட்டிகளை இலங்கையின் நடத்தும் யோசனையை முன்வைத்தேன். அதற்கு  நியாயமான பதில் எனக்கு கிடைத்தது. இலங்கைளில் 3 போட்டிகளை நடத்த கிடைத்தால் அது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாக அமையும்' என அமைச்சர் குறிப்பிட்டார்.

ஐபிஎல் நடைபெறும் காலப்பகுதியில் தென் இந்தியாவில் தேர்தல் நடைபெறவிருப்பதால் மத்தல நகரை ஐபிஎல் வலயமாக்கி சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கு ஒரு சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என இலங்கை கருதுகிறது எனவும் அவர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08